அடிப்பக்கம் (வடிவவியல்)
வடிவவியலில் அடிப்பக்கம் (base) என்பது ஒரு வடிவவியல் வடிவின் உயரத்தை அளக்கும் திசைக்கு செங்குத்தாகவுள்ள அவ்வடிவத்தின் பக்கத்தைக் குறிக்கும். அடிப்பக்கமானது, ஒரு பல்கோணத்திற்கு விளிம்பாகவும், ஒரு பன்முகிக்கு முகமாகவும் அமையும்.[1] அடிப்பக்கம் என்ற சொல்லானது முக்கோணங்கள், இணைகரங்கள், சரிவகங்கள், உருளைகள், கூம்புகள், பட்டைக்கூம்புகள், இணைகரத்திண்மங்கள், அடிக்கண்டங்கள் ஆகிய வடிவவியல் வடிவங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
பரப்பளவு, கனவளவு கணக்கிடலில்
[தொகு]வடிவவியல் வடிவங்களின் பரப்பளவுகளையும் கன அளவுகளையும் கணக்கிடும்போது அவ்வடிவங்களின் அடிப்பகுதியின் நீளம் அல்லது பரப்பளவு பயன்படுத்தப்படுகிறது.
இணைகரத்தின் பரப்பளவானது அதன் அடிப்பக்க நீளம், உயரம் இரண்டின் பெருக்கற்பலனாகும். ஒரு உருளயின் கனவளவு, அதன் அடிப்பக்கப் பரப்பளவு மற்றும் உயரத்தின் பெருக்கற்பலனாகும். சரிவகம், அடிக்கண்டம் போன்ற சில வடிவங்களில் இணையான இரு அடிப்பகுதிகள் இருக்கும். அவையிரண்டுமே கணக்கிடலில் பயன்படுத்தப்படும்.[2]
நீட்டிக்கப்பட்ட அடிப்பக்கங்கள்
[தொகு]ஒரு முக்கோணத்தின் நீட்டிக்கப்பட்ட அடிப்பக்கம்) என்பது அம்முக்கோணத்தின் அடிப்பக்கத்தை உள்ளடக்கிய ஒரு கோடாகும். விரிகோண முக்கோணங்களில் நீட்டிக்கப்பட்ட அடிப்பக்கங்கள் முக்கியமானவை. ஒரு விரிகோண முக்கோணத்தின் குறுங்கோண உச்சியிலிருந்து வரையப்படும் குத்துக்கோடானது அம்முகோணத்திற்கு வெளியே அமைந்து குறுங்கோண உச்சிக்கு எதிர்ப்பக்கத்தின் நீட்டிப்புக்கோட்டைச் சந்திக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, C.I.; Taylor, D.P. (1918). Plane Geometry. Scott, Foresman & Co. pp. 38, 315, 353.
- ↑ Jacobs, Harold R. (2003). Geometry: Seeing, Doing, Understanding (Third ed.). நியூயார்க்கு நகரம்: W. H. Freeman and Company. p. 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-4361-3.