அனைத்துலக இளைஞர் ஆண்டு (1985)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71 ஆவது கூட்டத்தில் இதற்கான தீர்மானம் (இல.A/RES/39/22) நிறைவேற்றப்பட்டது. "பங்கேற்பு, வளர்ச்சி, அமைதி" என்பது இந்த இளைஞர் ஆண்டின் கருப்பொருள்.

பின்னணி[தொகு]

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1978 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதன் முதலாக அனைத்துலக இளைஞர் ஆண்டு ஒன்றை அறிவிக்கவேண்டும் எனத் தீர்மானம் (33/7) நிறைவேற்றியது. 1979 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மன்றம் அனைத்துலக ஆண்டுகள் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தையும் கருத்தில் கொண்டு, 1979 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1985 ஆம் ஆண்டை அனைத்துலக இளைஞர் தினமாக அறிவிக்கவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பின்னர் 1980, 81, 82, 83 ஆம் ஆண்டுகளிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1984 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் இது குறித்த இறுதித் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நோக்கம்[தொகு]

மனிதகுலத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் நேரடிப் பங்கேற்பின் இன்றியமையாமையையும்; நேர்மை, நீதி என்பவற்றின் அடிப்படையில் புதிய அனைத்துலகப் பொருளாதார ஒழுங்கைச் செயற்படுத்துவதில் இளைஞர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு இந்த அனைத்துலக ஆண்டு அறிவிக்கப்பட்டது[1].

அனைத்துலக இளைஞர் ஆண்டு அறிவிக்கப்பட்டதில் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட விடயங்களாகப் பின்வருவனவற்றை இதுகுறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் குறிப்பிடுகிறது[1]:

  • ஐக்கிய நாடுகளின் பட்டயத்தில் பொதிந்துள்ள கொள்கைகளுக்கு அமைதல்.
  • 1965 ஆம் ஆண்டில், அமைதி தொடர்பான விழுமியங்கள், ஒருவரையொருவர் மதித்தல், மக்களிடையே புரிந்துணர்வு என்பன தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றிய தீர்மானத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டமை.
  • அமைதி தொடர்பான விழுமியங்களை அறிந்துகொள்ளல், மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்தல், முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இளைஞரிடையே பரப்புவதற்கான தேவை.
  • இளைஞர்களின் ஆற்றல், ஆர்வம், ஆக்கத்திறன் ஆகியவற்றை,
    • தேச உருவாக்கம்;
    • ஐக்கிய நாடுகள் பட்டயத்தில் குறிப்பிட்டபடி, அந்நிய ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம் என்பவற்றுக்கு எதிரான தேச விடுதலைப் போராட்டம் மற்றும் தன்னாட்சி;
    • மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி;
    • புதிய அனைத்துலகப் பொருளாதார ஒழுங்கைச் செயற்படுத்தல்;
    • உலகின் அமைதியைக் காத்தல் மற்றும் பன்னாட்டுக் கூட்டுறவு புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்த்தல்
போன்றவற்றுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை.
  • ஐக்கிய நாடுகள் அவையின் 40 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்தல்.
  • இன்றைய உலகில் இளைஞர்களின் பங்கு குறித்தும் நாளைய உலகில் அவர்களது எதிர்பார்ப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்துதல்.

செயற்பாடுகள்[தொகு]

அனைத்துலக இளைஞர் ஆண்டின் நோக்கங்களை அடைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், பல்வேறு மட்டங்களிலும் நிகழும் ஒன்றியைந்த செயல்பாடுகளின் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும்; உறுப்பு நாடுகளையும், சிறப்பு நிறுவனங்களையும், ஐக்கிய நாடுகளின் நிதியங்கள், திட்டங்கள் போன்றவற்றையும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

குறிப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]