அஜித் பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஜித் அனந்த்ராவ் பவார் (Ajit Pawar, பிறப்பு: ஜூலை 22, 1959) என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் மகாராஷ்டிராவின் தற்போதைய துணை முதல்வராக உள்ளார் .

இவர் பாரமதி தொகுதியில் இருந்து மகாராஷ்டிர சட்டமன்றத்துத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1] இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகனாவார். இவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருப்பதுடன், மகாராஷ்டிராவின் நிதியமைச்சராகவும் உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அஜித் அனந்த்ராவ் பவார் 1959 ஜூலை 22 அன்று அகமதுநகர் மாவட்டம் தியோலலி பிரவராவில் உள்ள தனது தாத்தாவின் இடத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை பிரவராவின் தியோலியில் முடித்தார். இவர் புனே மாவட்டம் பாரமதி தாலுகாவில் உள்ள கட்டேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் ஆவார்.

அனந்த்ராவ் ஆரம்பத்தில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரான வி. சாந்தாராமின் "ராஜ்கமல் ஸ்டுடியோஸ்"சில் பம்பாயில் (இன்றைய மும்பை) பணியாற்றினார். அஜித் பவாரின் தாத்தா கோவிந்த்ராவ் பவார் பரமதி கூட்டுறவு வர்த்தகத்தில் பணிபுரிந்தார், இவரது பாட்டி குடும்ப பண்ணையை கவனித்து வந்தார். பவார் பட்டப்படிப்பைப் படித்துவந்த நிலையில், தன் தந்தையின் அகால மரணத்தின் காரணமாக கல்லூரிப் படிப்பை விட்டு வெளியேறி தனது குடும்பத்தை கவனிக்கத் தொடங்கினார். மேல்நிலைப் பள்ளி நிலை வரை கல்வி கற்ற இவர், மகாராஷ்டிரா மாநில வாரியத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி சான்றிதழை (எஸ்.எஸ்.சி) பெற்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அஜித் பவார் [2] தனது துவக்கக் கல்வியை தியோலலி பிரவராவில் படித்துவரும்போது, இவரது சித்தப்பா, சரத் பவார் ஆளும் காங்கிரஸ் கட்சியில் வளர்ந்து வரும் அரசியல் தலைவராக மாறிவிட்டார். எனவே, அஜித் தனது மேலதிக கல்விக்காக பம்பாய்க்கு சென்றார். அஜித் பவார் 1982 ஆம் ஆண்டில் ஒரு கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலையின் வாரியத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது அரசியலில் இறங்கினார். 1991 இல் புனே மாவட்ட கூட்டுறவு வங்கியின் (பி.டி.சி) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 16 ஆண்டுகள் பதவியில் நீடித்தார். இந்த காலகட்டத்தில் இவர் முதன்முதலில் பாராமதி மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பி. வி. நரசிம்ம ராவ் அரசாங்கம் பொறுப்பேற்றபோது, முதலமைச்சராக இருந்த சரத்பவார் அப்பதவியை விட்டு விலகி மத்திய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால் தனது சித்தப்பா சரத் பவார் மக்களவைக்கு போட்டியிட வசதியாக இவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். இதன் பிறகு, இவர் சரத்பவார் இராஜினாமா செய்த பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து இவர் 1995, 1999, 2004, 2009, 2014 ஆம் ஆண்டுகளில் இதே தொகுதியிலிருந்து மீண்டும்மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] சுதாகர்ராவ் நாயக்கின் அரசாங்கத்தில் வேளாண்மை மற்றும் மின் துறை அமைச்சராக (ஜூன் 1991 - நவம்பர் 1992) பதவிவகித்தார்.   [ மேற்கோள் தேவை ] பின்னர் சரத்பவார் மாநில முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றபோது (நவம்பர் 1992 - பிப்ரவரி 1993) இவர் மண்வளப் பாதுகாப்பு, மின் மற்றும் திட்டமிடல் துறைக்கான மாநில அமைச்சரானார். 1999 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய சரத்பவார் தேசியவாத காங்கிரசு கட்சியைத் துவக்கினார். அப்போது சரத் பவாருடன் அஜித் பவாரும் இணைந்தார். அந்த ஆண்டு நடந்த மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கததால் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இதனையடுத்து 1999 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு -தே.வா.கா கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, பவார் கேபினேட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார், முதலில் நீர்ப்பாசனத் துறையில் (அக்டோபர் 1999 - டிசம்பர் 2003) விலாஸ்ராவ் தேஷ்முக் அரசாங்கத்தில் பதவிவகித்தார். சுசில்குமார் சிண்டே அரசாங்கத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் (டிசம்பர் 2003 - அக்டோபர் 2004) கூடுதல் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது காங்கிரஸ்-தே.வா.கா கூட்டணி 2004 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இவர் தேஷ்முக் அரசாங்கத்திலும் பின்னர் அசோக் சவனின் அரசாங்கத்திலும் நீர்வள அமைச்சகத்தை தக்க வைத்துக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில் புனே மாவட்டத்திற்கான கார்டியன் அமைச்சரானார், 2014 இல் காங்கிரஸ் - தே.வா.கா கூட்டணி அதிகாரத்தை இழக்கும் வரை இந்த பதவியை வகித்தார்.   [ மேற்கோள் தேவை ] மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக 2019 நவம்பர் 23 முதல் 26 வரை 80 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் இருந்தார். அதாவது, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக-தே.வா.கா கூட்டணியில் குறுகியகாலம் நீடித்த அரசாங்கத்தின் துணை முதல்வரானார். டிசம்பர் 16, 2019 அன்று மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய பின்னர் பவார் துணை முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அஜித் பவார் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பதம்சிங் பாட்டீலின் சகோதரி சுனேத்ரா (நீ நிம்பல்கர் பாட்டீல்) என்பவரை மணந்தார். இவர்களுக்கு பார்த் பவார் மற்றும் ஜே பவார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_பவார்&oldid=2893380" இருந்து மீள்விக்கப்பட்டது