அசிமா ஆனந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசிமா ஆனந்து (Ashima Anand) என்பவர்புது தில்லியில் உள்ள வல்லபாய் படேல் மார்பக மருத்துவ நிறுவனத்தில் முதன்மை ஆய்வாளர் மற்றும் முதன்மை அறிவியல் அதிகாரி ஆவார். இவர் சுவாச மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.[1]

வாழ்க்கை[தொகு]

அசிமா ஆனந்து தில்லியில் 1950ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாளன்று பிறந்தார். இவர் தில்லி மற்றும் சிறிநகரில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.[1] பின்னர் 1969இல் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1971இல் விலங்கியல் துறையில் முது அறிவியல் பட்டம் பெற்றார். 1978ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தின் வல்லபாய் பட்டேல் மார்பக மருத்துவ நிறுவனத்தில் முனைவர் பட்டப்படிப்பினை முடித்தார். பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், மேக்ஸ்-பிளாங்க் சிஸ்டம்ஃபிசியோலாஜி நிறுவனம், டார்ட்மண்ட், ஆத்திரேலிய நரம்பியல் அறிவியல் ஆய்வு நிறுவனம், சிட்னி மற்றும் சிராசு மருத்துவப் பள்ளி, ஈரான் ஆகிய நிறுவனங்களில் கூட்டு முயற்சியுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.[1] தற்போது, இவர் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் ஆய்வுத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளராக வல்லபாய் படேல் மார்பக மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிகிறார். இங்கு இவர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளாக ஆய்விதழ்கள், பன்னாட்டுக் கருத்தரங்க செயல்முறைகளில் வெளியிட்டுள்ளார். இவர் இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மரியாதை மற்றும் அங்கீகாரம்[தொகு]

ஆனந்து, பன்னாட்டு உடலியல் அறிவியல் சங்கத்தின் நெறிமுறைகள் குழுவில் உறுப்பினராக உள்ளார். சிராசில் (ஈரான்) உள்ள மருத்துவப் பள்ளியுடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக அமைக்க உதவினார். இவர் இந்தியத் தேசிய அறிவியல் கழகம், தேசிய மருத்துவ அறிவியல் கழகம் (இந்தியா) மற்றும் வளரும் உலகத்திற்கான அறிவியல் கழகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். இவர் அறிவியலில் பெண்களின் மூன்றாம் உலக அமைப்பு மற்றும் இங்கிலாந்தின் உடலியல் சங்கத்தின் செயல் உறுப்பினராகவும் உள்ளார். இவர் இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தில் அறிவியல் மேம்பாடு, பெண் விஞ்ஞானி திட்டங்கள் மற்றும் பெண்களின் தொழில்சார் சுகாதார அபாயங்களுக்கான குழுக்களிலும் பணியாற்றி வருகிறார். இவர் இளம் விஞ்ஞானிகளுக்கான இந்தியத் தேசிய அறிவியல் கழகப் பதக்கத்தினை 1982 ஆம் ஆண்டில் பெற்றார். இந்திய உடற்செயலியல் கழக, பிபி சென் நினைவு சொற்பொழிவினை 1999இல் நிகழ்த்தினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் (2002) சனிகா விருது பெற்ற இவர், தேசிய மருத்துவ அறிவியல் கழக சர் ஸ்ரீராம் நினைவு சொற்பொழிவினை 2003ஆம் ஆண்டிலும் இலங்கை உடற்செயலியல் சமூகம் கே. என். செனவிரத்ன நினைவு சொற்பொழிவினை 2004ஆம் ஆண்டிலும் நிகழ்த்தினார்.[2]

வேலை[தொகு]

ஆனந்து உடற்செயலியல் துறையில் பணியாற்றி வருகிறார். உடலியல் இவர் இருதய-சுற்றோட்ட தொகுதி செயற்பாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பில் முழு கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். நரம்பியல் பாதைகளை அல்லது வழிமுறைகள் அடிப்படையிலான இருதய சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கடுமையான மூச்சுத் திணறலைப் போக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.[2]

விருதுகள்[தொகு]

ஆனந்து 1982இல் இந்தியத் தேசிய அறிவியல் கழக இளம் விஞ்ஞானி விருதினையும், 2004ஆம் ஆண்டு ஜே. எல். நேரு பிறந்த நாள் நூற்றாண்டு சொற்பொழிவு விருதினையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் விருதினையும் பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Profile" இம் மூலத்தில் இருந்து 2017-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170406082246/http://www.mirandahouse.ac.in/MirandaHouse/UserSpace/UserName/admin/DynamicFolder/2006-2007/Alumnae/AlumniBioProfile_Dr_Ashima_Anand.htm. 
  2. 2.0 2.1 "Physical Research Laboratory (IN)". https://www.prl.res.in/~dnoff/colloqia/Dr.%20A.%20Anand_12.pdf. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிமா_ஆனந்து&oldid=3287680" இருந்து மீள்விக்கப்பட்டது