அசுரத் சையத் அகமது சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காபுர்தலாவில் சகி சார்வார் (இலக்டாட்டா)
சலந்தர் மாவட்டத்தில் இலக்டாட்டா (சகி சார்வார்)
அசுரத் சையத் அகமது சுல்தான், சகி சார்வார் ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா கொண்டாட்டம்

அசுரத் சையத் அகமது சுல்தான் (Hazrat Syed Ahmad Sultan) என்பவர் பஞ்சாப் பிரதேசத்தில் சகி சார்வார் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூபி இனப் புனிதர் ஆவார்[1]. மேலும் இவர், சுல்தான் (ராஜா),இலக்டாட்டா (மில்லியன் கொடையாளி), இலாலன்வாலா (மாணிக்கங்களின் தலைவன் நிகாகியா பிர் (நிகாகியா புனிதர்) மற்றும் ரோகியன்வாலா (காடுகளின் கடவுள்) என்று பல்வேறு பட்டப்பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார், இவரது கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் சுல்தானியர்கள் அல்லது சர்வாரியர்கள் என்றைழைக்கப்பட்டனர்[2]

பிறப்பு[தொகு]

மதினாவில் இருந்து இடம்பெயர்ந்து சாக்கோட்டில் குடியேறிய சகி சார்வார் சையத் சகி ஜெயின் உல்- அபிதீனுக்கும்[1], கிராமத்தின் தலைவர்[2] பைரா[1] என்பவரின் மகளுமான ஆயிசா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

வாழ்க்கை[தொகு]

சகி சார்வாரின் தந்தை இறந்த போது, சொந்த உறவுகள் சர்வாருக்கு பல்வேறு கொடுமைகளை விளைவித்தனர். இதனால் அவர் பாக்தாத்திற்குச் சென்றார், கானசு உல் அசீம், சேக் சாப் புத்தின் மற்றும் குவாசா மௌதத் சிசுடி போன்ற புகழ்வாய்ந்த புனிதர்களால் நபிகளின் பெயரால் சர்வார் ஆசிர்வதிக்கப்பட்டார்[1] .

இந்தியாவிற்கு திரும்பிய அவர் முதலில் குச்ரன்வாலா மாவட்டத்திலுள்ள தௌன்கல் நகரில் குடியேறினார். பின்னர் அவர் சாக்கோட் நகருக்கு இடம் பெயர்ந்தார். முல்தான் நகரில் மேன்மை பொருந்திய ஒருவரின் மகளை மணந்தார். இதற்கிடையில் அவரிடமிருந்த வியக்கத்தக்க ஆற்றலால் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருகியிருந்தது[2].

இந்தப்புகழ் அவரது குடும்பத்தாரிடம் பொறாமை தூண்டிவிட்டது. இதனால் அவர்கள் சர்வாரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர். இக்கொலைத் திட்டங்களைக் தெரிந்து கொண்ட சகிசர்வார், தேரா காசி கான் மாவட்டத்திலுள்ள சுலைமான மலைத்தொடர் வழியாக தப்பியோட முயன்றார், பின் தொடர்ந்து வந்த அவரது உறவினர்கள் இறுதியாக 1174 ஆம் ஆண்டு அவரைக் கொலை செய்தனர். சர்வாரை அடக்கம் செய்த அவரது ஆதரவாளர்கள் அங்கேயே ஒரு கோவிலையும் கட்டினர். நாளடைவில் இக்கோவில் பக்தர்கள் புனிதயாத்திரை சென்று வரும் ஒரு இடமாக மாறிப்போனது[1].

சுல்தான் சகி சார்வாரின் போதனைகள் எதுவும் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. அவரது பரப்புரைகள் அனைத்தும் அதிசயக் கதைகளேயாகும். குறிப்பாக அவர் விலங்குகளுக்கு அளித்த பாதுகாப்பு குறித்தவையாகும். இக்கதைகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன[1].

ஆலயங்கள்[தொகு]

நிகாகா[தொகு]

சகி சார்வார் தன்னுடைய தங்குமிடமாக நிகாகா நகரத்தைத் தெரிவு செய்தார். விரோதம் புவியியல் மற்றும் காலநிலை சூழல்களால் இவ்விடம் இவருடைய கடைசி இடமாக அறியப்படுகிறது. மேற்கில் சகி சார்வாரின் சமாதி, வடமேற்கில் குரு நானக்தேவின் கோவில், முக்காலி மற்றும் நூற்புச்சக்கரத்துடன் கிழக்கில் சகி சர்வாரின் தாயாருக்கான ஒரு தனியறை முதலியன நிகாகா கோவில் கட்டிடத்தில் உள்ளதாக ரோசு (1970) குறிப்பிடுகிறார். அருகில் உள்ள தாகுர்துவாரா கோவிலின் தனியறையில் பைரனின் படம் உள்ளது[1] .

சகி சார்வார் கோவிலுக்குள் அவருடைய சமாதி , சகிசார்வாரின் மனைவி பீபி பாய் சமாதி மற்றும் அற்புதங்களை நிகழ்த்த இவருக்குச் சக்தியைக் கொடுத்த யிண் (நல் அரக்கன்) சமாதி ஆகியன உள்ளன[1] .

நிகாகா சன்னதிக்கு அருகில், சகி சார்வாரின் மருமகன் முர்தாசாவுடன் தொடர்புடைய சோம் மற்றும் மோசா என்ற இருவேறு புனிதத் தலங்கள் காணப்படுகின்றன. சோம் பகுதியில் முர்தாசா தங்கியிருந்த குகைக்கு மேலாக உள்ள மலை இடிந்து விழாமல் தடுப்பதற்காக தாங்கிய சகிசார்வாரின் கையின் பதிவு காணப்படுவதாக கூறப்படுகிறது[1] .

சன்னதியின் சுற்றுச் சுவருக்குள் மேற்குப்பகுதியில் கிளைகளில் துளிர்த்த இரண்டு இறந்த மரங்கள் உள்ளன. இவை புனிதரின் குதிரை காகியின் தலை மற்றும் குதிகால் கயிறுகளை கட்ட பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது[1] .

பிற பகுதி ஆலயங்கள்[தொகு]

வாசிராபாத் மாவட்டத்தில் உள்ள தௌன்கல், பெசாவர் மற்றும் லாகூர் போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன[1] .

இந்தியாவின் பஞ்சாபில் நிகாகா என்ற பெயரில் எண்ணற்ற ஆலயங்கள் காணப்படுகின்றன. சில பகுதிகளில் சகி சார்வாரை குக்கா தெய்வத்துடன் இணைத்து பன்ச் பிர்கள் அல்லது நிகாகர்கள் என்ற பெயரில் ஒரே கோவிலில் வழிபடுகின்றனர்[1] .

இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் உணா மாவட்டத்தில் உள்ள பாபா இலக்டாட்டா ஆலயத்தில் சிறிய நிகாகா என்ற பெயரில் ஆண்டுதோறும் விழா எடுக்கப்படுகின்றது[3]

வழிபாடு[தொகு]

நிகாகாவில் உள்ள பிர் ஆலயத்திற்கு வருகைதரும் சகிசார்வாரின் சீடர்கள் சேங் எனக் கருதப்படுகின்றன, இவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவரை பாரைகள் எனக் கூறிக் கொள்கின்றனர். உள்ளூர் கோவில்களில் பாடலை இயற்றி மேளத்தை அடிக்கும் புலவன் தொழில்முறை வழிகாட்டியாகவும் பிர்கானாக்கள் எனப்படும் குருக்களாகவும் செயல்படுகிறார். சேங் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளாக (பிர்பாயர், பிரிபாகின்) கருதப்படுகின்றனர்[2].

பாதைகளில் இடைதங்கும் இடங்களை சௌக்கிகள் என்கின்றனர். இங்கு அவர்கள் பாரம்பரியமாக தரையி படுத்து உறங்குகின்றனர். நிகாகா ஆலயங்களுக்கு புனித யாத்திரை வரமுடியாத பக்தர்கள் குறைந்தபட்சம் இத்தகைய சௌக்கிகளில் ஒன்றுக்காவது வருகை தருகின்றனர். இத்தகைய சௌக்கிகளுக்கும் வர இயலாதவர்கள் இவர்களின் பாதைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் ஒன்றிற்காவது சென்று ஓர் இரவு முழுவதும் ஆண்டுக்கு ஒரு முறையாவது தரையில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்[2].

கட்டில் தவிர்த்து இவ்வாறு தரையில் படுத்தி உறங்குவதை சௌக்கி பர்ணா என்கின்றனர்[2].

திருவிழாக்கள்[தொகு]

பஞ்சாப் பகுதி முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. நிகாகா ஆலயங்களில் ஏப்ரல் மாதத்தில் பாய்சகி திருவிழா நடைபெறுகிறது[4] . குச்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் தௌன்கல்லில் சூன்/சூலை மாதங்களில் இத்திருவிழா நடைபெறுகிறது. பெசாவரில் யந்தமேளா (கொடித் திருவிழா) என்ற பெயரிலும், லாகூரில் குவாதமான் கா மேளா (காலடித் திருவிழா) என்ற பெயரிலும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது[1].

18 கிலோ கோதுமை மாவுடன் அதற்கு சரிபாதியாக வெல்லம் சேர்த்து இனிப்பு ரொட்டி பாரம்பரியமாக ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளிக் கிழமையில் தயாரிக்கப்படுவது ஒரு பொதுவான சடங்காக நிகழ்கிறது. இந்த ரொட்டியை பாரம்பரியமாக பாரைகளில் ஒருவர் தயாரிக்கின்றார். வழிபாட்டிற்குப் பின் வழங்கப்படும் ரொட்டியில் நான்கில் ஒரு ஒரு பகுதி இவருக்கு வழங்கப்படுகிறது. எஞ்சிய ரொட்டி அருட்தொண்டர் குடும்பத்திற்கும் பிற சுல்தானியர்களுக்கும் வழங்கப்படுகிறது[1].

சகி சார்வார் பாலாசௌர் வருகை தந்ததை நினைவு கூறும் வகையில் முகந்பூரில் சௌங்கியண் டா மேளா என்ற திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது[5] . சகி சார்வார் தன்னுடைய பயணத்தை ராட்டிவாலில் தொடங்கி முகந்பூரை அடைந்து ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார். இதனால் இத்திருவிழா முகந்பூரில் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. சேங் ஒருவர் ராட்டிவாலில் பயணத்தைத் தொடங்கி முகந்பூரில் பயணத்தை நிறைவு செய்கிறார், சேங் குழுவின் தலைவர் தோக் என்னும் கொடியை கையை ஏந்திக் கொள்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 Folk Religion Change and Continuity by H S Bhatti Rawat Publications ISBN 81-7033-608-2
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 http://www.thesikhencyclopedia.com/biographies/muslims-rulers-and-sufi-saints/sakhi-sarwar
  3. [1]
  4. Dawn by Suhail Yusuf | Muhammad Umar 15 04 2014 [2]
  5. "Fair and Festivals". nawanshahr.nic.in.