அய்யா பெற்ற விஞ்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையின் படி கலியை அழிக்க இறைவன் எடுத்த அவதாரமே அய்யா வைகுண்டர் ஆவார். கலியை அழிப்பதற்காக திருமால் கடலுக்குள் வைத்து வைகுண்டக் குழந்தையை பிறவி செய்து அக்குழந்தைக்கு அக்கலியை அழிப்பதற்கான வழிமுறைகளை அளிப்பதே அகிலத்திரட்டில் விஞ்சை எனப்படுகிறது. இவ்வாறான விஞ்சை மூன்று தடவை வைகுண்டருக்கு வழங்கப்படுகிறது.

அய்யாவழி
'
அய்யா வைகுண்டர்
அகிலத்திரட்டு
கோட்பாடு
சமயச் சடங்குகள்
சுவாமிதோப்பு பதி
அய்யாவழி மும்மை
போதனைகள்
அருல் நூல்

பல பார்வைகள்[தொகு]

அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஏகப்பரம்பொருளே வைகுண்டராக அவதாரம் எடுக்கின்ற போதும், சிவனிடம், குறோணியை வதம் செய்யும் போது செய்யப்பட்ட வாக்குறுதியின் காரணமாக திருமாலே குறோணியின் ஒவ்வொரு துண்டுகளையும் அழிக்கும் கடமையுடையவராவார். அதனால் தான் கலியை அழிக்கும் பொருட்டு, தனக்கும் மேலான ஏகப்பரம்பொருளுக்கு திருமால் வைகுண்டர் என்னும் பிறவியளிக்கின்ற போதும் அவருக்கும் கலியை அழிப்பதற்கான வரங்களையும், சட்டங்களையும், வழிமுறைகளையும், செயல்முறைகளையும் திருமாலே உபதேசிப்பதாக அமைந்திருக்கிறது என்பது மும்மைக் கோட்பாட்டை வலியுறுத்துவோரின் வாதமாகும்.

சிவ ஒளியாகிய பரம்பொருளே வைகுண்டக் குழந்தைக்கு ஆதாரமாகவும் ஆதேயமாகவும் இருப்பதால் தந்தை மகன் என்னும் உறவு வந்தது. ஜீவாத்துமாவின் ஸ்தானத்திலிருக்கும் மகனாகிய வைகுண்டருக்கு பரமாத்துமாவின் ஸ்தானத்திலிருக்கும் நாராயணர் தகப்பனாக இருந்து உபதேசிப்பதே விஞ்சை என்பது சில தத்துவ ஆய்வலர்களின் முற்பாடு. கலியாகிய மாயையை மனிதன் எவ்வாறு வெற்றிகொண்டு பரகதி அடைவது என்பதை விளக்குவதே இவ்விஞ்சை என்பது அத்துவித முதன்மைவாதிகள் துணிபு.

எது எவ்வாறாயினும் வைகுண்டர் கலியை அழிக்க எதை, எப்போது, எவ்வாறு, செய்ய வேண்டும் என்பது இவ்விஞ்சை மூலம் நேரடியாக வெளிப்படுத்தப்படுகிறது.

வைகுண்டக் குழந்தை[தொகு]

சம்பூரணத்தேவனின் ஆன்மாவைத் தாங்கி நின்ற திருமாலின் உபாய மாயக் கூட்டிலிருந்து, நாராயணரின் உத்தரவின்படி சம்போரணத்தேவனின் ஆன்மாவுக்கு முக்தி கொடுக்கப்பட்டு அச்சடத்தில் திருமாலின் உள்ளம் சேர்க்கப்பட்டு இரண்டு முனிவர்களால் கடலினுள் எடுத்து செல்லப்படுகிறது. இச்சடலத்தை எடுத்து நாராயணர் அதில் ஏகாபரமான வைகுண்டக் குழந்தையை பிறவி செய்கிறார். பின்னர் அக்குழந்தையை சிறுவனாகவும், பதினாறு வயது வாலிபனாகவும், பின்னர் சம்போரணத்தேவனைத் தாங்கி நின்ற மனித உடலின் வயதாகிய 24 வயதை எட்டெச்செய்கிறார். பின்னர் அப்பாலனுக்கு கலியை அழிப்பதற்கான வழிமுறைகளையும், சட்டங்களையும், வரங்களையும் அருளுகிறார். இவ்விஞ்சையே திருச்செந்தூர் விஞ்சை ஆகும்.

விஞ்சையருளல்[தொகு]

அய்யா வைகுண்டரின் அவதாரத்தைத் தொடர்ந்து வரும் முதல் விஞ்சையான திருச்செந்தூர் விஞ்சையே முக்கிய விஞ்சை என்கின்ற போதும், கலியரசன் வைகுண்டரை சிறை பிடிக்க வரும்போதும், பின்னர் சான்றோரை துவையல் தவசுக்கு அனுப்பிய பிறகும் இரு தடவை கடலுக்குள் தந்தையாகிய நாராயணரை சந்தித்து வைகுண்டர் விஞ்சை பெறுகிறார். இவ்விரண்டு விஞ்சைகளும் அருளப்படுவது முட்டப்பதி கடலுக்குள் வைத்தாகும்.

இது வரை எந்த ஞானிகளாலும், பிரம்ம தேவராலும், தேவர்களாலும், முனிவர்களாலும், ரிஷிகளாலும் அறிந்துகொள்ளப்படாததான விஞ்சையை நாராயணர் வைகுண்டருக்கு அருளுவதாக கூறுகிறார். மேலும் தான் கூறப்போகும் விஞ்சையை அணுவளவும் பிசகாமல் பின்பற்றும் படியும், அப்படி நடத்தி கலி யுகத்தை முடித்து பின்வரும் தர்ம யுகத்தில் வந்தால் அனைவரும் புகழும்படியாக நாம் அனைவரும் சிறப்பாக இருந்து வாழலாம் என்கிறார்.

ஆதாரம்[தொகு]

  • ஆ.மணிபாரதியின், அகிலத்திரட்டு விளக்க உரை, முதற் பாகம்.
  • என்.அமலனின், அய்யா வைகுண்டர் புனித வரலாறு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யா_பெற்ற_விஞ்சை&oldid=2609046" இலிருந்து மீள்விக்கப்பட்டது