பரிவு மசக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிவு மசக்கை அல்லது பரிவுச் சினை (sympathetic pregnancy) என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும். பேறுகால வலி, பேற்றுக்குப்பின் ஏற்படும் உளச்சோர்வு, சில உணவுகள் மீதான ஆர்வம் ஆர்வமின்மைகள், பாலியல் விலக்கங்கள் போன்ற அறிகுறிகள் இவ்விளைவின்போது தென்படுகின்றன.[1] இவ்வாண்களுக்கு ஏற்படும் பேறுகால வலியை பரிவு வலி எனலாம்.

அடைகாத்தல் எனப் பொருள்படும் கௌவேடு என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லைக் கொண்டு இவ்விளைவை கௌவேடு நோய்க்கூட்டறிகுறி (couvade syndrome) என்று அழைப்பர். சித்திராபோ என்ற கிரேக்க பயணி, மார்க்கோ போலோ என்ற வெனிசிய பயணி ஆகியோரின் குறிப்பேடுகளில் உட்பட வரலாற்றில் பல இடங்களில் இவ்விளைவைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். பல பழங்குடிகளிலும் அண்மைய மாந்தவியலாளர்கள் இவ்விளைவைக் கண்டுள்ளனர். இக்குடிகளில் இது பேய் பிசாசுகளின் வேலையாக இருக்கும் என்ற மூட நம்பிக்கையும் உண்டு.

அறிகுறிகள்[தொகு]

பரிவு மசக்கை கொண்ட நபருக்கு வயிற்று வலி, செரிமானக் குறைபாடு, பசிநிலையில் மாற்றம், எடை கூடுதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தலைவலி, பல் வலி,[2] உணவின் மீது பேரார்வம், குமட்டுதல், மார்பு வளர்ச்சி, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்படலாம். மிகக் கடுமையான நிகழ்வுகளில் ஒரு ஏழு மாதம் கருவுற்றுள்ள பெண்ணை ஒத்த அளவுக்கு ஆண்களுக்கு வயிறு பெரிதாகி 25-ல் இருந்து 30 பவுண்டு வரை எடை கூடுவதுண்டு. இது போன்ற நிகழ்வை போலிக் கர்ப்பம் என்பர்.

விளைவுத் தூண்டுதல்[தொகு]

இவ்விளைவு ஏற்படுவதற்கான காரணங்களை இன்னும் அறுதியிடவில்லை என்றாலும் ஆய்வர்கள் பல கருதுகோள்களை முன்வைத்துள்ளனர். உளவியல் அடிப்படையில் கலக்கம், ஏக்கம், சவலைப் போலி, கருவுடன் ஒன்றும் நினைவு, தந்தையாவது குறித்த தெளிவின்மை, தந்தையாவதை அறிவித்தல், பேறுகாலப் பொறாமை போன்ற காரணங்கள் இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.[2]

உறவியற் படிநிலையில் இவ்விளைவு பேறுகாலத்திலும் குழந்தை ஈனும் நிகழ்விலும் இருபாலர்களுக்கிடையே ஆன வேறுபாடுகளைக் குறைக்கும் வண்ணம் ஏற்படுகிறது என்பர். குழந்தையின் வாழ்வில் தந்தையின் இடத்தை உறுதி செய்யவும் இருபாலர் சமன்பாட்டை ஏற்படுத்தவும் இது உதவும். ஆண்-பெண் வேறுபாடு குறைந்து பெண் உயர்நிலையில் உள்ள சூழல்களில் இது மிகுதியாக அறியப்பட்டுள்ளது.[3]

கருவுற்றிருக்கும் பெண்ணுடன் வாழும் ஆண் துணைவரது உடலில் புரோலாக்டின், கார்ட்டிசால், எசுட்டிரடியால், டெசுட்டோசிட்டிரான் போன்ற ஊக்கிகளின் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.[4] இது பேறுகாலத்தில் மூன்றாவது மாத இறுதியில் தொடங்கி குழந்தை பிறந்து சில கிழமைகள் வரை தொடரலாம்.[4] இது ஏற்படும் வழிமுறை இன ஈர்ப்புச் சுரப்பு (pheromone), நாடொறு இசைவு (circadian rhythm), மன அழுத்தம், இழைப்பிறப்பாக்கம் (mitogenetics) போன்ற கூறுகளைச் சார்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தூங்கும் நேரங்களில் ஏற்படும் மாறுபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. கௌனிகான், பக்.69
  2. 2.0 2.1 Klein, 1991
  3. Abensour, Léon. "Histoire générale du féminisme".
  4. 4.0 4.1 A.E. Storey; C.J. Walsh, R.L. Quinton, K.E. Wynne-Edwards (2000). "Hormonal Correlates of Paternal Responsiveness in new and expectant fathers". Evolution and Human Behavior 21: 79–95. doi:10.1016/S1090-5138(99)00042-2. https://archive.org/details/sim_evolution-and-human-behavior_2000-03_21_2/page/79. 

மேற்கோள்கள்[தொகு]

  • Klein, H. Couvade syndrome: male counterpart to pregnancy. Int J Psychiatry Med, 21: 1, 1991, 57-69.
  • Counihan, Carole. The Anthropology of Food and Body: Gender, Meaning, and Power. New York: Routledge, 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவு_மசக்கை&oldid=3521305" இலிருந்து மீள்விக்கப்பட்டது