அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Adyar Library and Research Centre) 1886-ஆம் ஆண்டில் பிரம்மஞானியான என்றி சிடீல் ஓல்காட் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த நூலகம் சென்னைக்கு அருகிலுள்ள அடையாறு பகுதியில் உள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் அமைந்துள்ளது.[1]

வரலாறு[தொகு]

ஹென்றி ஸ்டீல் ஓல்காட் டிசம்பர் 1886-ஆம் நாளன்று "நூலக ஓல்காட்" என்பதை நிறுவினார். ஓல்காட்டின் சிறிய தனியார் சேகரிப்புகளில். 24 மொழிகளில் அமைந்த தோராயமாக 200 நூல்கள் நூலகத்தின் மையமாக இருந்தன. ஆசியாவில் தனது பயணத்தின்போது, ஓல்காட் நூலகத்திற்காக அதிகமான நூல்களைப் பெற்றார். அவற்றில் பெரும்பாலான நூல்கள் அரிய நூல்கள் ஆகும். 1907-இல் ஓல்காட் இறந்த பிறகு, நூலகம் மற்ற தத்துவவாதிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டது. தற்போது இந்த நூலகத்தில் தோராயமாக 250,000 நூல்கள் மற்றும் 20,000 பனை ஓலைகள் உள்ளன. இந்த நூலகம் தற்போது உலகின் மிக முக்கியமான ஓரியண்டலிஸ்ட் நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நூலகம் முதலில் பிரம்மஞான சபையின் தலைமைச் செயலகத்திற்குள் அமைந்திருந்தது. 1966-ஆம் ஆண்டில் இஃது ஒரு தனி கட்டடமான அடையாறு நூலகக் கட்டடம் என்ற கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. பழைய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பொது அருங்காட்சியகமும் இதில் உள்ளன. அடையாறு நூலகம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதம் மற்றும் இந்தியவியல் ஆகிய துறையில் முதுகலை பயின்று வருகின்ற மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1990-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கொடையாளரான எலிஸ்டன் காம்ப்பெல் (1891 - 1990) அடையாறு நூலகத்திற்கு மேலும் நிதி அளித்தார். மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் காம்ப்பெல் பிரம்மஞான ஆய்வு நூலகத்தை நிறுவினார்.[2]

சிகாகோ பல்கலைக்கழகம் அடையாறு நூலகத்தில் உள்ள பழைய படைப்புகளை நவீன நுட்பங்களைக் கொண்டு பாதுகாக்க முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.[3]

சிறப்பு[தொகு]

அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம் அதன் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளைச் செய்து வருகிறது. உலகில் காணப்படுகின்ற ஓரியண்டல் நூலகங்களில் இந்த நூலகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிழக்கத்திய நாகரிகம், தத்துவம், சமயம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல நூல்களையும் வெளியிட்டு வருகிறது. இங்கு 2,50,000 அச்சிட்ட தொகுப்புகளும் 20,000 பனை ஓலைச் சுவடிகளும் உள்ளன. இவை இந்தியா, இலங்கை, சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன. இவற்றுள் சில நூல்களும் சுவடிகளும் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அச்சிடப்பட்ட நூல்களில் அரிய வகையிலான இந்தியவியல் துறையில் உள்ள நூல்களும் அடங்கும். சமயங்கள், தத்துவங்கள், பண்பாடுகள் ஆகியவற்றினைக் கொண்டு அமைந்த மிகவும் சிறப்பான தொகுப்புகளும் இங்குக் காணப்படுகின்றன. சீனாவின் திரிபிடகங்கள், திபெத் நாட்டின் கஞ்சுர் மற்றும் தஞ்சுர், இலத்தீனில் அரிய நூல்களின் தொகுப்புகள், பிற மொழிகளிலும் அரிய நூல் தொகுப்புகள், மிகவும் முக்கிய ஆய்வு நூல்களின் முக்கியமான தொகுப்புகள் இங்கு உள்ளன. இவை அனைத்தும் இந்நூலகத்தின் மதிப்புமிக்க சொத்தாக உள்ளன. இந்த நூலகம் தற்போது பல நாடுகளிலிருந்து தோராயமாக 225 இதழ்களைப் பெற்று வருகிறது. அரிய, இதுவரை பதிப்பிக்கப்படாத பல நூல்கள் தற்போது இங்கு அச்சு வடிவம் பெற்றுள்ளன. அதிக எண்ணிக்கையிலான பண்டிதர்களும், ஆய்வாளர்களும் இந்தப் பணியினை மேற்கொண்டு வருகின்றார்கள்.[4]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]