அகிலம் ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகிலம் ஒன்று என்பது 17 பாகங்கள் கொண்ட அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலின் முதலாவது பாகமாகும். இது அய்யாவழியின் சமய நூல் ஆகும். இதில் முதல் பகுதியான காப்பு, தெட்சணம் குறித்து விளக்குகிறது. மேலும் ஆதி உலகத்தின் அரசியல் மற்றும் சமூகவியல் சூழ்நிலைகள் குறித்து எழுதப்பட்டுள்ளது.

காப்பு[தொகு]

ஒரு நூலை எழுதுவதற்கு முன்பாக தன்னையே இறைக்கு அர்ப்பணிப்பதை காப்பு என்று கூறுவர். தமிழில் சங்க காலப் படைப்புகள் பெரும்பாலும் காப்பு என்ற பகுதியை கொண்டு துவங்கும். கலியன் பூமிக்கு வந்ததால், உலகை காத்து ஆட்சிபுரிய, கடவுள் சான்றோர்களை உருவாக்கியதாகவும், அதை கடவுள் சொல்ல தானே கேட்டதாகவும் நூலின் ஆசிரியர் இந்தப் பகுதியில் கூறியிருக்கிறார்.

நூற்சுருக்கம்[தொகு]

அகிலத்தின் ஆதி முதல் அந்தம் வரை நடைபெறும் நிகழ்வுகளை தொகுப்பாக இந்தப் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. வைகுண்ட அவதாரம் குறித்தும் சில தகவல்கள் இந்த பகுதியில் குறிக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் மனதில் கடவுள் ஆட்கொள்ளுதல் பற்றியும், அடியெடுத்தருளுதல் பற்றியும் இந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.

நூலின் பயன்[தொகு]

இதை படிப்போருக்கு முழு தன்னிறைவு கிடைக்கும் என்றும், இதை தூற்றுவோர்களுக்கு நரகம் வாய்க்கும் என்றும் நூலின் பயனாக இதில் எழுதப்பட்டுள்ளது.

தெட்சணத்தின் புதுமை[தொகு]

தெட்சணத்தில், கலியுகத்திற்கு முன்பு சான்றோர்கள் தோன்றினார்கள் என்றும் அதுவே ஆரம்பகால மனித நாகரீகம் என்றும் அகிலத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. சமூகவியல், இறையியல் மற்றும் பல புதுமைகள் குறித்து இப்பகுதியில் ஆழமாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சியின் நீதி[தொகு]

தெட்சணத்தின் அரசன் சோழன் தனது சிறுவயதில் ஆட்சி செய்த முறை குறித்தும், ஓர் அரசன் தன் நாட்டை தர்மத்துடன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்ற முறை குறித்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

இறைநீதி[தொகு]

இறை குறித்து மக்களின் எண்ணம், மேலும் அக்காலத்தின் இறை நல்லிணக்கம் மற்றும் இறை அருள் பெறும் வழிமுறை குறித்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

மனித நீதி[தொகு]

மனித தர்மம் குறித்தும் இயற்கையுடன் ஒத்து வாழும் வழி முறை குறித்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது.

சாதி ஒற்றுமை[தொகு]

பல சாதிகளாய் மனிதன் பிரிந்து வாழ்ந்தாலும் சாதியை ஒரு வகைப்பாடாய் மற்றும் கருதி, வெறுப்பற்ற மனநிலையோடு ஒரு சாதியாய் மனிதன் வாழ்ந்தான் என்று ஆதிகால சாதி அமைப்பு குறித்து இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

நீடிய யுகம்[தொகு]

நீடிய யுகம் முதல் யுகமாகும். அந்த காலகட்டத்தில், இறையும் மனிதனும் எந்த இடையூறும் இன்றி செழிப்பாக இருந்தனர். ஊழியமும் சாதி வேறுபாடும் இல்லாமல் ஒரே குடும்பமாய் மனிதகுலம் ஒற்றுமையாக வாழ்ந்தது. 14 உலகிலும் பூமியிலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இடையே நல்லிணக்கம் இருந்ததாகவும் தீமையை பற்றிய பயம் இல்லை என்றும், மேலும் இந்த யுகத்தில் அரசன் நேர்மையாக இருந்து மக்களிடம் வரி வசூல் செய்யாமல் ஆட்சி புரிந்ததாகவும் விளக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • அரிசுந்தர மணி (2002), அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, 2002 வைகுண்டர் திருக்குடும்பம் பப்பிளிகேஷன்ஸ்,
  • ஜி. பேட்ரிக் (2003), மெட்ராஸ் பல்கலைக்கழகம்,
  • என். விவேகானந்தன் (2003), அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உறையும் (பகுதி 2), விவேகானந்தா பப்பிளிகேஷன்ஸ்,
  • மணி பாரதி (2003), அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை (பகுதி 2)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலம்_ஒன்று&oldid=3422889" இலிருந்து மீள்விக்கப்பட்டது