அணுக்கரு தொடர்வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகழக்கூடிய தொடர் அணுக்கரு பிளப்பு வினை (தொடர் அணுப்பிளவை) விளக்கப்பட்டுள்லது: 1. யுரேனியம்-235 அணு ஒரு நொதுமியை (நியூட்ரானை) உள்பற்றுகிறது, அதன் விளைவால் அதன் அணுக்கரு இரு வேறு அணுக்கருக்களாக பிளவு படுகின்றது. இந்த வினையின் விளைவாய் மூன்று புது நொதுகின்களை வெளிவிடுகின்றது. அதே நேரத்தில் பெருமளவு பிணைப்பு ஆற்றலையும் வெளிவிடுகின்றது.
2. வெளிவிட்ட நொதுமிகளில் ஒன்றை யுரேனியம்-238 அணு பற்றிக்கொள்கின்றது, ஆனால் அவ்வணு அணுக்கரு பிளவு கொள்வதில்லை. ஆனால் பிரிதொரு நொதுமியும் பற்றப்படாமல் செல்லுகின்றது. மூன்றாவது நொதுமி யுரேனியம்-235 அணுவுடன் மோதி அணுக்கரு பிளவு உண்டாக்குகின்றது. இதன் விளைவாய் இரண்டு நொதுமிகள் வெளிவிடுகின்றது. மேலும் அதிகமான பிணைப்பு ஆற்றலை வெளிவிடுகின்றது.
இப்பொழுது வெளி வந்த இரண்டு நொதுமிகளும் யுரேனியம்-235 அணுக்களுடன் மோதி மேலும் அணுப்பிளவு உண்டாக்குவதும், நொதுமிகளை வெளிவிடுவதுமாக தொடர்வினை நிகழ்கின்றது

அணுக்கரு தொடர்வினை (Nuclear chain reaction) என்பது அணுக்கருவில் நிகழும் ஓர் அணு வினையின் விளைவாய், சராசரியாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலாகவோ வேறு ஓர் அணுக்கருவில் அத்தகு வினை உண்டாக்கி மேலும் தொடருமானால், தன்னியக்கமாக அணுக்கரு வினை தொடர்ந்து செல்வதாகும். அணு வினை என்பது அணு நிறை மிகுந்த ஓரிடத்தான் அணுக்கரு பிளப்பாகவோ (எ.கா: 235U ) அல்லது அணு நிறை குறைந்த ஓரிடத்தான் அணுக்கரு புணர்ப்பாகவோ (சேர்வதாகவோ) (2H and 3H ) இருக்கலாம். இந்த அணுக்கரு வினை நிகழும் பொழுது வெளியிடப்படும் ஆற்றலின் அளவு சராசரியாக நிகழும் வேதியியல் வினையில் வெளிப்படுவதைவிட பல மில்லியன மடங்கு அதிகமானதாகும்.

வரலாறு[தொகு]

தொடர் நிகழ்வாக அணுக்கரு வினைகள் நிகழ்வதைப் பற்றி கருத்தளவில் 1933இல் முதன் முதல் லியோ சிலார்டு (Leó Szilárd) முன்வைத்தார். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் புதிய படைப்புக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்தார் [1]

1936 இல் பெரிலியம் மற்றும் இண்டியம் ஆகிய தனிமங்களைக் கொண்டு சிலார்டு அணுக்கரு தொடர்வினை உருவாக்க முயன்றார் ஆனால் வெற்றி பெறவில்லை. 1939 இல் சிலார்டும் என்ரிக்கோ பெர்மியும் (Enrico Fermi) யுரேனியம் அணுவினைகளில் நொதுமிகள் பெருகிக் கூடுவதைக் கண்டுபிடித்தனர்.

முதன் முதலாக என்ரிக்கோ பெர்மி டிசம்பர் 2 1942இல் சிக்காகோ பல்கலைகழகத்தில் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை உருவாக்கினார். இதன் பெயர் சிக்காகோ அடுக்கு -1 (Chicago Pile-1, CP-1) என்பதாகும். இது நிகழ்ந்த இடம் ஆர்தர் காம்ப்டன் அவர்களின் மாழையியல் ஆய்வகம் ஆகும். இது மான்ஹாட்டன் திட்டம் என்று பிற்காலத்தில் அனுகுண்டு வரலாற்றில் புகழ்பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

1956 இல் அர்க்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் குரோடா (Paul Kuroda) என்பவர் அணுக்கரு தொடர் வினைகள் இயற்கையாகவே நிகழக்கூடியவை என்னும் கருத்தை முன் வைத்தார். ஏனெனில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களே தேவை என்பதால். பின்னர் குரோடா கூறியவாறே 1972 இல் நடு ஆப்பிரிக்காவில் காபோன் என்னும் நாட்டில் ஓக்லோ என்னும் இடத்தில் இயற்கை அணு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன [2].

அணுப் பிளவு வினைகள்[தொகு]

பிளவு படக்கூடிய ஓரிடத்தான்களும் (யுரேனியம்-235 235U போன்றவை) நொதுமிகளும் (நியூட்ரான்களும்) நெருங்கி வினைப்படும்பொழுது தொடர்வினையாக அணுக்கரு வினைகள் நிகழ்கின்றன. இவ்வினைகள் நிகழவேண்டுமாயின், நொதுமிகள் வெளியிடப்படுவதும், சில நொதுமிகள் பிளவுறும் அணுப்பகுதிகளோடு சேர்வதும் நிகழ்வது தேவையாகும். (வளரும்)

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. esp@cenet document view
  2. "Oklo: Natural Nuclear Reactors - Fact Sheet". Archived from the original on 2006-03-16. பார்க்கப்பட்ட நாள் 2008-03-04.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_தொடர்வினை&oldid=3540866" இலிருந்து மீள்விக்கப்பட்டது