உள்ளடக்கத்துக்குச் செல்

அகத்தணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்குகள் மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு ஆகியவற்றை அந்த நிறுவனத்தின் கணக்குத் துறைதான் தயாரிக்கிறது. பேரேடுகளில் உள்ள பதிவுகளை சரி பார்த்து இலாப நட்டக் கணக்குகள் மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு ஆகியவற்றுக்கு புறத்தணிக்கையாளர் சான்றளிக்கிறார். புறத்தணிக்கையாளருக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் நிறுவனம்தான் அளிக்கிறது. அவ்வாறு அளிக்கப்படும் தகவல்கள் சரியானதாகவும் பிழை இல்லாமலும் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்காக அகத் தணிக்கை யை அந்த நிறுவனம் உருவாக்குகிறது. பெரிய நிறுவனங்களில் இதற்காகத் தனித் துறையும் நிறுவப்படலாம். புறத்தணிக்கை, வெளியார் ஒருவரால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அகத்தணிக்கை, நிறுவன ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

புறத்தணிக்கை செய்பவருக்குக் குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அகத்தணிக்கையாளருக்கு இத்தகைய தகுதிகள் எதுவும் தேவையில்லை. அனுபவம் மட்டுமே போதும்.[1][2][3]

புறத்தணிக்கையாளரும் அகத்தணிக்கையாளரும்[தொகு]

புறத்தணிக்கை மிகக்குறைந்த காலத்திற்குள் முடிக்கப் படவேண்டியுள்ளது. இந்தக் குறுகிய காலத்திற்குள் கணக்குப் பேரேடுகளில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் முற்றிலும் சரிபார்ப்பது என்பது இயலாத காரியம். எனவே, புறத்தணிக்கையாளர், தாம் தேர்வு செய்யும் பதிவுகளை மட்டும் சரி பார்க்கிறார். சரியான, பிழை இல்லாத தகவல்களை வழங்க வேண்டியது நிறுவனத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். இப்பணியில் அகத்தணிக்கையாளரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே நிறுவனம் வழங்கும் தகவல்கள் பிழை அற்றதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அகத்தணிக்கையாளரும் நிறுவனமும் இணைந்து பல அகக் கட்டுப்பாடுகளை (Internal Controls) உருவாக்குகின்றனர்.

(எ.கா) நிறுவனத்தின் உள்ளிருந்து ஒரு பொருளை வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமெனில் இதற்காக சில நடை முறைகள் உள்ளன. இதற்கான கடவுச் சீட்டு தயாரிக்கப் பட வேண்டும். அதில் பொருளைப் பற்றிய விவரங்கள், அதன் பொறுப்பாளர், எடுத்துச் செல்பவர் பற்றிய விவரங்கள், நோக்கம், பொருள் மீண்டும் கொண்டு வரப்படுமா இல்லையா என்ற விவரம், பொறுப்பாளரின் கையொப்பம் ஆகியவை பதியப்பட வேண்டும். வெளியில் செல்லும்போது வாயிலில் உள்ள காவலர் பொருளையும் கடவுச் சீட்டில் உள்ள விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதோடு இந்த விவரங்களைத் தமது பதிவேட்டில் பதிந்து எடுத்துச் செல்பவரின் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்கிறார்.இத்துடன் கடவுச்சீட்டின் ஒரு பிரதியும் காவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பொருள் திரும்பவில்லை எனில் எடுத்துச் சென்றவர் மற்றும் பொறுப்பாளரின் கவனத்திற்கு இத்தகவல் கொண்டுவரப் படுகிறது. இத்தகைய செயல்முறையின் காரணமாக நிறுவனத்தின் பொருட்கள் காணாமல் போவதைத் தடுக்க முடியும். ஆனால், இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படவில்லையெனில் நிறுவனம் நட்டம் அடைகிறது. அப்படி நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நிறுவன மேலான்மையிடம்தான் உள்ளது. அப்படி நடந்தால் "அகக் கட்டுப்பாடுகள் " வலுவாக இல்லை என்று பொருள்.

எனவே "அகக் கட்டுப்பாடுகளை உருவாக்குவதும் அவை சரியான முறையில் ஆண்டு முழுவதிலும் பின்பற்றப் படுகின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் அகத் தணிக்கையாளரின் கடமை ஆகும். அகக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப் பட்டால் தவறுகளும் திருட்டுகளும் தவிர்க்கப் பட்டுவிடும். நிறுவனம், புறத் தணிக்கையாளருக்கு அளிக்கும் தகவல்களும் சரியானவைதான் என்ற நம்பிக்கையும் இருக்கும். புறத் தணிக்கையாளர், அகத் தனிக்கையாளரைப் பெரிதும் சார்ந்து உள்ளார். அகக் கட்டுப்பாடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத் தன்மை நன்றாக இருக்கும் என அவர் கருதுகிறார். இருந்தாலும் அகக் கட்டுப்பாடுகளை அவர் சோதித்து அறிய விரும்புகிறார். இதற்காக அவர் இரண்டு முறைகளைப் பயன்படுத்துவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. IIA's definition of audit.
  2. Wood, David A. (May 2012). "Corporate Managers' Reliance on Internal Auditor Recommendations". AUDITING: A Journal of Practice & Theory 31 (2): 151–166. doi:10.2308/ajpt-10234. 
  3. Wood, David A. (July 2009). "Internal Audit Quality and Earnings Management". The Accounting Review 84 (4): 1255–1280. doi:10.2308/accr.2009.84.4.1255. https://archive.org/details/sim_accounting-review_2009-07_84_4/page/1255. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்தணிக்கை&oldid=3761430" இலிருந்து மீள்விக்கப்பட்டது