கோளறு பதிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

திருஞான சம்பந்தர்[தொகு]

திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.

வாழ்நாள் முழுதும் தமிழகத்தின் பல்வேறு சிவத் தலங்களுக்கும் சென்று இறைவனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரத்தின் முதன் மூன்று திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர்[தொகு]

அப்பர் என்று திருஞான சம்பந்தரால் அழைக்கப்பட்ட இவரும் நாயன்மார்கள் அறுபத்துமூவருள் முதலாக மதிக்கப்படும் நால்வரில் ஒருவர். இவரும் திருஞான சம்பந்தரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர்.

மதுரை அழைப்பு[தொகு]

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர்.

கோளறு பதிகம்[தொகு]

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்)

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு.

முதல்பாடல்[தொகு]

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

குறிப்புதவி[தொகு]

  • பெரியபுராண வசனம்
  • தேவாரம்

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோளறு_பதிகம்&oldid=3277070" இலிருந்து மீள்விக்கப்பட்டது