டைட்டானிக் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைட்டானிக் நடவடிக்கை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

டைட்டானிக் நடவடிக்கை வரைபடம்
நாள் ஜூன் 5-6, 1944
இடம் பிரான்சு
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம் நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
படைப் பிரிவுகள்
வேந்திய வான்படையில் 138வது 161வது, 90வது, 149வது சுகுவாட்ரன்கள் 352வது, 716வது, 709வது தரைப்படை டிவிசன்கள்
12வது எஸ். எஸ் டிவிசன்
பலம்
40 வானூர்திகள்
10 வீரர்கள்
500 பொம்மைகள்
தெரியவில்லை
இழப்புகள்
2 விமானங்கள்
8 வீரர்கள்
தெரியவில்லை

டைட்டானிக் நடவடிக்கை (Operation Titanic) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் மீதான நேசநாட்டுப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் ஆரம்பித்தது. பிரான்சின் மேற்குப் பகுதியிலிருந்த நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கடல்வழியாகப் படைகள் தரையிறங்கும் பகுதி எது என்பதை ஜெர்மானியர்கள் அறிந்து கொள்ள இயலாதவாறு செய்ய அப்பகுதியில் பல இடங்களில் வான்குடை வீரர்கள் போல் செய்யப்பட்ட பொம்மைகளை விமானங்களிலிருந்து நேச நாட்டுப் படைகள் வீசினர். இந்த ஏமாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியே டைட்டானிக் நடவடிக்கை. ஜூன் 5ம் தேதி இரவு பிரிட்டனின் வேந்திய வான்படை விமானங்கள் பிரான்சின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொம்மை வான்குடை வீரர்களை தரையிறக்கின. இந்த பொம்மைகளில் சிறு வெடிகள் இணைககப்பட்டிருந்தன. அவை தரையில் பட்டவுடன் வெடிகள் வெடித்து பொம்மைகள் சிதறின. வான்குடைகள் விரிவதை வானில் கண்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வரும் ஜெர்மானிய வீரர்களுக்கு, விழுந்து கிடக்கும் வான்குடைகள் பல நூற்றுக்கணக்கான நேசநாட்டு வீரர்கள் அப்பகுதியில் தாக்குவதற்கு வந்துள்ளது போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. குண்டு வெடிப்பில் பொம்மை இருந்ததற்கான தடயங்கள் அழிக்கப்படும் விதம் அவை உருவாக்கப்பட்டிருந்தன.

கடல்வழி படையெடுப்பு கலே பகுதியில் நிகழுகிறது என்று ஜெர்மானியர்களை நம்பவைக்க அப்பகுதியில் இப்படி பல வான்குடைவீரர் பொம்மைகள் இறக்கப்பட்டன. இந்த பொம்மைகளுடன் சேர்ந்து தரையிறங்கிய சில பிரிட்டானிய சிறப்பு வான்சேவை வீரர்கள் துப்பாக்கி வெடிப்பு, மோர்ட்டார் பீரங்கி வெடிப்பு போன்ற ஒலிகளைப் பதிவு செய்து ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பினர். டைட்டானிக் நடவடிக்கையைத் தவிர பிரான்சின் பல்வேறு பகுதிகளில் கிளிம்மர், டாக்சபிள், ஏர்போர்ன் சிகார் என்ற குறிப்பெயர்களில் பிற ஏமாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில பிரிட்டானிய வான்படை சுகாவட்ரன்கள் மட்டும் தொடர்ந்து கலே பகுதியில் வானில் வட்டமிட்டன. கடல்வழிப் படையெடுப்பு அப்பகுதியில் தான் நிகழும் என ஜெர்மானியத் தளபதிகளை நம்ப வைத்தன.

இந்த ஏமாற்று வேலைகள் வெற்றி கண்டன. நார்மாண்டியில் படையெடுப்பு தொடங்கி பல நாட்களுக்கு ஜெர்மானியத் தளபதிகள் அதனை முக்கிய படையெடுப்பாகவே கருதவில்லை. கலே பகுதியில் தான் உண்மையான படையெடுப்பு நிகழப் போகிறது, நார்மாண்டியில் நடப்பது ஒரு திசை திருப்பும் முயற்சி என்று நம்பினர். இதனால் இருப்புப் படைகளையும் கலேவிலிருந்த படைகளையும் நார்மாண்டிப் பகுதிக்கு அனுப்பவில்லை. நார்மாண்டியில் தரையிறங்கிய நேசநாட்டுப் படைகள் ஓரிரு வாரங்களில் நார்மாண்டி பால முகப்பை பலப்படுத்தி பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைட்டானிக்_நடவடிக்கை&oldid=1358140" இலிருந்து மீள்விக்கப்பட்டது