விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 24, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஸ்கா திருவிழிப்பு என்பது இயேசு சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கத்தோலிக்க திருச்சபையும் பிற கிறித்தவ சபைகளும் ஆண்டுதோறும் சிறப்பிக்கின்ற கொண்டாட்டம் ஆகும். இது புனித சனிக்கிழமை மாலையில், பொழுது சாய்ந்த பிறகு முன்னிரவு நேரத்தில் கொண்டாடப்படும். மாலையிலேயே விழா தொடங்கும் என்பதால் பாஸ்கா திருவிழிப்பு அதை அடுத்து வருகின்ற உயிர்த்தெழுதல் ஞாயிறின் தொடக்கமாக அமைகிறது. மனித குலத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பாவம், சாவு ஆகியவற்றை இயேசு தம் சிலுவைச் சாவினாலும் உயிர்த்தெழுதலாலும் வென்று, மனிதருக்குப் புது வாழ்வு அளித்தார் என்று கிறித்தவர்கள் நம்புவதால் கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மையமாக இவ்விழா உள்ளது. வழிபாடு நடைபெறும் கோவிலில் எல்லா விளக்குகளும் அணைக்கப்படும். கோவில் முற்றத்தில் இருள்சூழ்ந்த நிலையில் புதுத்தீ உருவாக்கப்படும். அங்கு குருவும் திருப்பணியாளரும் செல்வர். மக்களும் சூழ்ந்து நிற்பர். ஒருவர் பாஸ்கா திரியை எடுத்துச் செல்வார். சாவினின்று வாழ்வுக்குக் கடந்துசென்ற இயேசு மனிதருக்குப் புது வாழ்வு அளிக்கிறார் என்னும் கருத்தை உள்ளடக்கிய இறைவேண்டலுக்குப் பின் குரு தீயை மந்திரிப்பார். அதிலிருந்து பாஸ்கா திரி ஏற்றப்படும். மேலும்..


தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடக்கக் கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது. முதல் தமிழ் புத்தகம் 1554, பெப்ரவரி 11 இல் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த திருமறைச் சிற்றேடு" என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. மேலும்..