அகமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுவாக உள்ளது. மேல் நாடுகளில், சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். பழங்குடிச் சமுதாயங்களில் ஒவ்வொரு குழுவும் ஒரு அகமணக் குழுவாக உள்ளன.

அகமண முறை குழுவுக்குள், நெருக்கத்தையும் பிணைப்பையும் ஊக்குவிக்கின்றது. பண்டைக் காலத்திலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் சமுதாயங்களில் அகமண முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது குழுவுக்குள் ஒற்றுமையை ஊக்குவித்து, அக்குழுக்களுக்கு உரிய வளங்களின் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இது வேறு பெரும்பான்மைக் குழுக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களுடன் நீண்டகாலம் புதிய இடங்களில் தாக்குப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது எனலாம். இந்தியாவில் வாழும் பார்சிகள், வட ஈராக்கியப் பகுதிகளில் வாழும் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தினராகிய யாசிடிகள் என்போர் சிறுபான்மை அகமணக் குழுக்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

புவியியல் சார்பான அகமணக் குழுக்களும் காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தங்களுக்குள் மணம் புரிந்து கொள்ளும் முறை நிலப்பரப்புச் சார்ந்த அகமணம் (Territorial Endogamy) எனப்படும். இதைவிடச் சில ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு வெளியே மணம் செய்துகொள்வதில்லை இது ஊர் அகமணம் (Village Endogamy) எனப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமணம்&oldid=2266444" இருந்து மீள்விக்கப்பட்டது