புலிப்பல் தாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலிப்பல் தாலியின் தற்கால அமைப்பு

புலிப்பல் தாலி என்பது மிகவும் பழைய காலத்திலிருந்தே தமிழ் மக்களிடையே புழக்கத்தில் இருந்த கழுத்தில் அணியும் ஒரு வகை அணிகலன் ஆகும். ஆண், பெண் இரு பாலாரும் இதனை அணிந்திருந்தனர் என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில் இருந்து தெரியவருகிறது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை[1], சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் புலிப்பல் தாலியைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

அமைப்பு[தொகு]

கைவினைப் பொருட்களைச் செய்வதற்கான தொழினுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் மரஞ்செடிகள், விலங்குகள், மற்றும் பிற இயற்கைப் பொருள்களையே அணிகலன்களாக்கி மக்கள் அணிந்தனர். இந்த வகையில் ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள், பற்கள், நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தமை பற்றி அறிய முடிகிறது. தமிழகத்திலும் புலியின் பல், புலி நகம் என்பன அணிகலன்களில் பயன்பட்டன எனலாம். இன்றும் மஞ்சளை நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்துகொள்வதைக் காணலாம். அதுபோன்றே தொடக்க காலங்களில் புலியின் பல்லை நூல் போன்ற இழைகளில் கட்டிக் கழுத்தில் அணிந்திருக்கக்கூடும். பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி[2] எனும் அகநானூற்று வரி மூலம் பிற்காலத்தில் பொன், வெள்ளி போன்ற உலோகங்களினாலும், பலவகை மணிகளைக் (இரத்தினங்கள்) கொண்டும் செய்யப்பட்ட கழுத்தணிகளில் புலிப் பல்லையும் கோர்த்து அணிந்தமை தெரிய வருகிறது.

நோக்கம்[தொகு]

தெய்வம் ஏறப்பெற்ற சாலினி என்பவளை கொற்றவை போல் அலங்காரம் செய்தபோது, எயினர் குடியினர் அவளுக்குப் புலிப்பல் தாலியையும் அணிவித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மறவராகிய எயினர்களுக்குத் தெய்வமும் அவர்களுக்கு வெற்றி தருபவளுமாகக் கருதப்பட்ட கோற்றவையின் அணிகலன்களுள் ஒன்றாகக் கூறப்பட்டமையால் புலிப்பல் தாலி ஒரு வீரத்தின் சின்னம் என்னும் கருத்துக்கும் வித்திடுகிறது. மேற்படி புலிப்பல் தாலியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அஞ்சாமையுடைய வலிய புலியின் வாயைப் பிளந்து பெற்ற வெண் பற்களை ஒழுங்கான மாலையாகக் கோத்த புலிப்பல் தாலி" என்னும் பொருள்படும்படியாக மறங்கொள் வரிப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி என்கிறது சிலப்பதிகாரம்[3]. இது வீரச்செயல் மூலம் தாலிக்கான புலிப்பல் பெறப்பட்டதைக் காட்டுகிறது. பெரும்பாலும் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்களே தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது. ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் இது அணிபவரின் வீரத்தின் சின்னமாக அணியப்பட்டதாகத் தெரியவில்லை. மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காகச் சிறுவர்கள் இதை அணியும் வழக்கம் இருந்திருக்கலாம். எனினும் இயற்கைக் கூறுகளினதும், தீய சக்திகளினதும் பாதிப்புக்களிலிருந்து காத்துக் கொள்வதற்காகவே புலிப்பல் தாலி அணியப்பட்டது என்று கருதப்படுகிறது. இவ்வழக்கமே பிற்காலத்தில் ஐம்படைத் தாலியாக வளர்ச்சியடைந்தது என்ற கருத்தும் உண்டு[4].

குறிப்புக்கள்[தொகு]

  1. குறுந்தொகை 161:1 வரி 4
  2. அகநானூறு 7:17 வரி 22
  3. சிலப்பதிகாரம் 12:27 வரி 28
  4. காந்தி, க., 2008. பக் 197,198

உசாத்துணைகள்[தொகு]

  • காந்தி, க., தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2008.
  • புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), அகநானூறு - களிற்றியானை நிரை, பாரி நிலையம், சென்னை. 2002 (முதற் பதிப்பு 1960)
  • சிறீ சந்திரன், ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிப்பல்_தாலி&oldid=3924207" இலிருந்து மீள்விக்கப்பட்டது