வித்து உறங்குநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயிரிடும்வகையான Cowpea (Vigna unguiculata) யிற்குத் தொடர்புடைய காட்டுவகையில், வித்தின் தடித்த தோலின் நீர்புகவிடாத் தன்மையால் உறங்குநிலை பேணப்படுகின்றது.

வித்து உறங்குநிலை அல்லது விதை உறக்கம் (Seed Dormancy) என்பது தாவர விதை அல்லது வித்தானது முளைப்பதற்கு ஏற்ற உகந்த சூழல்காரணிகள் இருக்கும் நிலையிலும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு வித்து முளைத்தலைத் தடுக்கக் கூடிய ஒரு நிலைமையாகும்[1]. உறங்குநிலையில் இல்லாத உயிர் வித்துக்கள் உகந்த வெப்பநிலை, நீர், ஆக்சிசன், தேவையேற்படின் ஒளி அல்லது இருள் போன்றன கிடைக்கும் சூழ்நிலையில் முளைக்க ஆரம்பிக்கும். ஆனால் உறங்கு நிலையிலுள்ள வித்துக்கள் இவ்வாறான உகந்த சூழ்நிலையிலும் முளைப்பதில்லை. அவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னரே தகுந்த சூழல் கிடைத்தால் முளைக்கும். வித்து முளைத்தல் மூலம் உருவாகும் நாற்றானது தொடர்ந்து உயிர்வாழ்தலுக்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும் நிலையைத் தவிர்க்க தாவரங்களால் கையாளப்படும் ஒரு பொறிமுறையே உறங்குநிலையாகும்[2].

இந்த உறங்குநிலை மூலம் முளைத்தல் தள்ளிப்போடப்படுவதால், வித்துக்கள் ஓரிடத்திலிருந்து, வேறோர் இடத்திற்கு பரவுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏனைய தாவரங்களுடன் ஒளி, நீருக்கான போட்டி குறைவான நேரத்தில், அவை முளைத்தலை மேற்கொள்ளவும் இந்த உறங்குநிலை உதவும். பல விதைகள் பல மாதங்களுக்கோ அல்லது ஆண்டுகளுக்கோ உறங்குநிலையில் இருக்கும் தன்மை கொண்டனவாக இருக்கின்றன. 1000 ஆண்டுகள் வரைகூட விதைகள் வாழும்திறன் கொண்டனவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன[3]. நீண்டகாலத்தைப் பொறுத்தளவில், விதை எக்காலத்தில் இருந்து உறங்குநிலையில் இருந்திருக்கிறது என்பதனைக் கணிக்க கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பயன்படுகின்றது. 2008 இல் வெளிவந்த அறிக்கை ஒன்றின்படி, கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையினால் காலம் கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் உறங்குநிலையில் இருந்து, தனது வாழ்திறனைத் தக்க வைத்துக் கொண்ட பேரீச்சை வித்து ஒன்றே ஆவணப்படுத்தப்பட்ட நீண்டகால உறங்குநிலை கொண்ட வித்தாகக் கருதப்படுகின்றது[4]. இந்த பேரீச்சை விதையானது 2005 ஆம் ஆண்டில் முளைவிட்டு, அறிக்கை வெளிவந்த 2008 ஆம் ஆண்டில் 4 அடி உயரமுள்ள, 3 வயதுடைய மரமாக இருந்திருக்கின்றது.

வித்து உறங்குநிலையை வகைப்படுத்தல்[தொகு]

வித்து உறங்குநிலையானது, உறங்குநிலையை ஏற்படுத்தும் காரணிகளில் அடிப்படையில் அகக்காரணிகளாலான உறங்குநிலை, புறக்காரணிகளாலான உறங்குநிலை என இரு பெரும்பாகங்களாக வகைப்படுத்தப்படும்.

அகக்காரணிகளாலான உறங்குநிலை[தொகு]

முளையத்தின் உள்ளாக இருக்கும் சில காரணிகளால் உறங்குநிலை ஏற்படும்போது அவை அகக்காரணிகள் எனப்படும். இது மூன்று வகைப்படும்

உடலியங்கியல் உறங்குநிலை[தொகு]

உடலியங்கியல் உறங்குநிலையானது, முளையத்திற்கு உள்ளாக குறிப்பிட்ட ஒரு வேதியியல் மாற்றம் நிகழும் வரை முளைய விருத்தி மற்றும் முளைத்தல் நிகழ்வதைத் தடுக்கிறது[5]. விதையின் முளையம் வித்துறையை உடைத்து வெளியேறுவதற்கு வலிமையற்றதாக இருக்கையில், ஒருவகை செயல்குறைப்பி (inhibitor) வேதிப்பொருள் முளைய வளர்ச்சியைத் தடுத்து வைக்கும். Abscisic acid விதைகளில் காணப்படும் ஒரு பொதுவான வளர்ச்சி செய்ற்குறைப்பியாகும்[6]. ஒளி இருக்கையில் இதன் உற்பத்தி குறையும். இவ்வகையான செயல் குறைப்பிகள் செயலிழந்து போகும்போதோ, அல்லது விதையினால் உற்பத்தி செய்யப்படாமல் போகும்போதோ, விதைகள் உறங்குநிலையிலிருந்து அகன்று முளைக்கும். பொதுவாக குளிர், ஈரலிப்பான சூழலில் உறங்குநிலை நீக்கப்படும். இவ்வகையான உறங்குநிலையை வித்துறையையோ, அல்லது முளைத்தலைத் தடுக்கக் கூடிய வேறு இழையங்களையோ அகற்றுவதனால் போக்க முடியாது. உடலியங்கியல் உறங்குநிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் சில:

  • உலர்தல்: புற்கள் உட்பட சில வறண்ட பகுதிகளில் இருக்கும் தாவர விதைகளின் முளைத்தலுக்கு முன்னர் குறிப்பிட்டகால உலர்நிலை தேவைப்படுகின்றது. விதையானது பரம்பலின் பின்னரும் ஈரலிப்பாக இருக்குமாயின் அவை சில மாதங்களோ, ஆண்டுகளோ, முளைப்பதில்லை. பல மிதவெப்பமண்டல குறுஞ்செடி வகைத் தாவரங்களின் உடலியங்கியல் உறங்குநிலை கொண்ட விதைகள் உலர்த்தலுக்கு உட்படும்போது தமது உறங்குநிலையிலிருந்து மீண்டு முளைத்தலுக்குத் தயாராகின்றன. ஏனைய சில இனங்கள் பரம்பலின் பின்னர் மிகக் குறுகிய வெப்பநிலை வீச்சிலேயே முளைக்கத் தயாராகும். ஆனால் விதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு உலர்நிலையில் இருப்பின் அகன்ற வெப்பநிலை வீச்சில் வித்துக்கள் முளைக்கத் தயாராகும்[7].
  • ஒளி: சில விதைகள் ஒளித் தூண்டலுக்கு உணர்ச்சியுள்ளனவாக இருக்கும். முளைத்தலுக்கு முன்னர் சிலகாலம் சில விதைகளுக்கு ஒளி தேவைப்படும் அதே வேளை, வேறு சிலவற்றிற்கு இருள் தேவைப்படுகின்றது. ஒளி கிடைப்பதும் இருள் கிடைப்பதும் முளைத்தலைத் தூண்ட உதவுகின்றது. இதனால் மண்ணில் அதிக ஆழத்தில் விதைக்கும்போது, ஓரளவு ஒளி தேவைப்படும் விதைகள் முளைப்பதில்லை. அவற்றில் சில மண்ணில் விதைக்காமலேயே முளைக்கவும் ஆரம்பிக்கும். சில விதைகள் மண்ணின் உள்ளே விதைக்கப்பட்டாலன்றி முளைப்பதில்லை.
  • வெப்பம்: சூடு, குளிருக்கு உணர்வுள்ள விதைகளும் உள்ளன. சில விதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு சூடான சூழல் இருந்தாலேயே முளைத்தலுக்குத் தயாராகும். பல தாவர விதைகள் உயர் வெப்பநிலை (30C அல்லது 86F) இருக்கும்போதே முளைக்கும். அதேநேரம் சில விதைகள் மண்ணில் ஓரளவு குளிராக இருந்தாலேயே முளைக்கும்.

உருவவியல் உறங்குநிலை[தொகு]

வளர்ச்சி குன்றிய முளையம் அல்லது உயிரணு வேற்றுமைப்பாடு சரிவர நிகழாத முளையங்களில் இது நிகழும். சிலசமயம் முழுமையாக வேற்றுமைப்பாடு நிகழ்ந்த முளையமும், சிலகாலம் வளர்ந்த பின்னரே முளைக்கும் இயல்பைப் பெறும். அல்லது முளையத்திலுள்ள உயிரணுக்கள், வெவ்வேறு இழையங்களாக வேற்றுமைக்குட்படாமல் இருப்பின், அந்த வேற்றுமைப்பாடு நிகழும்வரை உறங்கு நிலையில் இருக்கும்.

உருவ-உடலியங்கியல் உறங்குநிலை[தொகு]

உருவ-உடலியங்கியல் உறங்குநிலை என்பது மேற்கூறிய உடலியங்கியல் காரணிகள், உருவவியல் காரணிகள் இரண்டும் இணைந்து உருவாகும் உறங்குநிலையைக் குறிக்கும்.

புறக்காரணிகளாலான உறங்கு நிலை[தொகு]

முளையத்திற்கு வெளியாக காணப்படும் காரணிகளால் உறங்குநிலையேற்படுமாயின் அது புறக்காரணிகள் என அழைக்கப்படும். இவை வெவ்வேறு வழிகளில் உறங்குநிலையை ஏற்படுத்தலாம்[8].

  1. நீர் உள்ளெடுத்தலைத் தடுத்தல்
  2. முளைய, முளைவேர் வெளியேற்றத்தைத் தடுக்கும் பொறிமுறைத் தடைகள்
  3. வளிமப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தல்
  4. முளைத்தல் செயல்குறைப்பிகள் (growth inhibitors) முளையத்தில்ருந்து வெளியேறுவதைத் தடுத்தல்
  5. முளைத்தல் செயல்குறைப்பிகளை வழங்கல்

இப்படியான புறக்காரணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

இயற்பியல் உறங்குநிலை[தொகு]

பொதுவாக விதை முதிர்ச்சியின்போது, நீரையும், வளியையும் உட்புகவிடாத தன்மை (impermeable) கொண்ட ஒரு உறையானது விதையைச் சுற்றி தோன்றுவதனால், இவ்வகையான உறங்குநிலை விதைகளில் ஏற்படும்[9]. இந்த தடித்த உறையானது முளைத்தலுக்குத் தேவையான நீர் உட்புகுதலைத் தடுக்கிறது. பொதுவாக அவரையின விதைகளில் இவ்வகையான உறங்குநிலை காணப்படும். அப்படியான வித்துறை அகற்றப்படும்போது விதை முளைக்கத் தயாராகும். உறைநிலை அகற்றப்பட கூடிய வெப்பநிலை, மாறும் வெப்பநிலை, நெருப்பு, உறைதல் / உருகுதல், உலர்தல், விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியூடான பயணம் என்பன உதவும்[10]. 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வகையான உறங்குநிலை விருத்தியடைந்ததாகக் கருதப்படுகின்றது[11]. இவ்வகையான உறங்குநிலை ஒரு தடவை அகற்றப்பட்ட பின்னர், பொதுவாக மீண்டும் ஒரு உறங்குநிலைக்கு விதைகள் போவது சாத்தியமில்லை. உடலியங்கியல் உறங்குநிலை பொறிமுறையில் ஒரு தடவை உறங்குநிலை நீங்கினாலும், சூழல் நிலைமைகள் பாதகமாக இருப்பின், விதையானது மீண்டும் இரண்டாம் உறங்குநிலைக்குச் செல்ல முடியும். ஆனால் இயற்பியல் உறங்குநிலை அகற்றப்பட்டால், ஒரு சில விதைகள் தவிர ஏனையவற்றில் அவ்வாறு இரண்டாம் உறங்குநிலை வருவதில்லை[10]. எனவே இவ்வகையான உறங்குநிலையை நீக்கல், முளைத்தலுக்குச் சாதகமான சூழல் நிலைகளைகளுடன் பொருந்திப் போவது அவசியமாகும். அவ்வாறு பொருத்தமான சந்தர்ப்பத்தில் உறங்குநிலை அகற்றப்பட்டால், விதையானது முளைத்து சரியான முறையில் இனப்பெருக்கம் செய்ய உதவும்[11]. இவ்வகையான உறங்குநிலை பூக்கும் தாவரங்களில் பல குடும்பங்களில் காணப்படுகின்றது[11][12]. வித்துமூடியிலிகளில் இவ்வகை உறங்குநிலை பதிவு செய்யப்படவில்லை[12]. விதையில் காணப்படும் பிரத்தியேகமான அமைப்பான 'நீர் இடைவெளி' என்ற அமைப்பு நீர் உட்புகவிடாத தன்மைக்கு உதவுகின்றது. இந்த நீர் இடைவெளிகள் விதை முதிர்ச்சியின்போது மூடிய நிலைக்கு வந்து, அப்படியே சில காலத்துக்கு மூடியபடி இருப்பதனால், நீர் உட்செல்லலைத் தடுத்து, வித்தை உறங்குநிலையில் வைத்திருக்கும். பின்னர் அவற்றிற்கு சாதகாமன சூழ்நிலைகள் இருக்கும் ஒரு தருணத்தில் நீர் இடைவெளிகள் திறந்து, நீர் உட்புகுதலை அனுமதிக்கையில் உறங்குநிலையை இழந்து முளைத்தலுக்குத் தயாராகும்[12]. இத்தகைய நீர் உட்புகவிடாத தன்மையைக்கான நீர் இடைவெளியை ஒத்த வேறு பல அமைப்புக்களும் தாவரங்களில் காணப்படுகின்றது[13][14][15][16].

பொறிமுறை உறங்குநிலை[தொகு]

விதையின் உறையானது மிகவும் கடினமாக இருப்பதனால், முளையம் முளைக்கும்போது, அது வெளியேற முடியாத நிலை இருக்குமாயின் அது பொறிமுறை உறங்குநிலை எனப்படும்[8]. இது முளையத்தின் குறைவான வளர்ச்சி ஆற்றல் என்னும் உடலிங்கியல் உறங்குநிலையுடன் சேர்த்து அகக்காரணியாலான உறங்குநிலையாகவும் கருதப்படலாம்[17].

வேதியியல் உறங்குநிலை[தொகு]

முளையத்தை மூடியிருக்கும் உறையில் காணப்படும் சில வேதிப்பொருட்களின் தாக்கத்தால் விதை முளைக்க முடியாத தன்மையைக் கொண்டிருத்தலாகும்[8]. விதைகளை நீரில் ஊறப்போடுவதாலோ, அல்லது நீரில் கழுவுவதாலோ இவ்வகையான வேதியியல் பொருட்கள் கழுவிச் செல்லப்பட்டு, அவற்றின் தாக்கம் நீக்கப்பட்டு, இவ்வகையான உறங்கு நிலையைப் போக்கலாம். இயற்கையில் மழைநீரில் அல்லது உருகிவரும் பனி நீரில் இவ்வகை வேதிப்பொருட்கள் கழுவிச் செல்லப்பட்டு உறங்குநிலை நீங்கலாம்.

இணைந்த உறங்குநிலை[தொகு]

அகக்காரணிகள், புறக்காரணிகள் இரண்டும் இணைந்து உருவாகும் உறங்குநிலை இணைந்த உறங்குநிலை (Combinational dormancy) எனப்படும்[18][19][20]. அகக்காரணிகளில் உடலியங்கியல் காரணிகளும், புறக்காரணிகளில் இயற்பியல் காரணிகளும் ஒன்றாக இணைந்து தொழிற்படுவதனால் விதைகள் உறங்குநிலையில் இருக்கலாம். அதாவது கடினமான வித்துறை இருக்கும் அதேவேளை, அவற்றின் முளையம் சில செயல்குறைப்பிகளையும் (inhibitors) கொண்டிருக்கும்.

இரண்டாம் உறங்குநிலை[தொகு]

உறங்குநிலை அற்ற விதைகளில், அல்லது முதலாம் உறங்குநிலை முடிந்து முளைத்தலுக்குத் தயாராகும் விதைகளில், முளைத்தலுக்குப் பாதகாமான சில சூழல் நிலைகள் ஏற்படும்போது உறங்குநிலை தோன்றுவது இரண்டாம் உறங்குநிலை எனப்படும். இதற்கான பொறிமுறை இன்னமும் சரியாக அறியப்படாவிட்டாலும், முதலுருமென்சவ்விலுள்ள ஏற்பிகளில் (receptors) ஏற்படும் உணர்திறன் இழப்பு காரணமாகலாம் எனக் கருதப்படுகின்றது[21].

உறங்கு நிலையை அகற்றல்[தொகு]

வித்துக்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் உறங்குநிலையிலிருந்து மீண்டு, முளைத்தலுக்கான சாதகமான சூழ்நிலை கிடைக்கையில் முளைக்கும். செயற்கையாக உறங்குநிலையைக் கலைத்து, விதைகளை முளைத்தலுக்குத் தயார்ப்படுத்தவும் முடியும்[22]. சில விதைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு உறங்குநிலை அகற்றும் முறைகள் பயன்படுத்த முடியும். அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்[23][24]

வித்துறை அகற்றல்[தொகு]

உறங்குநிலையானது தடித்த வித்துறையால் ஏற்பட்டிருப்பின் வித்துறை அகற்றல் மூலம் உறங்குநிலையை அகற்றலாம்.

  • வித்துறையை அரத்தாள் கொண்டு தேய்க்கலாம். இதனைச் செய்யும்போது, முளையத்தைப் பாதிக்காமல் அவதானமாக இருத்தல் வேண்டும். எ.கா. பயிற்றம் விதை
  • வித்துறை மிகவும் கடினமானதாக இருப்பின் அதனை உடைக்கலாம். இதனைச் செய்யும்போது, முளையத்தைப் பாதிக்காமல் அவதானமாக இருத்தல் வேண்டும். எ.கா. மா, பாகல், இரப்பர் விதை
  • செறிவு குறைக்கப்பட்ட கந்தகக் காடியில் 1 தொடக்கம் 60 நிமிடங்கள் ஊற வைக்கலாம். எ.கா. பஞ்சு விதை

வெப்பம் வழங்கல்[தொகு]

  • குளிர்நிலையில் (0 - 5 பாகை C யில்) தொடர்ந்து 3 - 6 நாட்கள் வைக்கையில் அவை முளைக்கத் தயாராகும். எ.கா. கடுகு, மக்காச்சோளம்
  • குறுகிய காலத்திற்கு, அதாவது சில மணித்தியாலங்கள் முதல், 1-5 நாட்கள்வரை, (40 - 50 பாகை Cயில்) வைத்தால் அவை முளைகக்த் தயாராகும். எ.கா. நெல்
  • சில விதைகளில் வெப்பத்தை மாறி மாறி கூட்டிக் குறைக்கும்போது உறங்குநிலை அகலும்.
  • 80 பாகை C சுடுநீரில் 1 - 5 நிமிடங்களுக்கு ஊறப்போடலாம். எ.கா. அவரை இன விதைகள்.

ஒளி வழங்கல்[தொகு]

உறங்குநிலையகற்ற ஒளி தேவைப்படும் விதைகளுக்கு ஒளி வழங்கல் மூலம் அவற்றை முளைத்தலுக்குத் தயார்ப்படுத்தலாம்.

நீரில் கழுவுதல்[தொகு]

வேதிப்பொருட்களினால் உறங்குநிலை ஏற்படும் விதைகளை நீர்ல் கழுவுவதால் உறங்குநிலையை அகற்றலாம்.

வளர்ச்சிச் சீராக்கிகளும், வேறு வேதிப்பொருட்களும்[தொகு]

உறங்குநிலையானது முளைத்தல் செயல்குறைப்பி மூலம் ஏற்பட்டிருப்பின் அதனைச் செயலிழக்க வைக்க வேண்டும்.

அதற்கு Gibberellins, Cytokinins, Ethylene போன்றவற்றை வழங்குவதன் மூலம் செய்யலாம். சோள விதைகளை 100ppm செறிவுள்ள GA3 கரைசலில் ஊறவிடுவதன் மூலம் அதன் உறங்குநிலையை அகற்றலாம்.

பொட்டாசியம் நைத்திரேட்டு (0.2%), தியோ-யூரியா (0.5 to 3%) போன்றனவும் பரன்ந்தளவில் பயன்படுகின்றன. இந்த முறையில் புல்லரிசி, வாற்கோதுமை, தக்காளி போன்றவற்றின் விதைகள் உறங்குநிலை அகற்றப்படுகின்றன.

பொட்டாசியம் நைத்திரேட்டு (0.2%) அல்லது செறிவு குறைந்த கந்தகக் காடியில் ஊறவிடும்போது நெல் விதைகள் உறங்குநிலையை இழக்கும்.

உறங்குநிலையற்ற விதைகள்[தொகு]

தாய்த் தாவரத்தில் இருக்கும் நிலையிலேயே முளைக்கும் Red mangrove விதைகள்

சில விதைகள் உறங்குநிலையைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் அவற்றில் சில முளைத்தலுக்கான சாதகமற்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கான சில பொறிமுறைகளைக் கொண்டிருக்கின்றன.

முளைத்தலுக்கான சூழல் மண்ணில் இருக்காத காலங்களில், அதாவது மண் மிகவும் உலர்வாக இருக்கையில், அல்லது மிகக் குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கையில் தாவரங்கள் விதைகளை வெளியேற்றும். எனவே அவை இயற்கையாகவே அடுத்த முளைத்தலுக்கான சூழல் வரும்வரை இருந்த பின்னர், பரம்பலுக்குட்பட்டு அல்லது மனிதர்களால் சேகரிக்கப்பட்டு, சரியான சூழலில் முளைக்கத் தயாராகும்.

வேறு சில விதைகள் சதைப்பிடிப்பான பழங்களின் உள்ளாக வைத்திருக்கப்படுவதினால், முளைத்தல் சில காலம் தடுத்து வைக்கப்படும்[17]. இதனை வித்தின் உறங்குநிலை என்று அழைக்காமல், வித்தின் ஓய்வு நிலை (seed quiescence) எனக் கொள்ளலாம். வித்தின் ஓய்வுநிலை என்பது, வித்து தனக்கு முளைத்தலுக்கான சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால், குறுகிய காலத்திற்கு ஒரு ஓய்வுநிலையில் இருத்தலாகும்[25].

சில காட்டுவகைத் தாவரங்கள் உறங்குநிலை கொண்ட விதைகளைக் கொண்டிருப்பினும், அவற்றிலிருந்து உருவான பயிரிடும்வகைகள் உறங்குநிலையற்ற விதைகளை உருவாக்குபனவாக மாறியுள்ளன. பல தோட்டத் தாவரங்களும் தமக்குத் தேவையான நீர், சாதகமான வெப்பம் கிடைக்கையில் எப்பொழுதும் முளைக்கத் தயாராகும். இந்த இயல்பானது தாவர உற்பத்தியாளர்கள், தோட்டக்கலை செய்பவர்களின் தொடர்ந்த சந்ததியூடான தேர்வினால் ஏற்பட்டதாகும்.

இவை தவிர, சில அலையாத்திக்காட்டு அல்லது சதுப்புநிலக்காட்டு வகைத் தாவரங்களின் விதைகள், அவற்றின் உறங்குநிலையற்ற தன்மையால், தாய்த் தாவரத்தில் இருக்கும்போதே முளைக்கத் தொடங்கிவிடும். அவை பெரிய, பாரமான வேர்களை உற்பத்தி செய்து, நாற்று விழும்போது உறுதியாக வேரூன்ற உதவும்[26].

ஆதாரங்கள்[தொகு]

  1. Baskin, J.M.; Baskin, C.C. (2004). "A classification system for seed dormancy". Seed Science Research 14 (1): 1–16. 
  2. Black M., Bewley J.D. and Halmer P. (2006). The Encyclopedia of seeds. Wallingford, Oxfordshire: CAB International. 
  3. "How long can a seed remain alive?" (PDF). Year Book of Agriculture 1961. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
  4. Randolph E. Schmid Tree from 2,000-year-old seed is doing well. AP via USA Today, June 12, 2008
  5. Fenner, Michael; Thompson, Ken (2005), "The ecology of seeds", Publisher Cambridge University Press: 98, ISBN 9780521653688, பார்க்கப்பட்ட நாள் 2009-08-15
  6. P. Schopfer, D. Bajracharya and C. Plachy (November 1979). "Control of Seed Germination by Abscisic Acid". 1979 American Society of Plant Biologists. pp. vol. 64 no. 5 822-827. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
  7. "Physiological Dormancy | Royal Tasmanian Botanical Gardens". Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 2013-05-11.
  8. 8.0 8.1 8.2 "Seed Dormancy" (PDF). Archived from the original (PDF) on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
  9. Chawla, H. S. (2002), Introduction to plant biotechnology, Vol 2, Science Publishers, p. 32, ISBN 9781578082285, பார்க்கப்பட்ட நாள் 2009-08-15
  10. 10.0 10.1 Baskin C.C. and Baskin J.M. (1998). Seeds: Ecology, Biogeography, and Evolution of Dormancy and Germination. San Diego: Academic Press. 
  11. 11.0 11.1 11.2 Baskin, J.M. and Baskin, C.C. and Li, X. (2000). "Taxonomy, anatomy and evolution of physical dormancy in seeds". Plant Species Biology 15: 139-152.
  12. 12.0 12.1 12.2 Baskin, C.C. (2003). "Breaking physical dormancy in seeds - focussing on the lens". New Phytologist 158: 229-232.
  13. Boesewinkel, F.D. (1988). "The seed structure and taxonomic relationships of Hypseocharis Remy". Acta Botanic Neerlandica 37: 111–120. 
  14. Boesewinkel F.D and Bouman F. (1995). B. M. Johri. ed. The seed: Structure. In: Embryology of பூக்கும் தாவரம். Berlin: Springer-Verlag. 
  15. Nandi, O.I. (1998). "Ovule and seed anatomy of Cistaceae and related Malvanae". Plant Systematics and Evolution 209: 239–264. 
  16. Li.X., Baskin J.M., Baskin, C.C (1999). "Anatomy of two mechanisms of breaking physical dormancy by experimental treatments in seeds of two North American Rhus species (Anacardiaceae)". American Journal of Botany 86: 1505–1511. 
  17. 17.0 17.1 "Exogenous Dormancy | Royal Tasmanian Botanical Gardens". Archived from the original on 2013-04-20. பார்க்கப்பட்ட நாள் 2013-05-11.
  18. McDonald, M. B.; Kwong, Francis Y. (2005). Flower seeds: biology and technology CABI Publishing Series. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85199-906-9. http://books.google.com/?id=WBw_EJSRNrYC&pg=PA161. பார்த்த நாள்: 2009-08-15. 
  19. Combinational dormancy. www.uky.edu
  20. The Seed Biology Place – Seed Dormancy
  21. Bewley, J. Derek, and Michael Black. 1994. Seeds physiology of development and germination. The language of science. New York: Plenum Press. page 230.
  22. "Methods of Removing Seed Dormancy". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 08 மே 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  23. "Methods of Removing Seed Dormancy". Sri Lanka: Secondary Education Modernization Project. Asian Developement Bank, Fighting Poverty in Asia and Pacific. Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
  24. "My Agriculture Information Bank". AgrInfo.in. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
  25. Fenner, Michael; Thompson, Ken (2005). The ecology of seeds. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-65368-8. http://books.google.com/?id=bzflp9q5tNIC&pg=PA97. பார்த்த நாள்: 2009-08-15. 
  26. "Special Type of Germination: Vivipary". Archived from the original on 2012-01-01. பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்து_உறங்குநிலை&oldid=3578265" இலிருந்து மீள்விக்கப்பட்டது