அக எறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக எறியியல் (Internal ballistics), என்பது எறியியலுக்குக் கீழ் வரும் துறை ஆகும், இது ஒரு எறியத்தின் உந்துவிசையை பற்றிய படிப்பாகும்.

துப்பாக்கிகளில், அக எறியியல் என்பது உந்துபொருளை எரியுட்டுதல் முதல், துப்பாக்கிக் குழலில்  இருந்து எறியம் வெளியேறும் வரையிலான, இடைப்பட்ட நேரத்தின் இயல்புகளை பற்றியது.[1] சிறு-குழல் (நீள் மற்றும் கை) துப்பாக்கிகளில் இருந்து, அதி-நுட்ப பீரங்கிப்பிரிவு வரை, அனைத்து விதமான சுடுகலன்களின் பயனர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு, இந்த அக எறியியல் மிக முக்கியமாகும்.

எவுர்தியால் உந்தப்படும் எறியங்களில், அக எறியியல் என்பது ஏவுப்பொறியில் இருந்து உந்துசக்தி அளிக்கப்படும் நேரத்தின் இயல்புகள் ஆகும்.[2]

பாகங்களும் சமன்பாடுகளும் [தொகு]

ஹாச்சர், அக எரியியலை மூன்றாக பிரிக்கிறார்:[3]

 • பூட்டும் நேரம், முட்டுத்தகடு (sear) விடுவிப்பது முதல், எரியூட்டி அடிக்கப்படும் வரையிலான நேரம்.
 • எரியூட்டும் நேரம், எரியூட்டி அடிக்கப்பட்டது முதல், எறியம் நகர ஆரம்பிக்கும் வரையிலான நேரம்.
 • குழல் நேரம், எறியம் நகர ஆரம்பித்தது முதல், குழலை விட்டு வெளியேறும் வரையிலான நேரம்.

அக எறியியலில் ஐந்து பொதுவான சமன்பாடுகள் உள்ளன:[4]

 1. உந்துபொருள் நிலையின் சமன்பாடு
 2. ஆற்றலின் சமன்பாடு
 3. நகர்ச்சிச் சமன்பாடு
 4. எரியும் விகிதச் சமன்பாடு
 5. வடிவ செயல்பாட்டு (form function) சமன்பாடு

எரியூட்டும் முறைகள்[தொகு]

இதுநாள் வரை, பல வகையிலான உந்துபொருளை எரியூட்டும் முறைகள் இருக்கின்றன. முதன்முதலில், துப்பாக்கியின் பின் பகுதியில் ஒரு சிறய துளையிட்டு, (தொடு துளை) அதன்வழியாக உந்துபொருளை உட்செலுத்தி, வெளியில் இருந்து தொடு துளையில் தீ வைப்பர். பின்னர்,  இயந்திர செயல்பாட்டால், எரியூட்டிகள் கொண்ட வெடியுறைகளை வெடிக்க வைத்து, உந்துபொருள் பற்றவைக்கப் பட்டது. மின்னோட்டத்தை கொண்டும் உந்துபொருளை பற்ற வைக்கலாம்.

உந்துபோருட்கள்[தொகு]

வெடிமருந்து[தொகு]

கந்தகம், கரி, மற்றும் பொட்டாசியம் நைத்திரேட்டு அல்லது சோடியம் நைத்திரேட்டு ஆகியவற்றின் கலவையை அரைத்துப் பொடியாக்கி வெடிமருந்து (கரும்பொடி) தயாரிக்கப்படுகிறது. இது பல்வேறு துகள் அளவுகளில் தயாரிக்கபடுகிறது. துகள்களின் வடிவமும் அளவும், அதன் பரப்பளவை நிர்ணயிக்கும், ஆக இது நேரடியாக எரியும் விகிதத்தையும் மாற்றும்.

நைட்ரோ மாவியம் (ஒற்றை உந்துபொருட்கள்)[தொகு]

நைட்ரிக் காடிமாவிய நாருடன் வினையாற்றும் போது, நைட்ரோ-மாவியம் அல்லது "துமுக்கிப்பஞ்சு" உருவாகிறது. இது எளிதில் தீப்பற்றக்கூடிய நார்ப்பொருள். வெப்பமூட்டினால் இது உடனே எரிந்து போகும். இதை எரிக்கும்போது, முற்றிலும் வாயுக்களாவதால்; எந்த திடநிலை மிச்சமும் இல்லாமல், சுத்தமாக எரிந்துவிடும்.  ஜெலட்டின் பூசிய நைட்ரோ மாவியம், ஒரு நெகிழி ஆகும். இதை நீள் உருளை, குழல், உருளை அல்லது துகள் ஆகிய வடிவங்களில் ஆக்க முடியும். இதைத்தான் ஒற்றை உந்துபொருட்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

இரட்டை உந்துபொருட்கள்[தொகு]

நைட்ரோகிளிசெரினை நைட்ரோ-மாவியத்துடன் சேர்த்தால் "இரட்டை உந்துபொருள்" உருவாகும். நைட்ரோ-மாவியம்   நைட்ரோகிளிசெரினின் வீரியத்தைக் குறைத்து, அது வெடிப்பதை தவிர்க்கும்; பதிலுக்கு நைட்ரோகிளிசெரின், நைட்ரோ-மாவியத்தை உறைகூழ் (jelly) நிலைக்கு மாற்றி, அதன் சக்தியை அதிகரிக்கிறது. ஒற்றை உந்துபொருட்களைப் போல் சுத்தமாக எரியாவிட்டாலும், இரட்டை உந்துபொருட்கள் அதிகவேகமாக எரிந்துவிடும்.

திடநிலை உந்துபோருட்கள் (பெட்டியில்லா போர்த்தளவாடம்)[தொகு]

தற்போதுள்ள ஆய்வுகளில் "பெட்டியில்லா போர்த்தளவாடம்" (caseless ammunition) முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகை பெட்டியில்லா வெடியுறையில், உந்துபொருள் ஒரு திடப்பொருளாக, அதன் பின்னால் உள்ள குழியில் எரியூட்டி வைக்கப்பட்டிருக்கும், மற்றும் முன்னால் குண்டு (தோட்டா/சன்னம்) இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

 1. Army (February 1965), Interior Ballistics of Guns (PDF), Engineering Design Handbook: Ballistics Series, United States Army Materiel Command, p. 1-2, AMCP 706-150, archived from the original (PDF) on 2017-02-11, பார்க்கப்பட்ட நாள் 2016-07-10
 2. http://www.merriam-webster.com/dictionary/ballistics
 3. Hatcher, Julian S. (1962), Hatcher's Notebook (Third ed.), Harrisburg, PA: Stackpole Company, p. 396, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-0795-4
 4. Army 1965, ப. 2‑3

வெளி இணைப்புகள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக_எறியியல்&oldid=3373005" இலிருந்து மீள்விக்கப்பட்டது