அக்பர் ஷா (வைரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்பர் ஷா (Akbar Shāh) என்பது முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஒரு வைரம் ஆகும். முகலாயர்களின் மீதான நாதிர்சாவின் படையெடுப்பின்போது கொள்ளையடிக்கப்பட்ட மயிலாசனம் உள்ளிட்ட செல்வங்களுடன் அக்பர் ஷாவும் சென்றது.[எப்போது?] இது 73.60 காரட் எடை கொண்ட இளம் பச்சை நிற ஒழுங்கற்ற, பேரிக்காய் வடிவ வைரமாகும்.

வரலாறு[தொகு]

அக்பர் ஷா வைரமானது முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் ராஞ்சிக்கு அருகில் குக்ரா என்ற இடத்தி லுள்ள ஒரு சுரங்கத்திலிருந்து தோண்டியெடுக்கப் பட்டது.

இந்த புகழ்பெற்ற வைரமானது மொகலாயர்களின் மயிலாசனத்தில் பதிக்கப்பட்ட மயிலிலின் இரண்டு கண்களில் ஒன்று என சில வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள்.[1] இருந்தாலும் இதை ஏற்க மறுக்கும் அறிஞர்களும் உள்ளனர்.

முகலாயப் பேரரசின் மீது படையெடுத்து வந்த பாரசீகத்தின் நாதிர் ஷா, மயிலாசனம் உள்ளிட்ட பல்வேறு செல்வங்களைக் கொள்ளையடித்து சென்றபோது, அதில் அக்பர் ஷாவும் இருந்தது. பின் நாதிர் ஷா கொல்லப்பட்டார். மயிலாசனம் சிதைக்கப்பட்டு அதில் இருந்த விலை உயர்ந்த தங்கம் உள்ளிட்ட உலோகங்களும், இரத்தினக் கற்களும் பலராலும் கொள்ளையடிக்கப்பட்டன.[2]

இந்தக் கல் பிற்காலத்தில் துருக்கியில் நடைபெற்ற வைரக் கண்காட்சி ஒன்றில் காணப்பட்டது அக்கல்லுக்கு ஷெப்பர்ட்ஸ் ஸ்டோன் என்ற புதிய பெயர் இடப்பட்டிருந்தது. இது 1866 பிப்ரவரியில் இஸ்தான்புல்லில் இலண்டன் வைர வணிகரான ஜார்ஜ் பிளாக் என்பவரால் வாங்கப்பட்டது. இதன்பிறகு இந்த வைரம் மீண்டும் வெட்டப்பட்டது. இதனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தவைரத்தின் வரலாற்று அடையாளமானது அழிக்கப்பட்டது. முதலில் 120 அரபு காரட் (119 மெற்றிக் காரட் 23 கிராம்) எடையுடன் இருந்த இந்த வைரமானது 73.60 மெட்ரிக் காரட் (14.34 கிராம்) எடை கொண்டதாக சிறிதாக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் பரோடா மன்னர் மஹார் ராவ் கெய்காட்டால் இந்த வைரமானது 350,000 ரூபாய்க்கு (சுமார் 26,000 பவுண்டுகள்) வாங்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தது.[3] அக்பர் ஷா இன்னும் பரோடாவில்தான் இருக்கிறதா அல்லது ராஜ குடும்பத்தினர் யாரிடமாவது விற்றுவிட்டார்களா என்று தெரியவில்லை..

மேற்கோள்கள்[தொகு]

  1. "Famous Diamonds: Akbar Shah or Jehan Ghir Shah Diamond page 200". Farlang.com. Archived from the original on 2014-01-28. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.
  2. "Peacock Throne - Encyclopædia Britannica". Britannica.com. 2013-03-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-25.
  3. G.F Herbert Smith: Gemstones. London, 1940. p. 171-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_ஷா_(வைரம்)&oldid=3715270" இலிருந்து மீள்விக்கப்பட்டது