உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கம்மா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்கம்மா தேவி (1918 – 2012) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.இவர் படுகர் இனத்தின் முதல் பட்டதாரிப் பெண் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராவார்.[1]

பிறப்பும் கல்வியும்

[தொகு]

அக்கமாதேவி 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள் நீலகிரி மாவட்டத்தின் பியர்ஹட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் எம். கே. மோதா கௌடர் மற்றும் சுப்பி இணையருக்கு மூத்த மகளாவார். குன்னூரின் தூய ஜோசப் கன்னிமாடப் பள்ளியில் கல்வி பயின்றவர். அப்பொழுது அந்த ஊரில் பெண் குழந்தைகளை பள்ளிகளில் அனுப்பி படிக்க செய்தவர் ஒரு சிலரே. இவரது தந்தை பாஸ்டர் நிறுவனத்தில் கம்பவுண்டராகப் பணிபுரிந்து கொண்டே மகள்கள் இருவரையும் பள்ளியில் படிக்க வைத்தார். அக்கம்மாள் கேம்பிரிட்ஜ் இளையோர் தேர்வு மற்றும் ஆங்கிலோ-இந்திய உயர்நிலைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றார். பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள தூய தெரசாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதார படிப்பில் சேர்ந்து 1938ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

குடும்பம்

[தொகு]

1943 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் நாள் படுகர் இன சட்டமன்ற உறுப்பினரான ஆரிகௌடரின் தம்பியான ஹெச்.பி. ஜோகி கௌடருக்குத் திருமணம் செய்து வைக்கப் பட்டார். அரசியல் தலைவர்கள் கொண்ட குடும்பம் என்பதால் நாடு விடுதலை அடையும் வரை அரசியல் போராட்டங்களில் அக்காமாவால் தடையின்றி செயல்பட முடிந்தது.

அரசியல் வாழ்வு

[தொகு]

மகாத்மா காந்தியின் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அக்கம்மா. 1942 ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் ஈடுபட்டு செயலாற்றத் துவங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். மலை வாழ் பெண்களின் நலனுக்காக அக்கறையோடு பணியாற்றினார்.[1]

1956ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை மாநில மக்கள் நல ஆலோசனை வாரியத்தில் உறுப்பினராக செயல்பட்டார். அனைத்து இந்திய மகளிர் மாநாட்டு அமைப்பில் ஈடுபட்டதோடு மகளிர் சேமிப்புத் திட்டத்தின் மாநில ஆலோசனை குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிறுவிய மாவட்ட அளவு கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றினார். உதகை அனைத்திந்திய மகளிர் மாநாட்டு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார்.

சமூக சேவை

[தொகு]

தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய பெண்களுக்கு ஆண்களுக்கு சமமாக கூலி வாங்கித் தருவது, மகளிர் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முழுநேர சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மகளிர் மேம்பாட்டு மையங்களை ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கிராமங்களில் நிறுவினார். ஒவ்வொரு மையமும் அந்தந்த கிராமங்களின் அருகில் இருப்பது போல கட்டமைப்புகளை உருவாக்கினார். பெண்கள் தங்கள் சிறுகுழந்தைகளை பாதுகாப்பாய் விட்டுச் செல்ல பால்வாடி வசதியும் அம்மையங்களில் ஏற்படுத்தினார். கிராமசேவகர்களை நியமனம் செய்து நிர்வகித்தார். கிராம சேவிகர்கள் அக்குழந்தைகளை பார்த்துக் கொண்டதோடு கிராமங்களுக்கு சென்று சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர். இத்தகைய மையங்கள் பெண்களுக்காக ஏற்படுத்திய நலத் திட்டங்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.[2]

“மனமிருந்தால் மாற்றமுண்டு” என்பதே அம்மையங்களின் ஒட்டுமொத்த நோக்கமாக இருந்தது.

கல்வியில் பின்தங்கிய ஏழை மாணவியருக்கு சிறப்பு வகுப்பு திட்டம்,கைவினை பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுக்கும் பயிலரங்குத் திட்டம் போன்ற பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினார்.[3]

இவர் தனது 92 வயது வரை இந்திய மற்றும் உலக அரசியலை கவனித்து வந்தார்.[4]

விருது

[தொகு]

அனைத்திந்திய மகளிர் கான்பரன்ஸ் புனே நகரில் நடத்திய பிளாட்டினம் ஜூபிலி நினைவுக் கூட்டத்தில் அக்கம்மாவின் ஐம்பது ஆண்டு கால பொது சேவையைப் பாராட்டி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது.

தேர்தல் அரசியல்

[தொகு]

கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதல்  படுகர் இனப் பெண்மணியான அக்கம்மா தேவி[5] 1962 முதல் 1967 வரை நீலகிரி மக்களவைத் தொகுதியின்  மக்களவை பிரதிநிதியாகப் பணியாற்றினார். இவர் இப்பதவியை பெற்ற முதல் பெண்மணி. அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) முதலமைச்சராக இருந்த காமராசர் அக்கம்மா தேவியை மக்களவைப் பிரதிநிதியாக தேர்வு செய்தார்.[5] இவர் லோக்சபாவில்[6] தனது உரைகளில் பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் இந்தியாவின் சனத்தொகை கட்டுப்பாட்டு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெண் தொழிலாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து பேசியுள்ளார்.

1967 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பின்னும் தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்தார்.

இறப்பு

[தொகு]

இவர் தனது 92 வயது வரை அரசியல் குறித்த செய்திகளை கவனித்துக் கொண்டிருந்தார். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு தனது 94 வயதில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள அப்பத்தாலா எனும் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Louis, Nivedhitha (December 2019). முதல் பெண்கள் [Mudhal Penkal] (in Tamil). Chennai: Maithri Publications. ISBN 978-81-939428-4-0.{{cite book}}: CS1 maint: date and year (link) CS1 maint: unrecognized language (link)
  2. THE 'DAUGHTER OF THE NILGIRI MOUNTAINS': A STUDY ON THE SOCIAL SAGA OF DARING WOMAN Predeep Joseph 1 , Dr. Shani Ruskin R. 2 1 Research Scholar, (Bharathiar University, Coimbatore), Research and Postgraduate Department of History, Providence College for Women, Coonoor, District Nilgiris, Tamilnadu 2 Research Supervisor and HoD, Researc
  3. THE 'DAUGHTER OF THE NILGIRI MOUNTAINS': A STUDY ON THE SOCIAL SAGA OF DARING WOMAN Predeep Joseph 1 , Dr. Shani Ruskin R. 2 1 Research Scholar, (Bharathiar University, Coimbatore), Research and Postgraduate Department of History, Providence College for Women, Coonoor, District Nilgiris, Tamilnadu 2 Research Supervisor and HoD, Researc
  4. Thiagarajan, Shantha (April 13 2011). "Politics has always been dominated by men:Akkamma Devi". Times Of India. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/politics-has-always-been-dominated-by-men-akkamma-devi/articleshow/7968489.cms. 
  5. 5.0 5.1 5.2 "Former Congress MP Akkamma Devi passes away". The Hindu Business Line. 2012-11-23. http://www.thehindubusinessline.com/news/former-congress-mp-akkamma-devi-passes-away/article4126410.ece. பார்த்த நாள்: 2012-12-08. 
  6. T0853 D.G. ‘1966-67 CHAITRA 24, 888 (SAKA) DG 1966-67 r085q
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கம்மா_தேவி&oldid=4225760" இலிருந்து மீள்விக்கப்பட்டது