அடிமானப் புள்ளி
அடிமானப்புள்ளி (Basis Point) என்பது ஒரு சதவிகிதத்தில் நூற்றில் ஒரு பங்காகும். bp என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. ஒரு சதவிகிதப்புள்ளி = 0.01%. இந்த அளவை பெரும்பாலும் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. சதவிகிதத்தில் அளக்கப்படும் மற்ற கூறுகளின் மாற்றங்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. விகிதங்களின் மாற்றங்களை விகித முறையிலேயே குறித்தால் ஏற்படும் குழப்பத்தைப் போக்கவே இந்த அளவை பயன்படுத்தப்படுகிறது.[1][2]
(எ. கா) ஒரு வங்கியின் வட்டி விகிதம் 10% ஆக உள்ளது. இது 1% அதிகரித்துள்ளதென்று ஒரு அறிக்கை வெளியானால், அது 10 இல் 1% அதிகரிக்கிறதா (10% - 10.1%), அல்லது 10% இல் இருந்து 11% ஆக மாறுகிறதா என்று குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. விகிதம் என்பதே சார்பு அளவையாக (relative measure) உள்ளதால் இக்குழப்பம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சார்பு அளவையல்லாது தனித்துவ எண்ணிக்கை அளவை (absolute numerical measure) ஒன்றை பயன்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. வட்டி விகிதம் 100 சதவிகிதப் புள்ளிகள் உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டால் எளிதாக 10% + (100 X 0.01)% = 11% என்று பொருள் கொள்ள முடியும்.
அடிமானப்புள்ளி, நிதிச் சந்தைகளில் வட்டி ஈட்டும் பொருளியல் கருவிகளின் (financial instruments - கடன் பத்திரம், வைப்புப் பத்திரம், அடமானப் பத்திரம் போன்றவை) வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கப் பரவலாக பயன்படுத்தப் படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is a basis point (BPS)?". Investopedia. பார்க்கப்பட்ட நாள் 21 May 2010.
- ↑ "Basis point". reference.com. பார்க்கப்பட்ட நாள் April 4, 2010.