அக்ரைலேட்டு
அக்ரைலேட்டுகள் (Acrylates) என்பவை அக்ரைலிக் அமிலத்தினுடைய உப்புகள், எசுத்தர்கள், இணை காரங்கள் மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் ஆகும். அக்ரைலிக் அமிலம் 2-புரோப்பனாயிக் அமிலம் என்றும் அறியப்படுவதால் அக்ரைலேட்டுகள் புரோப்பேனோயேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அக்ரைலெட்டு அயனி CH2=CHCOO−. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. அக்ரைலேட்டுகளில் நேரடியாக கார்பனைல் கார்பனுடன் இரண்டு கார்பன் அணுக்கள் இரட்டைப் பிணைப்புகளால் இணைந்த வினைல் தொகுதிகளைக் கொண்டுள்ளன.
பயன்
[தொகு]அக்ரைலேட்டுகளும் மெத்தக்ரைலேட்டுகளும் பலபடிநெகிழிகளில் பொதுவான ஒற்றைப் படிகளாகும். மெத்தக்ரைலிக் அமிலத்தின் உப்புகளும் எசுத்தர்களும் மெத்தக்ரைலேட்டுகள் எனப்படுகின்றன. அக்ரைலேட்டு பலபடிகளை உருவாக்குவதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. இரட்டைப் பிணைப்புகள் உயர் வினைத்திறன் கொண்டவை என்பதால் அக்ரைலேட்டுகள் எளிதில் பலபடியாகின்றன. சமீபத்தில், அக்ரைலேட்டு-சார்பு பன்முக சில்படிம சில்செசுகியுவாக்சைம்களின் கரிம-கனிம கலப்பு மீநுண் கட்டுருப்புத் தொகுதிகள் எஇமையாகத் தயாரிக்கப்பட்டு அவற்ரின் தூய்மையான நிலையில் பிரிக்கப்பட்டன. கலப்பு பலபடி மீநுண் தொகுப்புகள் தயாரிப்பதற்கு இவை மிகப்பயனுள்ள ஒற்றைப் படிகளாகும் [1].
உற்பத்தி
[தொகு]அக்ரைலிக் அமிலத்துடன் தொடர்புடைய ஆல்ககாலை ஒரு வினையூக்கியின் முன்னிலையில் வினைபுரியச் செய்து அக்ரைலேட்டு தயாரிக்கப்படுகிறது. மெத்தனால் எத்தனால் போன்ற கீழ்நிலை ஆல்ககால்களுடன் 100-120 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியும் பொழுது பலபடித்தான் வினையூக்கிகள் (நேர் மின்னயனி மாற்றிகள்) பயன்படுத்தப்படுகின்றன. என்– பியூட்டனால்,2-எத்தில்யெக்சனால் போன்ற உயர் ஆல்ககால்கள் வினைபுரியும் பொழுது ஒருபடித்தான நிலையில் கந்தக அமிலம் வினையூக்கியாகச் செயல்படுகிறது. உயர் ஆல்ககால்களின் அக்ரைலேட்டுகளையும், கீழ்நிலை எசுத்தர்களை தைட்டானியம் ஆல்ககாலேட்டுகள் அல்லது கரிம வெள்ளீயச் சேர்மங்கள் (உதாரணம்:டைபியூட்டைல்வெள்ளீயம் டைலாரேட்டு) வினையூக்கியைப் பயன்படுத்தி உருமாற்ற எசுத்தராக்கல் வினை மூலமாக தயாரிக்க முடியும் [2].
இயற்கையில் தோற்றம்
[தொகு]முன்னுயிரிகள் போன்ற ஓரணு இரைவிழுங்கிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள கடல்மிதவைத் தாவரங்கள் இதைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்கப்படும் பொழுது இவற்றில் டைமெத்தில்சல்போனியோபுரோப்பியோனேட்டு லையேசு உடைந்து டைமெத்தில்சல்போனியோபுரோப்பியோனேட்டு மற்றும் அக்ரைலேட்டு சேர்மங்களாக மாறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ervithayasuporn, Vuthichai; Chimjarn, Supansa (2013). "Synthesis and Isolation of Methacrylate- and Acrylate-Functionalized Polyhedral Oligomeric Silsesquioxanes (T8, T10, and T12) and Characterization of the Relationship between Their Chemical Structures and Physical Properties". Inorg. Chem.. doi:10.1021/ic401994m.
- ↑ Arpe, Hans-Jürgen (2007). Industrielle organische Chemie: bedeutende Vor- und Zwischenprodukte (6. ed.). Weinheim: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-31540-6.