அஜய் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜய் தேசாய்
AjayDesai2.jpg
கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தின் ஆலூரில் தேசாய், 2014
பிறப்பு1956/1957
இறப்பு20 நவம்பர் 2020 (63 வயதில்)
இந்திய ஒன்றியம், கர்நாடகம், பெல்காம்
பணிகாட்டுயிர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியாளர்
அறியப்படுவதுகாட்டு யானை நடத்தை ஆய்வு; காட்டுயிர் மற்றும் மனித மோதல்

அஜய் தேசாய் (Ajay Desai, 1956 அல்லது 1957 -20 நவம்பர் 2020) என்பவர் ஒரு இந்திய வனவிலங்கு மற்றும் விலங்கு பாதுகாப்பு நிபுணர். இவர் மனித குடியேற்றத்தால் ஏற்படும் வனவிலங்கு-மனிதர் எதிர்க்கொள்ளல்களை மையமாகக் கொண்ட காட்டு யானைகளின் நடத்தையில் நிபுணத்துவம் பெற்றவர். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தேசாயின் குடும்பம் கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தின் கொன்னூரைச் சேர்ந்தது. இக்கடும்பத்தினர் பெல்காமில் குடியேறினர். இவர் பெல்காமில் பள்ளிப்படிப்பை முடித்து, கர்நாடக பல்கலைக்கழகத்தில் கடல்சார் உயிரியலில் முதுகலை பட்டம் பெற்றார். [2] [3]

தொழில்[தொகு]

பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் யானைகள் பற்றிய ஆய்வுப் பணியில் இவர் இளம் ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டு, தன் பணியைத் துவக்கினார். பல வருடங்கள் யானை வளர்ப்பு மற்றும் வலசைப் பாதை ஆகியவற்றை ஆராய்வதில் கவனம் செலுத்தினார். இதில் தமிழ்நாட்டின் முதுமலை, இலங்கை போன்ற பல்வேறு இடங்களில் இவருடைய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணராகவும், ஆசிய யானை - மனித எதிர்கொள்ளல் விவகாரத்தை மேலாண்மைசெய்ய ஏற்ற அறிவியல் தரவுகளைத் தரும் நிபுணராகவும் இருந்தார். [1] [4]

தேசாய், கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு யானையை ரேடியோ டிராக்கிங்கில் கண்காணிக்கிறார்.

நவீன காட்டுயிர் அறிவியல் முறையான ‘ரேடியோ காலர்' முறையில் யானைகளின் நடத்தைகள் இவரால் கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட மனித குடியிருப்புகளால் காட்டு யானைகள் திசைதிருப்புதலும், அதன் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து கவனம் செலுத்தபட்டது. வனவிலங்களின் வாழிடங்களுக்கு அருகில் காடழிப்பு உள்ளிட்ட மனித நடவடிக்கைகளே காட்டுக்கு அருகிலுள்ள கிராமங்களுக்கு யானை நகர்வதற்கு காரணம் என்று இவர் தனது அறிக்கைகள் மூலம் வாதிட்டார். இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கான வழிமுறையாக வனவிலங்குகளின் வலசைப் பாதைகளை உருவாக்குவதற்காக வாதிடுபவராகவும் இருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள சிகூர் யானைகள் வலசை பாதை குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் இவர் நியமிக்கப்பட்டார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், 2020 நவம்பர் 7 முதல் 9 வரை ஆய்வை செய்து முடித்திருந்தார். [1] [5] இந்திய ஒன்றிய அரசு நிலக்கரிப் படிமங்களை ஏலம் விடுவதை எதிர்த்து சார்க்கண்ட் மாநில அரசு மேற்கொண்ட நீதிமன்ற முறையீட்டில், நிலக்கரிச் சுரங்கத்தால் அதன் அருகில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கபடும் குழுவில் இவருக்கும் இடமளிக்க 2020 இல் இந்திய உச்ச நீதிமன்ற இந்தியத் தலைமை நீதிபதி பரிந்துரை செய்திருந்தார். [6] [7]

முன்னனதாக இவர் 2009 இல் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகக் குழு உறுப்பினராக இருந்தார். மேலும் கர்நாடகத்தின் நாகர்ஹோளே மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை இடையே காட்டுயிர்களை இடமாற்றம் செய்வதில் கவனம் செலுத்தும் நாகர்ஹோல் புலிகள் சரணாலயம் குழு உறுப்பினராக இருந்தார். [1]

2005 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தில் (ஐ.யூ.சி.என்) ஆசிய யானைகளுக்கான நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் இணைத் தலைவராகவும் இருந்தார். யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களைக் குறைக்கும் விதத்தில் தேசிய யானை நடவடிக்கை திட்டத்தை உருவாக்கும் இந்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பணிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். [1]

இந்தியாவின் இயற்கைக்கான உலகளாவிய நிதியம், இந்திய வனவிலங்கு கல்வி நிறுவனம், மற்றும் இந்திய மாநிலங்களான கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் யானை மனிதர் மோதல்களைக் குறைக்கும் சர்வதேச சர்வதேச ஜுசமெனார்பீட்டின் பல்லுயிர் திட்டங்கள் போன்றவற்றிற்கான ஆலோசகராக இருந்துள்ளார். [1] [8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தேசாய்க்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் பிறந்தார். [2] கர்நாடகத்தின், பெல்காமில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக 2020 நவம்பர் 20 அன்று இவரது 63வது வயதில் இறந்தார். [1]

வெளியீடுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_தேசாய்&oldid=3069914" இருந்து மீள்விக்கப்பட்டது