அஞ்சலை அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலை அம்மாள்
Anjalai Ammal
பிறப்பு1 சூன் 1890
கடலூர்,
தென் ஆற்காடு மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு20 பெப்ரவரி 1961(1961-02-20) (அகவை 70)
சி. முட்லூர்,
தென் ஆற்காடு மாவட்டம்,
சென்னை மாநிலம், (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
பெற்றோர்முத்துமணி, அம்மாக்கண்ணு
வாழ்க்கைத்
துணை
 • முருகப்பா (தி. 1908)
பிள்ளைகள்அம்மாக்கண்ணு
(எ) லீலாவதி
காந்தி
ஜெயவீரன்
கல்யாணி
உறவினர்கள்க. இரா. ஜமதக்னி (மருமகன்)
மு. நாகநாதன் (மருபேரன்)
எழிலன் நாகநாதன் (கொள்ளுப்பேரன்)

அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal; 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளியும் பின்னாளைய தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

1 சூன் 1890 அன்று கடலூரில், முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில், அம்மாக்கண்ணு - முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்த அஞ்சலை அம்மாள், ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அதன்பின் அக்கால அரசியல், மற்றும் பிரித்தானியரின் அடக்குமுறை குறித்து அறிந்துகொண்டார்.

தனி வாழ்க்கை[தொகு]

இன்றைய கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள சின்னநெற்குணம் எனும் சிற்றூரில் வேளாண்மை மற்றும் நெசவுத் தொழில் செய்து வந்த முருகப்பா என்பவரை 1908-இல் திருமணம் செய்து கொண்டார் அஞ்சலை.[1][2] அவரின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக முருகப்பாவும் கடலுரிலேயே தங்கிப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர் ஒரு நாளிதழ் முகவராகவும் இருந்தார்.

நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாக செய்து வந்த இவ்விருவரும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தறி நெசவுப்பணியோடு காங்கிரசு கட்சிப்பணியும் செய்தனர். "பெரியார்" ஈ. வெ. இராமசாமியுடன் சென்று பல சிற்றூர்களில் நெசவு செய்த கைத்தறித் துணிகளை விற்றனர்.[1] அஞ்சலை-முருகப்பா இணையருக்குப் பின்னாளில் அம்மாக்கண்ணு (பி.1916)[3], காந்தி, ஜெயவீரன் (பி.1931), கல்யாணி[4] உள்ளிட்ட ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

அரசியல்[தொகு]

ஒத்துழையாமை இயக்கம்[தொகு]

"மகாத்மா" காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலை அம்மாள். 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவு செய்தார். அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த சுப்பிரமணிய பாரதி, இவரைப் பாராட்டிச் சென்றார். முன்னதாக 1914 வாக்கில், "பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பாரதியார் கூறினார்.[5]

நீல் சிலை சத்தியாகிரகம்[தொகு]

1857 சிப்பாய்க் கிளர்ச்சியின்போது பல சிப்பாய்களையும் பொதுமக்களையும் படுகொலைசெய்யக் காரணமாயிருந்த ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேயப் படைத்தளபதியின் நினைவாக 1860-இல் சென்னை மவுண்ட் சாலையில் ஒரு சிலையைப் பிரித்தானிய அரசு நிறுவியது. அச்சிலையை அகற்ற வலியுறுத்தி 1 செப்டம்பர் 1927 அன்று எஸ். என். சோமையாஜுலு தலைமையில் நடைபெற்ற நீல் சிலை சத்தியாகிரகத்தில் முருகப்பாவுடனும் மகள் அம்மாக்கண்ணுவுடனும் பங்கேற்று அச் சிலையை உடைத்தமைக்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார் அஞ்சலை.[1][6][7] அங்கு இவர்களை 1927 டிசம்பரில் சந்தித்த காந்தி, அம்மாக்கண்ணுவின் பெயரை லீலாவதி என்று மாற்றித் தன்னுடன் வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.

உப்புச் சத்தியாகிரகம்[தொகு]

10 சனவரி 1931 அன்று கடலூரில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார். அதன்பின் ஆறு மாதசிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். நிறை மாதத்தில், சிறை விடுப்பில் வெளிவந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின் 15 நாளான கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய இரண்டு மாத தண்டனையை நிறைவு செய்தார். விடுப்பில் வந்து குழந்தை பிறந்ததால் அதற்கு ‘செயில் வீரன்’ என்று பெயர் சூட்டினார். பின்னர் அக்குழந்தை ‘ஜெயவீரன்’ என்று அழைக்கப்பட்டார்.[1][8]

பிற செயல்பாடுகள்[தொகு]

1931 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார்.

1932-இல் காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியலை நடத்தினார், இதனால் ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

1933 சட்டமறுப்பு மறியலில் பங்கேற்றார். அதே ஆண்டு அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாத சிறைத்தண்டனை பெற்றார்.

1934-இல் காந்தி, கடலூருக்கு வந்தபோது அஞ்சலையம்மாளை சந்திக்க முயன்றார். பிரித்தானிய அரசு காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலையின் துணிவைக் காரணமாகக் காட்டி, காந்தியடிகள் இவரை "தென்னிந்தியாவின் ஜான்சிராணி" என்று அழைத்தார்.[1]

1940 தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று 6 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றுக் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் (1941-42) பங்கேற்று சென்னை உட்படப் பல நகரங்களுக்கும் சென்று உரையாற்றியமைக்காகச் சிறை சென்றார்.

1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தார்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

1937, 1946, 1952(?) என மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]

“அன்னியத் துணிகளை எதிர்க்க மகாத்மா காந்தியடிகள் கதர் கொண்டு வந்தார். இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போக விடாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கமே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமின்றி கவுரவமாய் இருப்போம். கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். காலை 10 மணிக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்ப வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டுக்கு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”.

—24 மே 1946 அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் அஞ்சலை அம்மாள் ஆற்றிய உரை, (சட்டமன்ற அவைக்குறிப்பு தொகுதி-1, பக்.317, மே, ஜூன்-1946)

தன் பதவிக்காலத்தில் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு ஆளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாக புவனகிரி செல்லும் வீராணம்வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்குக் கொண்டு வந்தார். குடிநீர் சிக்கலும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அக் கிளை வாய்க்கால், "அஞ்சலை வாய்க்கால்" என அழைக்கப்படுகிறது.[6]

பிற பணிகள்[தொகு]

அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றினார். அப்போது அவரின் முயற்சியால் எக்சு-கதிர் கருவி கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.[1]

பண்ருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் தரமான குடி நீர் கிடைக்காமையால் அப்பகுதி மக்களுக்கு நரம்பு சிலந்தி பாதிப்பு ஏற்பட்டது. அஞ்சலையம்மாள் அத்தகைய சிற்றூர்களில் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார்.[1]

இறுதி நாட்களும் மறைவும்[தொகு]

தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்துக் கட்சிப் பணிக்காகவும் விடுதலைப் போராட்டத்திற்காகவும் செலவு செய்தார் அஞ்சலை. கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வருகையில் அவர் ஆதரவாளர்கள் சிலர் வீட்டை மீட்டுள்ளனர், அதை அஞ்சலை பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்று அவரது மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர்.[1]

சிதம்பரம் அடுத்துள்ள சி. முட்லூர் என்ற சிற்றூரில் தனது மூத்த மகன் காந்தியுடன் குடியேறி வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த அஞ்சலை, அதே ஊரில் 20 பிப்ரவரி 1961 அன்று தன் 71-ஆம் அகவையில் காலமானார். [10] மார்ச் 2 அன்று அவருக்கும் பிற முன்னாள் உறுப்பினர்களுக்கும் சென்னை மாநில சட்டப்பேரவையில் இரு மணித்துளிகள் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.[11]

புகழ்[தொகு]

த. ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் (2001) என்ற நூலில் அஞ்சலை அம்மாள் பற்றிய குறிப்புகள் உள்ளன.[5] சில தமிழ் இதழ்களில் கடல் நாகராசன் எழுதியதோடு சிறுநூல்களும் வெளியிட்டு உள்ளார்.

ராஜா வாசுதேவன் எழுதிய தியாகத் தலைவி அஞ்சலை அம்மாள் என்ற வரலாற்றுப் புதினத்தை 2021-இல் தழல் வெளியீடு வெளியிட்டது.[12]

வழிமரபினர்[தொகு]

அஞ்சலை அம்மாளும் முருகப்பாவும் கடலூர் சிறையில் இருந்த காலத்தில் அவர்களுடன் இருந்த விடுதலைப் போராளியும் மார்க்சியச் சிந்தனையாளருமான க. இரா. ஜமதக்னி, இந்திய விடுதலைக்குப்பின் 1947-இல் லீலாவதியைத் திருமணம் செய்துகொண்டார்.[13] இவ்விணையருக்கு சாந்தி என்ற மகள் பிறந்தார்.

சாந்தியின் இணையர் மு. நாகநாதன், தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் ஆவார்.[14] இவ்விணையரின் மகன் எழிலன் நாகநாதன், மே 2021 முதல் தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "சிங்கப் பெண் தியாகி அஞ்சலை அம்மாள் – Tamil Manadu" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2022-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221227085602/https://tamilmanadu.com/cuddalore-anjalai-ammal-history-in-tamil/. 
 2. Elakkiya, L; Basha, B. Hameed. [https://ymerdigital.com/uploads/YMER2112AX.pdf "ANJALAI AMMAL: THE UNSUNG HEROINE OF FREEDOM STRUGGLE IN TAMIL NADU"]. Ymer 21 (12). https://ymerdigital.com/uploads/YMER2112AX.pdf. 
 3. "APPENDIX I ILLUSTRATIONS - PDF Free Download". https://docplayer.net/156489125-Appendix-i-illustrations.html. 
 4. "A freedom fighter from Tamil Nadu who ought to be remembered more". https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-freedom-fighter-from-tamil-nadu-who-ought-to-be-remembered-more/article66120746.ece. 
 5. 5.0 5.1 "அஞ்சலை அம்மாள் – நூல் மதிப்பீடு | திண்ணை" (in en-US). https://puthu.thinnai.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/. 
 6. 6.0 6.1 "பிரசவத்துக்காக ஒரு மாத பரோல் கேட்ட வீரத் தமிழச்சி பற்றி தெரியுமா உங்களுக்கு?". https://www.vikatan.com/news/agriculture/84931-article-about-indian-freedom-fighter-anjalai-ammal.html. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2018. 
 7. Lt. Dr. P.Karpagavalli (2022). WOMEN LEADERSHIP IN TAMILNADU (AD 1917 - AD 1975). Lulu Publication. பக். 65. 
 8. 8.0 8.1 "Honour first woman MLA". thehindu.com. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/honour-first-woman-mla/article6677939.ece. 
 9. "மறக்கடிக்கப்பட்ட தியாகியின் வரலாறு |'Cuddalore Anjalai Ammal' By V Raja" (in en-US). 2021-01-29. https://velsmedia.com/cuddalore-anjalai-ammal-who-added-pride-to-tamil-nadu/. 
 10. "மாதர்குல மாணிக்கங்களுக்கு சிலைகள்". https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2021/sep/15/statues-for-matarkula-gems--3699719.html. 
 11. "MADRAS LEGSIALTIVE ASSEMBLY 1957-1962: A REVIEW, March 1962". p. 62. https://assembly.tn.gov.in/archive/2nd_1957/Review_2-1957-62.pdf. 
 12. TNSF216 ராஜா வாசுதேவன் எழுத்தில் "அஞ்சலை அம்மாள் " புத்தகம் பற்றி ப.விமல்ராஜ் முதுகலை ஆசிரியர், retrieved 2023-01-01
 13. "G.Subramania Iyer to Anjalai Ammal" (in en). http://tamilnaduinfreedomstruggle.blogspot.com/2010/05/gsubramania-iyer-to-anjalai-ammal.html. 
 14. "K.r. jamadagni" (in ta). https://koottanchoru.wordpress.com/tag/k-r-jamadagni/. 
 15. "முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்!" (in en). 2021-09-07. https://www.nakkheeran.in/24-by-7-news/politics/member-thousand-lights-assembly-met-cm-and-thanked. 

https://anjalaiammal.com/ பரணிடப்பட்டது 2022-02-20 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலை_அம்மாள்&oldid=3672366" இருந்து மீள்விக்கப்பட்டது