அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் (நூல்)
வகை:கட்டுரை
துறை:வாழ்க்கை வரலாறு
காலம்:21ஆம் நூற்றாண்டின்
இரண்டாம் பத்தாண்டுகள்
இடம்:சோலையார்பேட்டை
மொழி:தமிழ்
பக்கங்கள்:116
பதிப்பகர்:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்
11 கே.கே. தங்கவேல் தெரு
பெரியார் நகர்
சோலையார்பேட்டை 635 851
பதிப்பு:முதல் பதிப்பு: ஜனவரி 2014

அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… என்னும் நூல் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ. ஞா. பேரறிவாளனுக்கு தாயாரான அற்புதம் அம்மையாரைப் பேட்டி கண்டு அனுசிரீ என்னும் இதழாளர் மலையாளத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். ஓவியரும் எழுத்தாளரும் கவிஞருமான யூமா. வாசுகி இந்நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர் குறிப்பு மனசாட்சி என்ற ஒன்றை நோக்கி.. என்னும் தலைப்பிலும் .[1] சென்னை நூலாசிரியர் அனுசிரீயின் முன்னுரை இந்தத் தாயின் வார்த்தைகளைக் கேளுங்கள்… என்னும் தலைப்பிலும்[2] நூலின் முன்பகுதியில் உள்ளன. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் அனுசீரியும் ‘ஓபன்’ (Open) என்னும் இதழின் உதவியாசிரியர் சர்சினாவும் வேலூர் சிறையில் சந்தித்ததைப் பற்றிய கட்டுரை வித்தியாசமான சந்திப்பு... என்னும் தலைப்பிலும் [3] இராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் மலையாள இதழான மாத்யமம் வார இதழுக்கு வழங்கிய பேட்டி நீதிபதிகள் கடவுள்கள் அல்ல... என்னும் தலைப்பிலும்[4], பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சி.பி.ஐ.யின் முன்னாள் அதிகாரி தியாகராசன் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி பேரறிவாளன் ஒரு நிரபராதி! என்னும் தலைப்பிலும் [5]இந்நூலில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

உள்ளடக்கம்[தொகு]

அற்புதம் அம்மாள் பிறந்தது முதல் தற்பொழுது வரையிலான அவருடைய வாழ்க்கையை அவருடைய கூற்றாக பின்வரும் பதினெட்டுக் கட்டுரைகளே இந்நூலின் உள்ளடக்கம் ஆகும்.

மண்வாசனையுள்ள குழந்தைப் பருவம்[தொகு]

வேலூரில் வாழ்ந்த திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தினருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் அற்புதம். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். சோலையார்பேட்டையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரும் கவிஞரும் திராவிடர் கழகத்தவருமான குயில்தாசன் என்னும் ஞானசேகரனை மணந்தார்.

நானும் பெரியார் பெண்ணாகிறேன்[தொகு]

தர்மபுரியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியாரை அற்புதம் பார்த்தார். பின்னர் படிப்படியாக திராவிடர் கழகத்தவராக மாறினார். அவர்தம் மூத்தமகளுக்கு அன்புமணி என பெரியார் பெயரிட்டார். திராவிடர் கழக மாநாட்டில் தன் தாலியைக் கழற்றினார்.

மூன்று நட்சத்திரங்கள்[தொகு]

ஞானசேகரன் – அற்புதம் இணையர்களுக்கு அன்புமணி, பேரறிவாளன், அருள்செல்வி என மூன்று பிள்ளைகள். அம்மூவரைப் பற்றியும் அவர்கள் திராவிடர் கழகச் சிந்தனையோடு வளர்க்கப்பட்டது பற்றியும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

நள்ளிரவில் வந்த பெருந்துன்பம்[தொகு]

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் படித்து பட்டயம் பெற்று, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தங்கி பொறியியல் இளவர் பட்ட வகுப்பில் சேர ஆயத்தமாகிக்கொண்டு இருந்த பேரறிவாளனைத் தேடி, 1991 சூன் 10 ஆம் நாள் நள்ளிரவில் சோலையார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சி.பி.ஐ. காவலர்கள் வந்ததும் மறுநாள் பேரறிவாளன் பெரியார் திடலில் தன் பெற்றோர் முன்னிலையில் கைது செய்யப்பட்டதும் இப்பகுதியில் பதியப்பட்டு உள்ளன.

ரத்தவாடை வீசும் மல்லிகை[தொகு]

1991 சூன் 12ஆம் நாள், பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம் அம்மாள் சி.பி.ஐ. விசாரணை அலுவலகமான மல்லிகைக்குச் சென்று, அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிய செய்தி இப்பகுதியில் பதியப்பட்டு உள்ளது.

சித்திரவதை ஒரு தொடர்கதை[தொகு]

1991 சூன் 19ஆம் நாள் உயர்நீதி மன்ற வளாகத்தில் பேரறிவாளனைச் சந்திக்க முயன்று இயலாது போனதையும் கைது செய்து 30 நாள்களுக்குப் பின்னர் மல்லிகையில் இரண்டு முறை சந்தித்ததையும் இப்பகுதியில் பதிந்துள்ளார்.

மீண்டும் சந்திப்பு[தொகு]

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் செங்கற்பட்டில் உள்ள சிறையில் பேரறிவாளனைச் சந்தித்த நிகழ்ச்சி இப்பகுதியில் விளக்கப்பட்டு உள்ளது.

அன்பின் திருமணம்[தொகு]

பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டதால் முடிவுசெய்யப்படாமல் இருந்த அவர் அக்கா அன்புமணியின் திருமணம் ராஜா என்பவருடன் நிகழ்ந்த செய்தி இப்பகுதியில் கூறப்பட்டு உள்ளது.

வாழ்க்கையென்ற போராட்டம்[தொகு]

பேரறிவாளன் அவர் தந்தை, அவர் தாத்தா என மூன்று தலைமுறையாக திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவும் செயற்பாட்டாளர்களாவும் இருந்ததையும் பேரறிவாளனைக் கைது செய்த பின்னர் அக்கழகம் அக்குடும்பத்தைக் கைவிட்டதையும் அதனால் யாருடைய ஆதரவுமற்று அற்புதம் அம்மாள் தனியாளப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டதையும் இப்பகுதியில் விவரிக்கிறார்.

வர்ணமய உலகம் இல்லாது போகிறது[தொகு]

பூந்தமல்லி சிறையில் இருந்து பேரறிவாளனும் பிறரும் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டதை அறிந்து அங்கு சென்று அற்புதம் அம்மாள் அவரைப் பார்த்ததையும் அவ்வாறு சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களுக்குள் நடைபெறும் உரையடால்களையும் இப்பகுதி எடுத்துரைத்திருக்கிறது.

நிலவறை உலகத்தின் ஒரு ஏடு[தொகு]

அற்புதம் அம்மாள் சிறைச்சாலையில் பேரறிவாளனைச் சந்திக்கச் செல்லும்பொழுதும் வழக்கோடு தொடர்புடைய கியூபிராஞ்ச், விஜிலன்ஸ், இன்டலிஜன்ஸ் அலுவலங்களுக்குச் செல்லும்பொழுது சோதனை என்ற பெயரில் இழைக்கப்பட்ட அவமானங்களை அற்புதத்தம்மாள் இப்பகுதியில் பதிந்திருக்கிறார். மேலும் பூந்தமல்லி, சேலம், வேலூர் சிறைச்சாலைகளில் கண்ணாடிச்சுவருக்கு அப்பால் இருக்கும் மகனை அச்சுவரில் இருக்கும் துளையின் வழியாக விரலைவிட்டுத் தொடுவதற்காக நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகளை தொடுத்தது தொடங்கி, வேலூர் சிறையில் மகனுக்கு எதிரே அமர்ந்து பேசுவதற்கு அனுமதி பெற்றது வரை அம்மையார் பட்டபாடுகள் இப்பகுதியில் விவரிக்கப்பட்டு உள்ளன.

வீணாகிய காத்திருப்பு[தொகு]

1998 சனவரி 28ஆம் நாள் பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் இராசீவ் காந்தி கொலைவழக்கில் தீர்ப்பு காலையில் இருந்து பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்குத் தூக்கு என்னும் தீர்ப்பு வழங்கப்பட்டது வரை அவர் குடும்பத்தினர் கொண்டிருந்த மனநிலையும் பழ. நெடுமாறன் தலைமையில் 26 தமிழர் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழு அமைக்கப்பட்ட தகவலும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

என் மகன் இல்லாமல் வீட்டில் இன்னொரு திருமணம்[தொகு]

பேரறிவாளின் விடுதலைக்கு பின்னரே தனக்கு திருமணம் என பிடிவாதம் செய்துகொண்டிருந்த அவர் தங்கை அருள்செல்வியை தனசேகரன் என்பவரை மணக்கச்செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் திருமண நிகழ்வும் இப்பகுதியில் விளக்கப்பட்டு உள்ளன.

உச்சநீதிமன்றம் கைவிடுகிறது[தொகு]

1999 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் வழக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 19 பேருக்கு விடுதலையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டதும், அத்தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதையும் இப்பகுதி விளக்குகிறது.

நீதியற்ற காத்திருப்பு[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கருணைமனு அனுப்பிவிட்டு முடிவிற்காக தூக்குத்தண்டனைக் கைதிகள் நால்வரும் காத்திருக்கும் செய்தியும் கருணை மனுவில் பேரறிவாளன் எடுத்துரைத்த கூற்றுகளின் சுருக்கமும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டு உள்ளன.

வழியோர இரவுகள்[தொகு]

தன் மகனின் விடுதலையைக் கோரி அற்புதம் அம்மாள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பயணித்தால் பட்ட துயரங்களையும் சிறையில் இருந்தவாறே பேரறிவாளன் படித்து கணினிப்பயன்பாட்டில் முதுவர் பட்டம் பெற்றதும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டு உள்ளன.

தூக்குமர நிழலில்[தொகு]

பேரறிவாளன் எழுதிய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்… (இராசீவ் கொலை – உண்மை பேசுகிறது) என்னும் நூலின் இந்தி மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவிற்கு 2011ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தில்லிக்கு அற்புதம் அம்மாள் சென்றதும் பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணைமனுகளும் அன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டதை விழாமேடையில் அறிந்ததும் இப்பகுதியில் பதியப்பட்டு உள்ளன.

தியாகத்தின் முன்னிலையில் தேம்பலுடன்[தொகு]

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் பேரறிவாளனின் உடலை வாங்கிக்கொள்ளும்படி கோரும் கடிதம் வேலூர் சிறையில் இருந்து வந்தது முதல் செங்கொடியின் மரணம் வரையிலான நிகழ்வுகளும் அற்புதம் அம்மாளின் நன்றி அறிவிப்பும் இங்கு பதியப்பட்டு உள்ளன.

திறனாய்வு[தொகு]

இந்நூலைப்பற்றி வலைப்பூ பதிவர்களும் முகநூல் எழுத்தாளர்களும் இதழ்களும் தங்களது திறனாய்வை வெளியிட்டு இருக்கின்றன. அவற்றுள் சில:

  • மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப்பாட்டு இது. பேரறிவாளன் அம்மா, தன் மகன் 1991 ஜூன் மாதம் 10-ம் தேதி பிடிபட்டுப்போனது முதல் இன்று வரையிலான கொடுங்கனவான நீதிப் போராட்டத்தை விவரிக்கும் புத்தகமே இது. - புத்தகன், ஜூனியர் விகடன். .[6]

சான்றடைவு[தொகு]

  1. அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 5-8
  2. அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 9-10
  3. அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 91-99
  4. அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 100-109
  5. அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 110-114
  6. புத்தகன், ஜூ.வி.நூலகம் பகுதி, ஜூனியர் விகடன் 4.5.14, பக்.22