அடைகாக்கும் பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நவீன குஞ்சு பொரிப்புக் கருவி

அடைகாக்கும் பெட்டி அல்லது குஞ்சு பொரிப்புக் கருவி என்பது முட்டைகளை செயற்கையாக குஞ்சுபொறிக்கும் கருவி ஆகும். கோழி, வாத்து போன்றவை முட்டையிட்டு அதன்மீது அமர்ந்து வெப்பமூட்டி குஞ்சு பொரிக்கின்றன. இது இயற்கையான குஞ்சு பொறிக்கும் முறையாகும். இக்கால அறிவியல் வளர்ச்சியின் பயனாக செயற்கை முறை குஞ்சு பொறிப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கருவியே 'அடைகாக்கும் கருவி' (இங்குபேட்டர்) என்பதாகும். இக்கருவி மூலம் கோழி, வாத்து, வான்கோழி, கிண்ணிக்கோழி, ஜப்பானியக் காடை ஆகியவற்றின் முட்டைகளிலிருந்து குஞ்சு பொறிக்கச் செய்யப்படுகிறது.

சாதாரணமாக ஒரு கோழியால் பன்னிரண்டு முட்டைகள் வரை அடைகாத்து வெப்பமூட்டிக் குஞ்சு பொறிக்க இயலும். ஆனால் அடை காக்கும் கருவி மூலம் நூற்றுக்கணக்கான முட்டைகளுக்கு வெப்பமூட்டிக் குஞ்சு பொறிக்கச் செய்ய முடியும். ஒரு கோழி 21 நாட்கள் அடைகாத்த பின்னரே முட்டையிலிருந்து குஞ்சு வரும், அடைகாக்கும் கருவியிலும் 21 நாட்களுக்குப் பிறகே குஞ்சுகள் வெளிப்படும். காரணம் அடைகாக்கும்போது கோழி எந்த அளவு வெப்பத்தை முட்டைகளுக்கு ஊட்டுகிறதோ அதே அளவு வெப்பத்தையே அடைகாக்கும் கருவி முட்டைகளுக்குச் செயற்கை முறையில் கொடுக்கின்றன.

அடைகாக்கும் கருவியில் பல அடுக்குத் தட்டுகள் உள்ளன. அவற்றின் முட்டைகளைப் பரப்பி கண்ணாடிக் கதவுகளால் மூடி விடுவர். போதிய வெளிச்சம் கண்ணாடிக் கதவுகள் மூலம் உட்செல்லும். இதில் இணைக்கப்பட்டுள்ள மின்கருவி முட்டை அடைகாக்க எவ்வளவு வெப்பம் தேவையோ அந்த அளவு வெப்பத்தை உட்செலுத்தும். இந்த வெப்ப நிலை 38.50 என்று கணக்கிட்டுள்ளார்கள். கையால் முட்டைகள் அவ்வப்போது திருப்பி வைக்கப்படும். போதிய அளவு காற்றோட்டமும் ஈரப்பதமும் உள்ளே இருக்குமாறு கவனித்துக் கொள்வார்கள். சரியாக 21 நாட்களுக்குப் பின்னர் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்.

ஒரே சமயத்தில் எண்ணற்ற முட்டைகளை அடைகாத்து குஞ்சுகள் பொறிப்பதற்கு அடை காக்கும் பெட்டி உதவுகிறது.[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைகாக்கும்_பெட்டி&oldid=3049559" இலிருந்து மீள்விக்கப்பட்டது