தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி 1960களிலிருந்து எழுச்சி பெற்றுள்ளது. துவக்கத்தில் திராவிடக் கட்சிகளின் அரசியல் ஆதிக்கமும் வளர்ச்சியும் மெதுவாக முன்னேறி திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவதில் முடிந்தது. 1970களில் திராவிட இயக்கங்களில் பிளவுகள் ஏற்பட்டு ஒன்றொன்றிற்கொன்று எதிர்நிலைகளை எடுத்தாலும் மாநில ஆட்சி ஏதாவதொரு திராவிடக் கட்சியிடம்தான் உள்ளது.1960களில் திராவிடக் கட்சிகளுக்கு கிடைத்த மக்கள் ஆதரவிற்கு பல காரணங்கள் இருந்தன;நடுவண் அரசில் காங்கிரசுக் கட்சியின் வீழ்ச்சி,திராவிடக் கட்சிகள் சுட்டிய நாட்டின் வடக்கு-தெற்கு பகுதிகளுக்கிடையேயான வளர்ச்சி வேறுபாடு ஆகியனவும் அவற்றில் சில. தமிழகத்திலும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான நிகழ்வுகள் காங்கிரசு ஆட்சிக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. அறிஞர் அண்ணாதுரையின் பிரிவினைவாதத்தைத் தவிர்த்த அரசியல், திராவிடக் கட்சிகளின் திரைப்படத் துறை பங்கு ஆகியனவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி யிருந்தன. விடுதலைக்குப் பிறகு பிறந்து முதல்முறை வாக்குரிமை பெற்றிருந்த இளைஞர்களின் மாற்றத்தை விரும்பிய மனப்பாங்கும் ஓர் காரணியாக அமைந்திருந்தது.