சீரணி நாகபூசணி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரணி நாகபூஷணி அம்மன் மூலஸ்தானம்

சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள "சீரணி"யில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள். தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, மற்றும் சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

கோயில் அமைவு[தொகு]

யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 7 மைல் தூரத்தில் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் - சீரணிச் சந்தியிலிருந்து சுமார் 50 யார் தூரத்திலே அமைந்துள்ளது நாகம்மை கோயில். இதன் அயலில் ஐயனார் கோயில், காளி கோயில் முதலான ஆலயங்கள் விளங்குகின்றமை குறிப்பிடக்கூடியது.

வரலாறு[தொகு]

அக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் இயந்திரம் வைத்துப் பூசை செய்து பிரபல்யமாகச் சாத்திரம் சொல்லி வந்தார்.

இவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம், இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர்ச்சகுனங்கள் நிகழ்ந்தன. அவை முத்தர்க்கு பிடிக்காமையாலும், இயந்திரம் இராக்காலத்தே கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார். ஒருநாள் முத்தர் நன்றாய் மதுபானம் அருந்திவிட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டினருகாமையிலுள்ள ஓர் அலரிப் பூம்பற்றைக்குட் போட்டுச் சென்று விட்டார். எம்பெருமாட்டி நாகபூஷணியம்மை இங்குள்ள அன்பர்கள் பலரிடத்தே கனவிற் தோன்றி "நான் நயினை நாகபூஷணி, என்னை ஆதரியுங்கள்" எனக் காட்சியளிப்பாளாயினள். "நாமெல்லோரும் வறியவர்கள் தாயே! எங்ஙனம் எங்களால் ஆதரிக்க முடியும்" என அன்பர்கள் கூறி வருந்தினார்கள். "என்னை ஆதரியுங்கள், தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும், நாடு நலம்பெறும், வாழ்வு வளம் பெறும்" என்று அவ்வன்பர்களுக்கு அருள் பாலித்துக் குறித்த அன்பராகிய முருகேசபிள்ளைக்குக் கனவிலே வெளிப்பட்டுப் பல முறைகளிலும் பல திருவருட் தன்மைகளைக் காட்டியருளினாள்.

ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு "இவ்விடத்திலே நம்மைத் தாபித்து வழிபட்டு வருவாயாக" என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி அச்சொப்பனங்களைப் பிறருக்குச் சொல்லாது தம்முள்ளே சிந்தித்து வழிபட்டு வருவராயினர்.

இங்ஙனமான 1896 விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்றிரவு தேவி சொப்பனத்திலே வெளிப்பட்டு, "உனக்குச் சொன்னவைகளை நீ உண்மையென்று சிந்தித்தாய் இல்லை. அதனுண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா!" என்று கூறியருளினார். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த, வரண்ட படுமரமாகத் தோன்றியது, அதையுணர்ந்த அவர் "அதிற் குரும்பைகள் இல்லையே! யான் உமக்கு எப்படி இளநீர் தரக்கூடும்", என "நன்று! நீ சென்று சமீபத்திலே பார், வேண்டிய குலைகள் தோன்று"மென அம்மையார் அருளினார். அங்ஙனமே அவர் சென்று பார்த்துத் தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில குரும்பைகளைப் பறித்துக் கொணர்ந்து கொடுத்தார். அவரும் அதிக தாகமுடையார் போலப் பருகினர். பின்னர் அவரை நோக்கி "அன்பனே! இந்த இடத்தைத் தோண்டிப்பார், இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்துள் பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு இட்ட சித்திகளையெல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களையெல்லாம் காணிக்கையாக இடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்குக. அது பூர்த்தியாகும் வண்ணம் அருள் செய்வோம். நமக்கு வழிபாடு அன்பின் பூசையேயாகும். மேலும் உனது மனம் புனிதமுறும் வண்ணம் ஒரு மந்திரமும் உபதேசஞ் செய்வோம்" எனவருளி, மறைந்தருளினார்.

சிலை தோன்றுதல்[தொகு]

குறிப்பிட்ட இடத்தை மறுநாள் அகழ்ந்து பார்த்தார். ஆங்கு ஒரு விம்ப வடிவமைந்த சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். (1896) ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே, பூசை தொடங்கி காலந் தவறாது நடப்பித்து வந்தார். நானா திசைகளினின்றும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். நாகபூஷணியம்மையை வழிபட்டனர்.

இவ்வரலாறு குறித்தும், குட்டம், காசம், ஈளை முதலான கன்ம நோய்களினால் வருந்தியோர் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டுத் தம்நோய்கள் தீரப் பெற்ற கதைகளும், நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் எம்பெருமாட்டி எழுந்தருளியிருக்கும் இத்தலத்தையடந்து வந்தனை வழிபாடுகள் புரிந்து பிள்ளைச் செல்வம் பெற்று உய்வடைந்த கதைகளும் அம்பாளின் அருட் செயல்கள் பற்றிப் பல கர்ணபரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன.

இக்கால நிலை[தொகு]

சண்டிருப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962, அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு, பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]