சாரா பேர்ண்ஹார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா பேர்ண்ஹார்ட்

சாரா பேர்ண்ஹார்ட் ஜூன் 1877 இல், பொஸ்டன், மசசூசெட்சுக்குச் சென்றபோது.
இயற் பெயர் சாரா மேரி ஹென்றியட் ரோசைன் பர்னாட்
பிறப்பு 22 அக்டோபர் 1844 [1]
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு 26 மார்ச் 1923 (அகவை 78)
பாரிஸ், பிரான்ஸ்
நடிப்புக் காலம் 1862-1923
துணைவர் அம்புரோய்ஸ் அரிஸ்டைட் டமாலா (1882-1889)

சாரா பேர்ண்ஹார்ட் (Sarah Bernhardt) (22 அக்டோபர் 1844 – 26 மார்ச் 1923) ஒரு பிரெஞ்சு நாடக நடிகை ஆவார். உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற நடிகை எனவும் இவர் போற்றப்படுகிறார்.[2][3] பேர்ண்ஹார்ட் 1870 களில் ஐரோப்பிய மேடைகளில் புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இவர் மிகவும் வேண்டப்பட்ட நடிகை ஆனார். மிகவும் கருத்தூன்றி நடிக்கக்கூடிய ஒரு நடிகை என்னும் பெயரை இவர் பெற்றதுடன், தெய்வீகமான சாரா (The Divine Sarah) என்னும் பட்டப் பெயரும் இவருக்கு வழங்கப்பட்டது.

சாரா மேரி ஹென்றியட் ரோசைன் பர்னாட் என்னும் முழுப் பெயர் கொண்ட இவர் பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது தாயார் ஜூலி பர்னாட், தந்தை ஒரு டச்சு இனத்தவர். இவர் தனது தாயாரின் உடன்பிறந்தாரின் பெயரைத் தனது தந்தையின் பெயர் போலப் பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை இது தனது தந்தையார் யார் என்று தெரியாமல் இருந்ததை மறைப்பதற்காக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவரது பாட்டன் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த ஒரு யூத வணிகர். சாராவின் வாழ்க்கை பற்றிய தெளிவின்மைக்கான முக்கிய காரணம் திரிபு படுத்துவதும், பெரிது படுத்துவதுமான இவரது போக்கினாலாகும். சிலர் இவர் அயோவாவில் பிறந்து பிரான்ஸ் நாட்டுக்கு ஓடியவர் என்றும் அங்கே பிரான்ஸ் குடிமகள் என்னும் புதிய அடையாளத்தோடு நடிப்புத் தொழிலை மேற்கொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவர் 3000 தடவைகளுக்கு மேல் நடித்த நாடகமொன்றை எழுதிய அலெக்சாண்டர் டுமாஸ், பில்ஸ் என்பார், இவர் பொய் சொல்வதில் பெயர் பெற்றவர் என்கிறார்.

நடிப்புத் தொழில்[தொகு]

சாராவின் நடிப்புத்தொழில் 1862 ஆம் ஆண்டில், இவர் காமெடீ பிராங்கைஸ் (Comédie-Française) என்னும் பிரான்சின் புகழ் பெற்ற அரங்கில் பயின்றுகொண்டிருந்த காலத்தில் தொடங்கியது. எனினும் இவர் இதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. இதனால், இவர் 1865 ஆம் ஆண்டளவில் அங்கிருந்து விலகி ஒரு விலைமகள் ஆனார். இக்காலத்திலேயே இவர் தனது புகழ்பெற்ற சவப்பெட்டியை வாங்கினார். கட்டிலுக்குப் பதிலாகப் பல சமயங்களில் அதைத் தூங்கும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் நடித்த துன்பியல் பாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இது உதவியதாகக அவர் கூறிக்கொண்டார். 1870 களில் ஐரோப்பாவின் மேடைகளில் இவர் புகழ் பெற்றார். தொடர்ந்து முழு ஐரோப்பாவிலும், நியூ யார்க்கிலும் இவரது புகழ் பரவியது. நடிகையும், விலைமகளுமாகிய லியானே டி பூகி (Liane de Pougy) உட்படப் பல இளம் பெண்களுக்கு நடிப்புக் கலையைக் கற்றுத்தந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பெர்ன்ஹார்டின் தந்தையைப் பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை. மே 1871 இல் பாரிஸ் தன்னாட்சிப் பகுதியில் இருந்த நகரின் ஆவணக்காப்பகம், காப்பகம்,டி வில்லை விடுதி ஆகியவை எரிந்தபோது அவரது உண்மையான பிறப்புச் சான்றிதழ் அழிக்கப்பட்டது. தன் சுயசரிதையில், தன் தந்தை மா டூப்ரீ வை (Ma Dupree Vie), பல முறை சந்தித்ததை விவரிக்கிறார். அவரது குடும்பம் தன் கல்விக்காக நிதியுதவி அளித்ததாகவும், தான் வயதுக்கு வந்தபோது 100,000 பிராங்குகள் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.[4] அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததாகக் கூறியுள்ளார். அவர் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை பைசா(Pisa)வில் மர்மமான நிலையில் இறந்ததைக் குறித்து அவரால் விவரிக்க முடியவில்லை.[5] 1914ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், தன் சட்டப்பூர்வமான தந்தை எடோவர்ட் பெர்ன்ஹார்ட் (Édouard Bernhardt) என்று குறித்து, ஒரு மறுபரிசீலனை பிறப்பு சான்றிதழை வெளியிட்டார்.[6] 1856ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் நாள், இவருக்கு ஞானஸ்தானம் செய்து பெயரிடும்போது, "லே ஹேவ்ர்(Le Havre) நகரில் வசிக்கும், எடோவர்ட் பெர்ன்ஹார்ட் மற்றும் பாரிஸில் வசிக்கும் ஜூடித் வான் ஹார்ட் ஆகியோரின் மகள், சாரா பேர்ண்ஹார்ட்" என்று பதிவு செய்யப்பட்டது.[7] இவர் தன் சுயசரிதையில், தனது இளமைக் காலத்தில், லு ஹேவரியில் வசித்த தன் மாமா மற்றும் பாட்டி ஆகியோர் தனது கல்விக்கு நிதி உதவி அளித்ததைக் குறிப்பிட்டுள்ளார். தன் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட குடும்ப மன்றங்களில் பங்குபெற்றார். கலந்தாலோசித்தார். பின்னர் பாரிசில் தன் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட போது தன்னுடைய பணத்தை கொடுத்தார்.[4]

பிறப்புச் சான்றிதழின் அழிவு காரணமாக அவரது பிறந்த தேதியும் நிச்சயமற்றதாக உள்ளது. தனது பிறந்த நாளை, 1844 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாள் என்று அனைவருக்கும் தெரிவித்திருந்தார். அதையே தனது பிறந்த நாளாகக் கொண்டாடினார். 1914 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மறுசீரமைப்பு பிறப்பு சான்றிதழில் அக்டோபர் மாதம், 25ஆம் நாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.[8][9] பிற ஆதாரங்கள், அவரது பிறந்த நாளை, அக்டோபர் 22ஆம் நாள்[10] என்றும், அக்டோபர் 22ஆம் நாள் அல்லது அக்டோபர் 23ஆம் நாள்[11] என்றும் குறிப்பிடுன்றன.

பெர்ன்ஹார்டின் தாய் ஜூடித் அல்லது ஜூலி 1820களின் ஆரம்பத்தில் பிறந்தார். இவர், ஊர் ஊராகச் செல்லும், ஒரு டச்சு யூத பார்வைக்கண்ணாடி வியாபாரி மோரிட்ஸ் பாரூச் பெர்னார்ட் (Moritz Baruch Bernardt) என்பவருக்கும், ஜெர்மானிய ஆடை வெளுக்கும் பெண்ணுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் (ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன்) ஒருவராகப் பிறந்தார்.[12]

ஜூடிஸின் தாய் சாரா ஹிர்ஷ் (Sara Hirsch) (பிற்காலத்தில் ஜெனெட்டா ஹார்டாக் (Janetta Hartog) அல்லது ஜீன் ஹார்ட் (Jeanne Hard) என அழைக்கப்பட்டவர்) 1829 இல் இறந்துவிட்டார். ஐந்து வாரங்களுக்கு பின்னர் அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டார்.[13] அவருடைய புதிய மனைவி அவரது முந்தைய திருமணத்தில் பிறந்த குழந்தைகளைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளவில்லை. ஜூடித்தின் சகோதரிகள் ஹென்றிட்டே (Henriette) மற்றும் ரோசின் (Rosine) ஆகிய இருவரும் குறுகிய காலத்தில் லண்டனுக்குச் சென்றனர். பின்னர் பிரெஞ்சு கடற்கரையில் லீ ஹேவரில் குடியேறினர்.[14] ஹென்றிட்டே லீ ஹேவரில் உள்ள ஒரு உள்ளூர்வாசியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜூலியும் ரோஸனும் அரசவை மங்கையர்கள் ஆனார்கள். ஜூலி, கூடுதலாக புதிய பிரெஞ்சு பெயர் யூல் (Youle) மற்றும் மிகப்பெரிய பிரபுத்துவப் பெயர் வான் ஹார்ட் (Van Hard) ஆகியவற்றைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார். ஏப்ரல் 1843 இல், இரட்டைப் பெண்களைப் பெற்றெடுத்தார். அவர்களுக்கு அப்பா பெயர் தெரியவில்லை. ஒரு மாதம் கழித்து லீ ஹேவாரில் இரண்டு பெண்களும் இறந்தனர். அடுத்த வருடம், யூல் மீண்டும் கர்ப்பமானார். பின்னர் அவர் பாரிசுக்குக் குடிபெயர்ந்தார். 1844 அக்டோபரில் சாரா பிறந்தார்.[15]

விமர்சன மதிப்பீடுகள்[தொகு]

பிரெஞ்சு நாடக விமர்சகர்கள் பெர்ன்ஹார்ட் நடித்த நிகழ்ச்சிகளை பாராட்டினர். 1871 ஆம் ஆண்டு பாரிஸ் நகரின் சீர்மிகு விமர்சகரான பிரான்சிஸ்க் சர்சி (Francisque Sarcey) என்பவர், மேரி (Marie) எனும் இதழில், சாரா பர்னாடின் நடிப்பு பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்: "சாரா பர்னாட் இறையாண்மை உடையவர். கருணை உள்ளம் கொண்டவர். ஊடுருவும் அழகி. இயற்கையானவர். ஒரு ஒப்பற்ற கலைஞர்".[16]

1872 ஆம் ஆண்டில், ரூய் பிலாஸ் (Ruy Blas) என்ற நாடகத்தில் பெர்ன்ஹார்டின் செயல்திறனை மதிப்பாய்வு செய்த விமர்சகர் தியோடர் டி பான்வில்லி (Théodore de Banville), நீலச்சிட்டு பாடுவது போலவும், காற்றின் முணுமுணுப்புகளைப் போன்றும், நீரின் சலசலப்பைப் போலவும், பூமியின் பளபளப்பைப் போலவும் அவரது வெளிப்பாடு உள்ளது[17] என்று கூறுகிறார். இதே நிகழ்வை, பிரான்சிஸ்க் சர்சி, "பாடல் அடிகள் மற்றும் கவிதை வரிகளின் இசைக்கு அவரது குரலின் இசை சேர்ந்து மெருகூட்டியது. அவள் பாடினார், ஆமாம், அவளது மென்மையான குரலில் பாடினார் ..."என்று கூறுகிறார்.[17] பெர்ன்ஹார்ட்டின் மீது ஆர்வமுள்ள ஆர்வலர், விக்டர் ஹ்யூகோ (Victor Hugo) மேற்காண் நிகழ்வை, தன்னுடைய கார்னெட்ஸ் என்ற பத்திரிக்கையில், "இந்த நாடகம் முதல் முறையாக உண்மையாக சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெர்ன்ஹார்ட் ஒரு பெண். ஒரு நடிகையை விட மேன்மையானவர். போற்றுதலுக்குரியவர். சிறந்த அழகி. இணக்கமான இயக்கம் மற்றும் கவர்ச்சியான மயக்கத்தின் தோற்றம் கொண்டவர். தங்கமான குரல் உடையவர்",[17] என்று கூறுகிறார்.

இவரது 1882 ஆம் ஆண்டின் ஃபெடோரா(Fédora) என்ற நாடகத்தில் பெர்ன்ஹார்டின் செயல்திறனை மதிப்பாய்வு செய்த பிரெஞ்சு விமர்சகர் மௌரிஸ் பாரிங் (Maurice Baring) என்பார், பெர்ன்ஹார்டிடமிருந்து, ஒரு இரகசிய வளிமண்டலம் வெளிவந்ததாகவும், ஒரு நறுமணம் வீசுவதாகவும், ஒரு கவர்ச்சியான மூளையத்தற்குரிய ஒரு ஈர்ப்பு அவரிடம் இருப்பதாகவும், அவர் உண்மையில் பார்வையாளர்களை மயக்கமடையச் செய்ததாகவும், நல்ல கலை, கெட்ட கலை எதுவானாலும், புலி உணர்வு கொண்ட அவர், பூனைபோல் பதுங்கிச் செயல்படுகிற நளினமான இயக்கம் கொண்டிருந்தார் என்றும், அவருடன் யாரும் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.[18]

சாரா பர்னார்டின் நடிப்பு பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பின்வருமாறு எழுதியுள்ளார்: அவருடைய குழந்தைத்தனமான நடிப்புத் திறன் அவரைத் தன் நடிப்பின் மீது தன்மை தற்பெருமை காட்டுகின்றகொள்ளச் செய்கிறது. ஒருவர், சாரா பர்னார்ட் பற்றி மிகவும் அதிகமாக நினைக்கவோ அல்லது அதிக ஆழமாக உணரவோ செய்யும் அளவுக்கு அவர் திறமை உள்ளது. அவர் கலை மிகவும் பாராட்டப்படக்கூடியது. அவர் மீது இரக்கம் ஏற்படும். அவர் வாகையாளர். அனைவரும் அவருடன் அழுவர். அனைவரும் அவரது நகைச்சுவைகளில் சிரிப்பர். அவரது  நல்வாய்ப்புகளை பின்பற்றுவதைக் காணும்போது மூச்சுத்திணறல் ஏற்படும். நாடக இறுதித் திரை விழுந்தால் அதிக கைத்தட்டல் பெறுவார். இது பார்ப்பவரை ஏமாற்றும் கலை"[19]

இவான் துர்கனேவ் (Ivan Turgenev), "அவளுக்கு ஒரு அற்புதமான குரல் இருக்கிறது. மற்ற குளிர்ச்சி, பொய்மை, பதிப்பு, கடும் எதிர்ப்பு போன்றவை மறைந்துள்ளன" என்று எழுதியுள்ளார்.[20][21][22]

இறைநம்பிக்கை மற்றும் வேத நெறி[தொகு]

பெர்ன்ஹார்ட் ஒரு பெண் துறவியர் மடப் பள்ளியில் பயின்றார். அங்கு 1856 இல் ரோமன் கத்தோலிக்காக தனது முதல் புனித நற்கருணையைப் பெற்றார். அதன் பிறகு, உணர்ச்சிப்பூர்வமான சமயப் பற்றுடையவரானார். எனினும், அவள் யூத பாரம்பரியத்தை ஒருபோதும் மறந்துவிடவில்லை.

பல வருடங்களுக்கு பிறகு நிருபர் ஒருவருக்கு, நீங்கள் ஒரு கிறிஸ்தவரா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், தான் ஒரு ரோமன் கத்தோலிக்கர் என்றும், பெரிய யூத இனத்தின் உறுப்பினராக இருப்பதாகவும், கிறிஸ்துவர்கள் நன்றாக வரும் வரை தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.[23] அவள் இறப்பதற்கு சற்றுமுன் தன் இறுதிச் சடங்குகளை ஏற்றுக்கொண்டார்.[24] அவரது வேண்டுகோளின்படி, செயிண்ட்-பிரான்சுவா-டி-சேல்ஸ் தேவாலயத்தில் அவரது இறுதி ஊர்வலம் மாபெரும் விழா கொண்டாடப்பட்டது.

இறப்பு[தொகு]

1923 ஆம் ஆண்டில் இவர் சிறுநீரகச் செயலிழப்பினால் உயிரிழந்தார். [25]

படத்தொகுப்பு[தொகு]

பாரிஸ் நகரின் ஃப்ரங்கொய்ஸ் சிகார்டில் (François Sicard) உள்ள சாரா பேர்ண்ஹார்ட் சிலை
Sarah Bernhardt Mucha
கிளைரின்(Clairin) நாடகத்தில் மெலிசன்டே(Mélisande)வாக சாரா பேர்ண்ஹார்ட்
1864 சாரா பேர்ண்ஹார்ட்
1864 நடார் தொகுப்பில் சாரா பேர்ண்ஹார்ட்

மேற்கோள்கள்[தொகு]

  1. She was baptised in 1857, when she was about 12, but the record is missing. A birth date taken from a certificate of a baptism conducted at the age of 12 would not be reliable as a primary source, and could only be used to corroborate other evidence. (In The Art of High Drama, a Professor Ockman describes finding an "unidentified newspaper clipping" in the Bibliothèque de la Comédie Française in Paris, which included a copy of a baptismal certificate saying Bernhardt was born on 25 September 1844.) It has been claimed that "Bernhardt sometimes celebrated her birthday on 23 October", although there is no verification of this claim. Bernhardt's 1907 autobiography Ma double vie (My Double Life) made no reference to her date of birth.
  2. Sarah B
  3. Gottlieb, Robert. "The Drama of Sarah Bernhardt". nybooks.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2007.
  4. 4.0 4.1 Bernhardt 2000.
  5. Bernhardt 2000, ப. 67.
  6. Tierchant 2009, ப. 322.
  7. Tierchant 2009, ப. 27.
  8. Tierchant 2009, ப. 15.
  9. Skinner 1967, ப. 1.
  10. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  11. [2] Encyclopedia Brittanica Online
  12. Tierchant 2009, ப. 14.
  13. Snel
  14. Tierchant & 2009 2009, ப. 14.
  15. Tierchant 2009, ப. 13-15.
  16. Tierchant 2009, ப. 91.
  17. 17.0 17.1 17.2 Tierchant 2009, ப. 95.
  18. Skinner 1967, ப. 216-216.
  19. Gold and Fizdale, "The Divine Sarah- A Life of Sarah Bernhardt (1991),
  20. Tierchant 2009, ப. 188.
  21. Gottlieb 2010.
  22. Shapiro, Leonard, Turgenev and his Times (1978), Harvard University Press
  23. Skinner 1967, ப. 13.
  24. Menefee, David W. (2003) Sarah Bernhardt in the Theater of Films and Sound Recordings. North Carolina: McFarland. ISBN 078641636X
  25. "Obituary: Mme. Sarah Bernhardt". North-China Herald, 31 March 1923, p. 866.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பேர்ண்ஹார்ட்&oldid=3243705" இலிருந்து மீள்விக்கப்பட்டது