நிலைமின் எதிர்ப்புத் தரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலைமின் எதிர்ப்புத் தரை என்பது, நிலைமின்சாரத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யாததாகவும், அவ்வாறு உருவானாலும் அதனைப் நிலத்துக்குக் கடத்திவிடக்கூடிய வகையில் நிலத்துடன் இணைக்கப்படக் கூடியதாகவும் இருக்கும், ஒரு கட்டிடத் தரையைக் குறிக்கும். நிலைமின்னினால் பாதிக்கப்படக்கூடிய மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்தும் இடங்களில் இத்தகைய தரைகள் அமைக்கப்படுகின்றன. தற்காலத் தொழில் நுட்பங்களில் தங்கியுள்ள தரவு மையங்கள், வங்கிகள், அறுவை மருத்துவக் கூடங்கள், வானூர்திக் கட்டுப்பாட்டு அறைகள் போன்ற இடங்களில் இத்தகைய தரைகள் முக்கியமானவை.

நிலைமின் உருவாதல்[தொகு]

இரண்டு பொருட்கள் உராயும் போது நிலைமின் உருவாவதால், தரையின்மீது நடப்பது தரையில் நிலைமின் உருவாவதற்கான முக்கிய காரணம் ஆகும். இவ்வாறு உருவாகும் மின் வேறெங்கும் கடத்தப்படாவிட்டால் அத்தரயிலேயே சேமிக்கப்படும். இவ்வாறான தரைகள் அதன்மீது நடக்கும் மனிதர்களிலும் மின்னேற்றத்தை உருவாக்கும். இவர்கள் சாதனங்களைத் தொடும்போது விரைவாக மின்னிறக்கம் ஏற்படுகின்றது. இதனால் உணர்திறன் கூடிய மின்னணுச் சாதனங்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

கட்டிடப்பொருட்கள்[தொகு]

நிலைமின் எதிர்ப்புத் தன்மை கொண்டவையாக உற்பத்தி செய்யப்படும் தரைமுடிப்புக்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிலைமின் எதிர்ப்புத் தரைகள் உருவாக்கப்படுகின்றன. சில காலங்களுக்கு முன் இத்தைகைய தரை முடிப்புப் பொருட்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. கடத்துதிறன் கொண்ட வைனைல் விரிப்புக்கள் அல்லது வைனைல் தரை ஓடுகளே பரவலாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய பல பொருட்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.