அடுத்தத் தலைமுறை பிணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடுத்தத் தலைமுறை பிணையம் (next-generation network, NGN) எனப்படுவது தொலைத்தொடர்பின் பிணையத்தின் கருவிலும் பயனர் அணுக்கத்திற்கான பிணையத்திலும் பயன்படுத்தத் துவங்கியுள்ள முக்கிய வடிவமைப்பு மாற்றங்களாகும். என்ஜிஎன் என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் அறியப்படும் இந்தத் தொழில்நுட்பம் நடப்பில் உள்ள உள்ளூர் நிலைத்தத் தொலைபேசிகளையும் நகர்பேசிகளையும் ஒருங்கிணைத்து (நிலை-நகர்பேசிக் குவிகை கூட்டணி) பல்லூடக சேவைகளின் ஒருங்கிணைந்த மேலாண்மை மூலமாக வழங்கிட அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பிணையமாகும்.இதன்மூலம் பல்லூடக தரவுச் சேவைகளையும் பிற பயன்கூட்டு சேவைகளையும் கூட்ட இயலும். முதன்மை செயல்தளமாக இணைய நெறிமுறைத் தொழில்நுட்பம் அமைந்திருக்கும். குரல் (தொலைபேசி) இணைப்பகங்களுக்கு மென்னிணைப்பு மாற்றித் (softswitch) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சிஸ்கோ சிஸ்டம்ஸ் போன்ற முதன்மையான இணைய நெறிமுறை நிறுவனங்கள் இதனை முன்னிலைப்படுத்தி வருகின்றன.

தொலைதொடர்புப் பிணையம் துவக்கத்தில் தொலைபேசி சேவை வழங்கிட, மனிதக்குரல்களின் குணங்களுக்கேற்ப, அலைமருவி மின்சமிக்ஞைகளை சீராக கொண்டுசென்றிடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எண்ணிம முறையில் இச்செய்திகளை அனுப்பிடும் வண்ணம் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்களினால் குரல்சார் குறிப்பலைகள் மட்டுமன்றி தரவுகள், ஒளிதம் போன்ற பல்வகைப்பட்ட ஊடகக் குறிப்பலைகளும் அனுப்ப முடிந்தது.

இதற்கிடையே கணினிகளுக்கு இடையேயான தரவு சமிக்ஞைகள் இணைய நெறிமுறையில் பரிமாறப்பட்டன. இருப்பினும் இவற்றை வெகுதொலைவு செலுத்திட தொலைபேசிப் பிணையங்களில் இணைய நெறிமுறை சமிக்ஞைகளை பொதிந்து அனுப்ப வேண்டியிருந்தது. அடுத்தத் தலைமுறை பிணையத்தில் செலுத்து கூறுகளும் மாற்றிகளும் நேரடியாக இணைய நெறிமுறையில் இயங்குகின்றன. எனவே இவை சிலநேரங்களில் எல்லாமே இணைய நெறிமுறை பிணையம் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன்மூலம் தொலைபேசி இணைப்புக்கள் இணைக்கப்படும் இணைப்பகங்களின் வடிவமைப்பில் அடிப்படையான பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

எதிர்கால இணையம் என்பது வேறு கருதுகோளைக் கொண்டது; வருங்காலத்தில் இணையத் தொழில்நுட்பமே எவ்வாறு மாற உள்ளது என்பதை அது விவரிக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]