மூன்றாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் மூன்றாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

மூன்றாவது நாளில் பீஷ்மர், கருட வியூகமாக தனது படையை அமைத்து தாமே அதன் முன்னணியில் நின்றார். துரியோதனன் வியூகத்தின் பின்பக்கத்தில் தனது படையினருடன் நின்று காத்தான். பாண்டவர் அணியில் அருச்சுனனும் திருட்டத்துயும்னன்தங்களுடைய படையை இரு கொம்பு சந்திர வடிவமாக வகுத்தார்கள். பிறையின் வலப்பக்கத்துக் கொம்பில் பீமனும், இடக்கொம்பில் அருச்சுனனுமாக படையை காத்து நடத்தினார்கள்.

கடோற்கஜன் தனது தந்தை பீமனுடன் இணைந்து துரியோதனனை எதிர்த்தான். பீமனுடைய அம்பு துரியோதனனை இடித்ததில் அவன் மூர்ச்சையடைந்தான். இதனையடுத்து கௌரவர் படையில் நிகழ்ந்த குழப்பத்தை பீஷ்மரும் துரோணரும் மிகவும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினர். மீண்டும் திரும்பி வந்த துரியோதனன் பீஷ்மரை தாக்கிப் பேசினான் – “ நீரும் துரோணரும் நின்று தலைமை வகித்த படை இவ்வாறு சிதறியடிக்கப்படும்போது அந்த அவமானத்தை எவ்வாறு பொறுத்து சும்மா நிற்கிறீர்கள்? பாண்டவர்களிடம் உமக்குள்ள அன்பே இதற்குக் காரணம். இவர்களை எதிர்ப்பது உண்மையில் உங்களுக்குக் கடினமன்று. நீரும் துரோணரும் என்னைக் கைவிடுவதாயிருந்தால் இப்போதே சொல்லிவிடலாம்.” துரியோதனன் இடித்துச் சொன்ன வார்த்தைகள் பீஷ்மரின் கோபத்தைத் தூண்டியதால், மிகுந்த ஆவேசத்துடன் போர் செய்தார். கிருஷ்ணன் தேரை பீஷ்மர் நோக்கி செலுத்தி, அருச்சுனனை பீஷ்மருடன் போரிட வைத்தான். இதன் பிறகு நடந்த மோதலில் பீஷ்மரின் தாக்குதல் பலமாக இருந்தது. 'பீஷ்மரிடம் கொண்டிருக்கும் மரியாதை காரணமாக அருச்சுனன் சரியாக போர் செய்யவில்லை' என்று கிருஷ்ணன் தனக்குள் எண்ணினான். உடலில் பல இடங்களில் அருச்சுனனும் கிருஷ்ணனும் அம்புகளால் அடிபட்டார்கள். “இனி பொறுக்க முடியாது. பீஷ்மரை நானே கொல்வேன்.” என்று கிருஷ்ணன் தனது சக்ராயுதத்தை கையில் பிடித்து பீஷ்மரை நோக்கிச் சென்றான். அருச்சுனன் கிருஷ்ணனை துரத்திக் கொண்டு ஓடினான். “கோபம் வேண்டாம்! திரும்புவாயாக. இந்தக் காரியத்தை நான் செய்கிறேன்” என்று அருச்சுனன் சொன்னபிறகு, கிருஷ்ணன் மறுபடியும் தேர்ப்பாகனாய் தன் பணியைத் தொடர்ந்தான். அதன்பின் அருச்சுனன் கௌரவர் படையை பலமாகத் தாக்கினான். அன்று மாலையில் கௌரவர் படை பெரும் தோல்வியுற்று பாசறை திரும்பியது.

நிகழ்ந்த மரணங்கள்[தொகு]

அருச்சுனனின் வீரம், கௌரவர் படையின் ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரைப் பறித்தது.

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.