அகமுகம் புறமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளவியலில் மனிதர்களை ஆளுமை அடிப்படையில் அகமுகம்-புறமுகம் என்று இரண்டு வகையாகப் பாகுபாடு செய்வர். அகமுகம் என்பதை ஆங்கிலத்தில் (Introversion) என்றும் புறமுகம் என்பதை (Extroversion) என்றும் குறிப்பிடுவர். பொதுவாக, அகமுகம் என்பவர்கள் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து இருத்தல், சமூகத் தொடர்பில் இருந்து விலகியிருத்தல், தம்வயப்பட்டும் கூச்சம் மிகுந்தும் காணப்படுதல் போன்ற பண்புகளைப் பெற்றும் காணப்படுவர். ஆனால் புறமுகம் என்பவர்கள் அகமுகப் பண்பு கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறுகளைக் கொண்டு காணப்படுவர். சமூக ஏற்பினைப் மிகுதியாகப் பெற விழைவது, நண்பர்களைப் பெறுவது அச்சம் கூச்சமின்றி பிறருடன் விரைவாகப் பழகுவது போன்றவை இவர்களிடம் காணப்படும் பண்புக்கூறுகளாகும்.

காரல் யூங்(Carl Jung)[தொகு]

மனித ஆளுமையைப் பண்புக்கூறுகளின் அடிப்படையில் முதன் முதலில் அகமுகம் புறமுகம் என்று வகைப்படுத்தியவர் காரல் யூங் என்ற உளவியல் அறிஞர். இவரின் வகைப்பாடு சில ஐயங்களை அறிஞர்கள் இடையே ஏற்படுத்திய போதிலும் அகமுகம் புறமுகம் என்ற பண்புத்தொகுதிகள் உளவியல் விளக்கங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. தனிமனிதனின் உள்ஊக்குத்திறன்(Libido) உள்நோக்கிச் செல்லுமாயின், அவன் அகமுக ஆளுமைக் கொண்டவனென்றும் வெளி உலகை நோக்கிச் செல்லுமாயின், அவன் புறமுக ஆளுமைக் கொண்டவனென்றும் காரல் யூங் ஆளுமை வகைப்பாடுகளை விளக்குகிறார். ஒவ்வொருவரிடமும் சில அகமுக பண்புக்கூறுகளும் புறமுகப் பண்புக்கூறுகளும் காணப்படுகின்றன. இவற்றில் எப்பண்புத்தொகுதி மிகுதியாக இருக்கிறதோ அதையொட்டியே அவரின் ஆளுமைத் தீர்மாணிக்கப்படும். ஆகவே எவரும் முற்றிலும் அகமுக ஆளுமை உடையவராகவோ புறமுக ஆளுமை உடையவராகவோ இருக்கமுடியாது. காரல் யூங் இவ்விரு ஆளுமைப் பண்பு உடையவர்களையும் புலன்ணுனர்வு,சிந்தனை,உணர்ச்சி, உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்க முடியும் என்று மேலும் கூறுகிறார்.

பாவ்லவ்(Ivan Pavlov)[தொகு]

அகமுகம்,புறமுகம் என்ற இரு பண்புக்கூறுகளுக்கு இணையாக கிளர்ச்சிவகை(Excitory), உளத்தடை வகை(Inhibitory) ஆகிய இரு பண்புக்கூறுகளை பாவ்லவ் கூறுகிறார். மனிதர்களின் ஆளுமைப் பண்புக் கூறுகளுக்கு மைய நரம்பு மண்டலமே முக்கியக் காரணம் என்று இவர் கருதினார். நாய்களை வைத்து இவர் நடத்திய ஆக்கநிலையிருத்த சோதனைகள் மூலம் இதை மெய்ப்பித்தும் காட்டினார். இத்தகைய ஆளுமைப் பாகுபாடு மனிதர்களிடம் காணப்படும் அகமுகம் புறமுகம் ஆகியவற்றிற்கு இணயாக இருப்பதையும் இவர் கண்டறிந்தார்.

ஐசங்க்(H.J. Eysenk)[தொகு]

மனிதர்களின் ஆளுமை வகைப்பாட்டைக் கண்டறிய பல சோதனைகள் செய்து, பாவ்லாவின் கருத்துகளை உண்மையெனக் கண்டறிந்தவர். இவர் மனிதர்களிடம் காணப்படும் ஆளுமைப் பண்புக்கூறுகளை ஆராய்வதற்காக தரப்படுத்தப்பட்ட(Standardised) பல வினநிரல்களை(Questionnaire) அமைத்தார். இந்த வினா நிரல்களின் உதவியோடு பலதரப்பட்ட மக்களை சோதித்தார். பவ்லாவ் கூறிய கிளர்ச்சியுறு வகை மனிதர்களிடம் புறமுக ஆளுமையாகவும் தடையுறுவகை என்னும் பண்புக்கூறு அகமுக ஆளுமையாகவும் காணப்படுகின்றன என்று கண்டறிந்தார். இந்தச் சோதனைகளின் மூலம் அகமுக ஆளுமை, புறமுக ஆளுமை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கிக்காட்டினார்.

அகமுகம்/புறமுகம் வேறுபாடுகள்[தொகு]

அகமுகம்[தொகு]

 • நம்பிக்கைக்கு உரியவராக இருப்பர்
 • தாமாகச் செய்யக்கூடிய செயல்களில் மட்டுமே அக்கறை காட்டுவர்
 • பிறரது நட்பினைப் பெற விரும்பமாட்டார்கள்
 • தனிமையை நாடுவர்
 • தத்துவமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டிருப்பர்
 • மிகையான அவைக்கூச்சம் கொண்டிருப்பர்
 • எளிதில் மனவெழுச்சி அடைவர், கற்பனைத் திறன் மிக்கவராய் இருப்பர்
 • எச்செயலையும் திட்டமிட்டு செய்வர்

புறமுகம்[தொகு]

 • சமுகவயமாதலை(Socialisation) விரும்புவர்
 • சமுக ஏற்புடைமையை(Social Acceptance) பெரிதும் விரும்புவர்
 • பிறரோடு நட்பு கொள்ளுதல், உரையாடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர்
 • தம் குற்றம் காணாதவர், தற்புகழ்ச்சியில் ஈடுபடுவர்
 • தனிமையை விரும்பாதவர், தலைமையை ஏற்க முன் வருபவர்
 • தேவைக்கு மேல் நம்பிக்கை உடையவர்
 • எதையும் ஆழ்ந்து சிந்திக்காமல் உள் துடிப்புக்கு(Imulse) ஏற்ப விரைந்து செயல்படுவர்.

உசாத்துணை நூல்கள்[தொகு]

 1. கல்வியில் மனவியல் - பேரா. எஸ். சந்தானம், சாந்தா பதிப்பகம், சென்னை.
 2. வாழ்வியற் களஞ்சியம்(தொகுதி ஒன்று) - தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமுகம்_புறமுகம்&oldid=2748344" இலிருந்து மீள்விக்கப்பட்டது