சோழர்காலச் சமுதாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழர் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகளுடன் கூடிய சாதிவேறுபாடுகள் கடுமையாக இருந்தன. சாதி வழக்கத்தை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இதைத் தவிர உயர்குலத்திற்கும் தாழ்ந்த குலத்திற்கும் பிறந்தவர் அனுலோமர் எனப்பட்டனர். சத்திரிய-வைசியக் கலப்பினர் மாகிஷ்யர்கள், வைசிய-சூத்திரக் கலப்பினர் கரணீகள், மாகிஷ்யர்-கரணீகளுக்குப் பிறந்தவர் இரதகாரர் என்று பிரிவினை இருந்தது. எந்த சாதியினர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டுமென உயர் சாதியினர் வரையறுத்தனர். தலைமைச் சாதியினர் அந்தணர் ஆவார். பறையர்கள் சேரிகளில் வாழ்ந்தனர். 1250 ஆம் ஆண்டு பல சாதியர்களுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று நிகழ்ந்தது. இதில் கிட்டத்தட்ட 40 சாதியினர் கையொப்பம் இட்டுள்ளனர்.[1]

வலங்கை இடங்கை[தொகு]

சமூகத்தில் வலங்கை இடங்கை என இரு மக்கள் குழுவினர் இருந்தனர். இவர்களிடையே பெரும் பூசலகள் நிகந்தன. வலங்கைப் பிரிவில் 98 குலங்களும் இடங்கைப் பிரிவில் 98 குலங்களும் சேர்ந்திருந்தன. வலங்கைப் பிரிவினர் மன்னர் படைகளில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். ஆனால் இடங்கையினர் பெரும்பபலும் சிறுவணிகர்களாகவும் தொழிலார்களாகவுமே இருந்தனர். சாதாரண மக்கள் உயர் சாதியினரையும் மன்னரையும் எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களில் இடங்கையினர் தாங்கள் நடந்து போகும்போது குடைபிடித்தல், கொம்பு ஊதுதல் போன்றவற்றைப் பிறப்புரிமையாகக் கொள ஒப்பந்தம் செய்துகொண்டனர். இடங்கை வலங்கைக் கலகம் ஒன்று 1071-ல் இராசமகேந்திர சதுர்வேதிமங்கலத்தில் நிகழ்ந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தணரும் உயர் சாதியினரும் வாழ்ந்த கிராமங்கள் சுட்டெரிக்கப்பட்டது. கோவில் இடிக்கப்பட்டது. சில சமயம் இவர்கள் இருவரும் இணைந்து பிராமணரையும் வேளாளரையும் எதிர்த்துள்ளனர். ஆடுதுறை வட்டத்தில் பிராமணர்களும் வேளாளர்களும் காணியாட்சி கொண்டனர். இதற்கு எதிராக வலங்கை 98 குலங்களும், வழுதல்பட்டி, ஊசவாடி ஆகிய ஊர் இடங்கையினரும் தமக்குள் ஒற்றுமை உடன்படிக்கை செய்துகொண்டனர். பெரும்பாலும் வரிச்சுமையுடன் வாழமுடியாத காரணத்தாலேயே இப்போராட்டங்கள் எழுந்தன.

அடிமைகள்[தொகு]

சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள்.

வணிகக் குழுக்கள்[தொகு]

சோழர் வாணிகக் குழு வளஞ்சியம் என்று அழைக்கப்பட்டது. இவர்கள் குழுவில் செட்டிகள், செட்டிப்பிள்ளைகள், கவறைகள், கந்தழிகள், பத்திரர்கள், கவுண்ட சாமிகள், சிங்கம், சிறுபுலி, வலங்கை வாரியன் ஆகியவர்கள் சேர்ந்திருந்தனர். இவர்கள் மயிலார்ப்பு (மைலாப்பூர்) என்ற இடத்தில் கூடிப் பேசியதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. காட்டூரை வீரப்பட்டினமாக மாற்ற வேண்டும், எல்லா வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் , ஊதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனப் பல தீர்மாணங்களை இவர்கள் நிறைவேற்றினார்கள்.

உடைகள்[தொகு]

ஆண்கள் முழங்கால் வரை ஆடை அணிந்தனர். தலைப்பாகை அணிந்தனர். வேட்டியைக் கச்சமாகக் கட்டினர். மேலாடை அணிந்தது பற்றி தெரியவில்லை. பெண்கள் கொய்சகம் வைத்துப் புடவை அணிவர், மார்புக் கச்சு அணிவதும் உண்டு. சில சமயம் உத்தரீயம் என்ப்படும் மேலாடை அணிந்தனர்.

பெண்டிர்[தொகு]

சமூக வாழ்வில் பெண்கள் பங்கேற்றனர். பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. பெண்கள் பலர் கோவில்களுக்கு நிவந்தங்கள் வழங்கிய செய்தியைக் தஞ்சைக் கல்வெட்டுகளில் காணலாம். அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.[2]

திருமணம்[தொகு]

கணிகள் எனப்படும் சோதிடர் திருமண நாளையும் வேளையையும் கணிப்பார். திருமணம் மாலையில் நடைபெறுவதில்லை. பெண்ணின் கையைப் பற்றும் முதல் உரிமை தாய்மாமனுக்கே உரியது. மணமகன் பெண்ணுக்குப் பரிசம் போட வேண்டும். பெண்களுக்கு நிலங்களைச் சீதனமாகக் கொடுப்பர். மனைவியின் சீதனத்தை செலவழிக்கக் கணவனுக்கு உரிமையில்லை. பரிசப்பணம் கொடுக்க சில சமயம் சண்டைகள் நடந்ததுண்டு. பெண்ணுக்கு 12 வயதில் திருமணம் நடைபெற்றது. தாலிகட்டும் பழக்கம் முதலாம் இராசராசன் காலத்தில் தோன்றியிருக்கலாம் என்பது அறிஞர் முடிவு.

உடன்கட்டை ஏறுதல்[தொகு]

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. வானவன் மாதேவி என்பவள் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் மூலம் கிடைக்கிறது.[3]

பிற வழக்கங்கள்[தொகு]

வெள்ளம் வந்தால் முரசறைந்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் மண்பொட்டிடுதல், 12 ஆம் நாள் பெயர்சூட்டுதல், ஐந்தாம் வயதில் பள்ளி செல்லும் சடங்கு செய்தல் போன்ற சடங்குகள் இருந்ததன. பிணங்களை எரித்தல், பிணங்களுடன் பெண்களும் சுடுகாட்டுக்குச் செல்லுதல், பிணத்தை வைத்ததும் உப்பில்லாச் சோற்றைப் பலியாகத் தூவுதல் ஆகியவை இருந்தன.
விருந்தினர்க்கு வெற்றிலை பாக்கு வழங்குதல், விருந்தினர் நீராடியவுடன் அவர்களின் கால்களைக் கழுவி மணைமேல் இருத்துதல், வெளியூர்ச் செல்லும் மகன் 12 விரல் தொலையில் நிற்க, தாய் மூன்று விரல் நெருங்கிச் சென்று விடை கொடுத்தல் போன்ற பல பழக்கவழக்கங்கள் சோழர் காலத்தில் இருந்தன.

ஆடல் பாடல்[தொகு]

சோழர் காலத்தில் இசையும் நடனமும் இணைந்தே சிறப்புப் பெற்றிருந்தது. இசையிலும் கூத்திலும் வல்ல பெண்கள் பலர் கோவிலில் இருந்தனர். இவர்கள் தேவரடியார், தளியிலார் என்றும் அழைக்கப்பட்டனர். தேவரடியார்கள் என்பவர் கோவிலில் பணி செய்த ஆடவர் பெண்டிர் இருவரையும் குறித்தது. தேவாரம், திருவாசகம் ஓதுவது நடனம் ஆடுவது இவர்களின் பணிகள். இவர்கள் மிகுந்த கடமை உணர்வுடனும் ஒழுக்கக் கட்டுப்படுகளுடனும் பணி செய்து வந்தனர். இவர்களை வழி நடத்தும் நட்டுவனார்களுக்குக் கொடைகள் வழங்கப்பட்டன. இவர்களின் சேவைகருதி இவர்களின் தேவைகள், நிறைவேற்றப்பட்டன. வீடுகள் மற்றும் போதுமான சம்பளம் வழங்கப்படது. இந்த கலைஞர்களின் வாழ்க்கை பாதுகாப்பானதாக இருந்தது.

உசாத்துணை[தொகு]

  • தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக வெளியீடு.2004

மேற்கோள்[தொகு]

  1. தமிழக வரலறும் பண்பாடும் பக்.192
  2. சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
  3. சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்காலச்_சமுதாயம்&oldid=3835707" இலிருந்து மீள்விக்கப்பட்டது