அஞ்சல் பெட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |


அஞ்சல் பெட்டி (post box) என்பது பொது மக்கள் தமது அஞ்சல்களை வேறிடங்களுக்கு அனுப்புவதற்காகப் போடப்படும் பெட்டி ஆகும். இந்த அஞ்சல்களை நாட்டின் அஞ்சல் துறையினரின் முகவர்கள் நாளாந்தம் சேகரித்து வகைப்படுத்தி அந்தந்த முகவரிகளுக்கு அனுப்புவார்கள்.
வரலாறு[தொகு]
ஆரம்ப காலத்தில் அஞ்சல்களைப் போடுவதற்கு அஞ்சல்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. அஞ்சல்களைக் கொண்டு செல்பவர்களே அஞ்சல்களைப் பெற்றும் வந்தனர். 1653 இல் பாரிசில் Minister Fouqet என்ற அஞ்சல் அதிபரின் மனைவியின் யோசனையின் படிதான் முதல்முதல் அஞ்சல் பெட்டி அறிமுகமாகியது என்பர். 1829 இற்குள் பிரான்சில் அஞ்சல் பெட்டிகள் பல இடங்களிலும் நிறுவப்பட்டன.
சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அஞ்சல் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இலண்டன் மற்றும் இதர நகரங்களில் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய அஞ்சல் பெட்டிகளை வைக்க அந்தோணி ட்ரோலோபி (Anthony Trollope) என்ற பிரித்தானிய அஞ்சல் துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851 இல் பிரித்தானிய அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். இவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளது போல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் அஞ்சல் பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்கலாம் என முடிவாயிற்று. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான அஞ்சல்பெட்டிகள் பிரித்தானியா, செருமனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன. தபால் பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாகவே வடிவமைக்கப்பட்டன.
1852 இல் ஐக்கிய அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாநிலத்தில் நான்கு தூண் அஞ்சல்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855ல் குர்னெசி மாநிலத்தில் (Guernse) மூன்று அஞ்சல் பெட்டிகளும், இலண்டனில் ஆறு அஞ்சல் பெட்டிகளும் வைக்கப்பட்டன. இலண்டனில் வைக்கப்பட்ட அஞ்சல்பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. அஞ்சல் பெட்டிகளில் பிரித்தானிய அரசின் சின்னமும், அதற்குக் கீழ் பிரித்தானிய அஞ்சல் துறையான 'ரோயல் மெயில்' சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. அஞ்சல்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். அஞ்சல் பேருந்துகளிலும், அஞ்சல் தொடருந்துகளிலும் கூட அக்காலத்தில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் அஞ்சல் பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரித்தானிய அரசு அறிவுறுத்தியது. இது 'போஸ்ட் ஆபீஸ் ரெட் (Post Office Red) என ஒரு வர்ணப் பூச்சாகவே பிரபலமாயிற்று. பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.