யாழ்ப்பாணத்துச் சீதன முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமணத்தின் போது மணப்பெண்ணின் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் பணம், பொருள் மற்றும் வேறுவகையான சொத்துக்கள் யாழ்ப்பாணத்தில் சீதனம் எனப்படுகின்றது. தற்காலத்தில், யாழ்ப்பாணத்துச் சீதன முறை மிகக் கடுமையானது என்று கருதப்படுகின்றது. சமுதாய நோக்குக் கொண்டவர்களாலும், பெண்ணுரிமைக் குழுக்களாலும் பெரிதும் கண்டிக்கப்படுகின்ற ஒரு வழமையாக இது நீடித்து வருகிறது. வேறு பல சமுதாயங்களில் காணப்படும், மாப்பிள்ளை வீட்டாருக்கு அல்லது மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மணக்கொடை அல்லது வரதட்சணையில் இருந்து இது சற்று வேறுபட்டது. யாழ்ப்பாணச் சீதன முறை, பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

வரலாறு[தொகு]

யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் மிகப் பழைய நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாக விளங்குவது, யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமான தேசவழமை ஆகும். தேசவழமைச் சட்டம் என்பது, ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தொகுக்கப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட, யாழ்ப்பாண அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பு ஆகும். இது 17 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. எனினும், யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றம் பற்றியோ, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்த இதன் வடிவம் பற்றியோ சரியான தகவல்கள் கிடையா. இது பற்றி ஆராய்ந்த சில அறிஞர்கள் சிலர் தமது கருத்துக்களை முவைத்துள்ளனர். தேசவழமை பற்றி ஆராய்ந்த "கந்தவல" என்பவர் பெயர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்துச் சீதனத்தின் தோற்றத்தை இந்துச் சட்டத்தின் சிறீதனம் என்பதோடு தொடர்புபடுத்தி உள்ளார்.[1] தேசவழமைச் சட்டத்தின் சீதன முறையில் தாய்வழிச் சொத்துரிமைக் கூறுகளை எடுத்துக்காட்டிய எச். டபிள்யூ. தம்பையா, ஒரு காலத்தில் தமிழர்களிடையே நிலவிய தாய்வழி முறை, கேரளாவின் மருமக்கட்தாயச் சட்டம் ஆகியவற்றை யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றத்துக்கான அடிப்படைகளாகக் காட்டுகிறார்.[2] இன்றைய கேரளாப் பகுதியில் இருந்து குடியேறியவர்கள் மூலம் அறிமுகமான மருமக்கட்தாய முறையின் கூறுகள் யாழ்ப்பாண நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாணச் சீதன முறை தோற்றம் பெற்றது என்பது அவரது கருத்து.

பிற்காலத்தில் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு தேசவழமையின் சீதனம் குறித்த பல விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. வேறுசில வழக்கொழிந்து போயின.

தேசவழமையும் சீதனமும்[தொகு]

ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் மூலம் இணைந்து குடும்பமாக வாழ்கின்றபோது அவர்களுக்கு வந்து சேரும் சொத்துக்களைத் தேசவழமை மூன்று வகையாக இனம் காணுகின்றது. ஆண் கொண்டுவரும் சொத்து முதுசொம் என்றும், பெண் கொண்டுவரும் சொத்து சீதனம் என்றும், இருவரும் குடும்பம் நடத்திவரும் போது தேடிக்கொள்ளும் சொத்து தேடியதேட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன. இருவருக்கும் ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்தால், முதுசொம் ஆண்பிள்ளைகளுக்கும், சீதனம் பெண்பிள்ளைகளுக்கும் சேரும். தேடியதேட்டத்தில் இருபாலாருக்கும் பங்கு உண்டு. ஆனாலும், போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலேயே இது இறுக்கமாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்திலேயே, பெண்பிள்ளைகளின் திருமணத்தின்போது முதுசொம், சீதனம், தேடியதேட்டம் என்ற வேறுபாடின்றி எல்லாவகைச் சொத்துக்களிலிருந்தும் சீதனம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.[3]

எனவே தேசவழமையின்படி, சீதனம் என்பது தாய்வழியாகப் பெண்பிள்ளைகளுக்குச் சேருகின்ற சொத்துரிமையின் பாற்பட்டது. இது மருமக்கட்தாய முறையின் எச்சமாகக் கருதப்படுகின்றது. திருமணமான ஒரு பெண் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால் அவள் கொண்டுவந்த சீதனம் அவளுடைய சகோதரிகளுக்கோ, அவர்கள் இல்லாதவிடத்து அவர்களது பெண்பிள்ளைகளுக்கோ சேருமேயன்றி அவளது ஆண் சகோதரர்களுக்கோ அல்லது ஆண்வழி வாரிசுகளுக்கோ செல்வதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thambiah, H. W., 2009 இல் மேற்கோள் காட்டியபடி. பக். 1958.
  2. Thambiah, H. W., The Laws and Customs of The Tamils of Jaffna, Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. பக். 158, 159.
  3. பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2002. பக். 85, 86.