அதனா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதனா மாகாணம், ( துருக்கியம்: Adana ili ) என்பது தென்-மத்திய அனத்தோலியாவில் அமைந்துள்ள துருக்கி மாகாணமாகும் . இந்த மாகாணமானது 2.20 மில்லியன் மக்கள்தொகை கொண்டது. இது துருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆறாவது மாகாணமாகும் . மாகாணத்தின் நிர்வாக நகரமாக அதனா நகரம் உள்ளது. மாகாண மக்கள் தொகையில் இந்த நகரில் வசிப்பவர்கள் 79% ஆவர். புவியியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்த மாகாணமானது மெர்கின், ஒஸ்மானியே மற்றும் கத்தே மாகாணங்களுடன் சுகுரோவா பிராந்தியத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

நிலவியல்[தொகு]

மாகாணத்தின் தெற்கு பகுதி சமவெளியாகவும், வடக்கு பகுதி மலைகளாகவும் உள்ளது. இதற்கு அருகில் உள்ள மாகாணங்களாக மேற்கில் மெர்சின் மாகாணமும், தென்கிழக்கில் கத்தே மாகாணமும், கிழக்கே உஸ்மானியே மாகாணமும், வடகிழக்கில் கஹ்ரமன்மாரா மாகாணத்தையும், வடக்கே கெய்சேரி மாகாணத்தையும், மற்றும் வடமேற்கில் நீட் மாகாணத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

நிர்வாகம்[தொகு]

அதானா மாகாணத்தின் நிர்வாகத்தில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் என இரண்டு நிலை அரசாங்கங்கள் ஈடுபட்டுள்ளன. அதானா கவர்னர்ஷிப் என்பது மத்திய அரசின் மாகாண கிளையாகவும், அதானா மாகாண சிறப்பு நிர்வாகம் என்பது மாகாண நிர்வாகக் குழுவாகும். மாகாணம் 15 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மாவட்டமும் நகராட்சிகள் மற்றும் கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகள் மேலும் சுற்றுப் பகுதிகளாக ( துருக்கியம்: Mahalle ) பிரிக்கப்பட்டுள்ளன.

அதனா ஆளுநர்[தொகு]

அதனா கவர்னர்ஷிப் மூலம் மாகாண நிர்வாகத்தில் அங்காராவில் உள்ள மத்திய அரசுக்கு பெரும்பான்மை அதிகாரம் உள்ளது. அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மாகாண மற்றும் பிராந்திய இயக்குநரகங்களின் செயல்பாட்டை ஆளுநர் மேற்பார்வை செய்கிறார். மாகாண இயக்குநரகங்கள் அதானா மாகாணத்தை மட்டுமே உள்ளடக்குகின்றன. பிராந்திய இயக்குநரகங்கள் சுகுரோவா மற்றும் சில சந்தர்ப்பங்களில் கூடுதல் மாகாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். மத்திய அரசின் மாகாண மற்றும் பிராந்திய இயக்குநரகங்கள் இதில் அடங்கும் ஆனால் அவை மட்டுமல்ல;

  • மாகாண இயக்குநரகங்கள் : கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனவியல், சமூக சேவைகள், விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், காவல்துறை சேவைகள், பாதுகாப்பு, மக்கள் தொகை மற்றும் குடியுரிமை, வேலைவாய்ப்பு நிறுவனம், சமூக பாதுகாப்பு நிறுவனம்
  • பிராந்திய இயக்குநரகங்கள் : துருக்கிய மாநில ரயில்வே, புள்ளிவிவர நிறுவனம், அடித்தளங்கள், வானிலை ஆய்வு

துருக்கியில் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் படைத்த ஒரே அவையான கிராண்ட் நேஷனல் அசெம்பிளி (டிபிஎம்எம்) என்னும் அவையில் அதானா மாகாணம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கடைசியாக டிபிஎம்எம் தேர்தல் ஜூன் 7, 2015 அன்று நடைபெற்றது, அதானா மாகாணத்தில், பழமைவாத ஏ.கே.பி 5 இடங்களையும், சமூக மக்களாட்சி கெமலிஸ்ட் சி.எச்.பி 4 இடங்களையும், தேசியவாத எம்.எச்.பி 3 இடங்களையும், ஜனநாயக சோசலிச எச்.டி.பி 2 இடங்களையும் பிடித்தது.

மாகாண சிறப்பு நிர்வாகம்[தொகு]

அதானா மாகாண சிறப்பு நிர்வாகம் ( துருக்கியம்: Adana İl Özel İdaresi ) என்பது மூன்று உறுப்புகளைக் கொண்ட அரை ஜனநாயக மாகாண நிர்வாகக் குழு ஆகும்; மாகாண பாராளுமன்றம், ஆளுநர் மற்றும் என்கேமன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியவற்றைக் கொண்டது. மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார், மேலும் என்கேமனின் 8 உறுப்பினர்களில் 4 பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள்.

மாகாண சிறப்பு நிர்வாகம் ஒரு அதிகார எல்லை அல்ல, மேலும் 2010 ஆம் ஆண்டிற்கான 55 மில்லியன் டி.எல் பட்ஜெட்டுடன் இயங்கும் மாகாண நிர்வாகத்தில் இது சிறிய நிர்வாக அதிகாரம் கொண்டது. சிறப்பு நிர்வாகத்தின் முக்கிய நிர்வாக கடமைகள்; பள்ளிகளின் கட்டிடம் மற்றும் பராமரிப்பு, குடியிருப்புகள் மற்றும் தினப்பராமரிப்பு, பிற அரசு கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு, சாலைகள், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், இயற்கை பாதுகாப்பு, சமூக சேவைகள் மற்றும் பிராந்திய திட்டமிடல் போன்றவை ஆகும்.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதனா_மாகாணம்&oldid=2868109" இருந்து மீள்விக்கப்பட்டது