வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

கிறித்தவ சிறப்புக் கட்டுரை துணைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list[தொகு]

வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/1

போரில் கொல்லப்பட்ட சிறுவன் விஜயகுமார் தனுசன்.

பாஸ்கா திருவிழிப்பு என்பது இயேசு கிறித்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் ஆண்டுதோறும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம் ஆகும். இது புனித சனிக்கிழமை மாலையில், பொழுது சாய்ந்த பிறகு முன்னிரவு நேரத்தில் கொண்டாடப்படும். சனிக்கிழமை மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வருகின்ற உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக் கிழமையின் தொடக்கமாக அமைகிறது. மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயிர்த்தெழுதலாலும் வென்று, மனிதருக்குப் புது வாழ்வு அளித்தார் என்று கிறித்தவர்கள் நம்புவதால் கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மையமாக இவ்விழா உள்ளது. வழிபாடு நடைபெறும் கோவிலில் எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். கோவில் முற்றத்தில் இருள்சூழ்ந்த நிலையில் புதுத்தீ உருவாக்கப்படும். அங்கு குருவும் திருப்பணியாளரும் செல்வர். மக்களும் சூழ்ந்து நிற்பர். ஒருவர் பாஸ்கா திரியை எடுத்துச் செல்வார். சாவினின்று வாழ்வுக்குக் கடந்துசென்ற இயேசு மனிதருக்குப் புது வாழ்வு அளிக்கிறார் என்னும் கருத்தை உள்ளடக்கிய இறைவேண்டலுக்குப் பின் குரு தீயை மந்திரிப்பார். அதிலிருந்து பாஸ்கா திரி ஏற்றப்படும்.





வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/2

பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19இலிருந்து ஏப்ரல் 22 காலப்பகுதியில் இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி. மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர்.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/3

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது. இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர் போன இடமாக இருந்தது. கடலோர நெடுஞ்சாலை என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்தையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது. இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபும் ஆவர். கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார்.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/4

இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் என அழைக்கப்படுகிறது. இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்களின் நம்புகின்றனர். இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார்; அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா, விண்ணேற்றப் பெருவிழா என்னும் திருநாட்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/5

தமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் செருமானியரான பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க். பழைய ஏற்பாடு முழுமையாக முடிவடையாத பொழுதே சீகன்பால்க் இறந்துவிட்டதால் பெஞ்சமின் சூல்சு என்பவர் அப்பணியைச் செய்து முடித்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியையும் திருத்தினார். இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப்பின் ஆதரவின் கீழ் வெளியானது. திருவிவிலியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு கத்தோலிக்க கிறித்தவ சபைகள் வெளியிட்ட நூல்கள் மூலம் பிரபலமடைந்தது. அருட்திரு ஞானப்பிரகாசம் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தாவில் 1932 இல் அச்சிடப்பட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணி 1972இல் தொடங்கி 1995இல் முடிவுற்றன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்றழைக்கப்படுகிறது.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/6

திருவோவியம் என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். கிரேக்க மொழியில் இது εἰκών என அழைக்கப்படுகிறது. மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு நிகழ்த்த கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன. கிறித்தவ கீழைத் திருச்சபைத் திருவோவியங்கள் பெரும்பாலும் மூவொரு கடவுள், இயேசு, அன்னை மரியா, புனிதர்கள், வானதூதர்கள், திருச்சிலுவை போன்ற பொருள்களைச் சித்தரித்தன. அவை பொதுவாகத் தட்டையான மரப் பலகையில் எழுதப்பட்டன. சில சமயங்களில் உலோகம், கல், துணி, தாள் போன்றவற்றிலும் பதிக்கப்பட்டன. கற்பதிகை முறையில் அமைந்த திருவோவியங்களும் உண்டு. முப்பரிமாணத்தில் கல், பளிங்கு, உலோகம் போன்றவற்றில் திருச்சிலைகள் செய்வது பண்டைய கிறித்தவ வழக்கில் இல்லை. யூத மரபைப் பின்பற்றி, கடவுளுக்குக் கையாலான சிலைகளை உருவாக்கலாகாது என்னும் எண்ணம் அக்காலத்தில் நிலவியது. தம்மைச் சூழ்ந்திருந்த கிரேக்க-உரோமைய சமயங்களிலிருந்து தங்கள் சமயத்தை வேறுபடுத்திக் காட்டவும் கிறித்தவர் இவ்வாறு செய்தனர்.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/7

பிராகா நகர் குழந்தை இயேசு என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசின் பிராகாவில் உள்ள வெற்றி அன்னையின் ஆலயத்தில் அமைந்துள்ளது. 1628ல் இளவரசி பொலிக்சேனா பிராகா கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதில் இருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இந்த சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்த சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது. இன்றளவும், பிராகாவின் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகாவின் குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/8

புனித மரியா பெருங்கோவில் என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. இக்கோவில் உரோமை நகரில் "எஸ்குயிலின்" என்னும் ஒரு குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போது உள்ள கட்டடம் கிபி 432-440 ஆண்டுக் காலத்தில் திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவரால் எழுப்பப்பட்டு, புனித மரியாவின் வணக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. 431 இல் நிகழ்ந்த எபேசு பொதுச் சங்கத்தில் அன்னை மரியா கடவுளும் மனிதருமாகிய இயேசுவை இவ்வுலகிற்கு ஈன்றளித்ததால் உண்மையாகவே "கடவுளின் தாய்" என்னும் வணக்கத்துக்கு உரியவர் என்னும் கிறித்தவக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித மரியா கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி, அழகுபடுத்தினார். கோவிலில் உள்ள "வெற்றி வளைவு" என்னும் பகுதி அத்திருத்தந்தை காலத்தைச் சார்ந்ததே. அதில் "ஆயர் சிக்ஸ்துஸ் கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" என்னும் பதிவு உள்ளது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டு கலை அம்சங்களில் முக்கியமான ஒன்று கோவிலின் நடு நீள்பகுதியை அணி செய்கின்ற பதிகைக்கல் ஓவியங்கள் ஆகும்.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/9

விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர். விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை.




வலைவாசல்:கிறித்தவம்/சிறப்புக்கட்டுரை/10

தாலந்துகள் உவமை என்பது இயேசு சொன்ன சிறு கதைகளுள் ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாகக் குறிப்பிடலாம். இது புனித விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது. இங்கு தாலந்துகள் என்பது "talanton" என்ற கிரேக்கச் சொல்லின் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும். இது கிறிஸ்துவுக்கு முன்னரான காலந்தொடங்கி கிரேக்கம், உரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிறை மற்றும் நாணயத்தின் அலகாகும். இச்சொல்லே பின்னர் பழைய ஆங்கிலத்தில் "talente" என மருவி இன்று "Talents" எனவும் மருவி திறமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் உருவான விவிலியத் தமிழ் மொழிபெயர்ப்புகள் இச்சொல்லை தாலந்து என மொழிபெயர்த்தன. இது தமிழ் பேசும் கிறித்தவரிடையே "கடவுளின் கொடைகள்" என்ற பொருள்பட வேரூன்றி விடவே பின்னர் வந்த தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகளும் தாலந்து என்ற இதே சொல்லையே கையாள்கின்றன





முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.
[[Image:{{{image}}}|100px|{{{caption}}}]]

{{{text}}}

[[{{{link}}}|மேலும்...]]