சூரத் பிளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூரத் பிளவு (Surat split) என்பது 1907 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் நடைபெற்ற பிளவினைக் குறிக்கிறது. 1885 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு துவக்கத்தில் பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்களின் உரிமைக்காக பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் மனுக்கொடுத்தல், கோரிக்கை வைத்தல் போன்ற மிதவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால் குடியேற்றவாத அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.

1906 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையை எதிர்க்க காங்கிரசு சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. மேலும் காலனிய அரசுக்கு வங்காளத்தில் எவ்வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்று 1906 ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. காங்கிரசின் தீவிர தேசியவாத உறுப்பினர்கள் சுதேசி இயக்கத்தையும், ஒத்துழையாமையையும் நாடு முழுவதும் விரிவு படுத்தவேண்டும் என எண்ணினர். ஆனால் மிதவாதிகள் அதனை விரும்பவில்லை; அந்நியப் பொருட்களை மட்டும் புறக்கணித்தால் போதுமானது, நேரடியாகக் காலனிய அரசுடன் மோத வேண்டாம் என கருதினர். இந்த கருத்து வேறுபாடு 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வெளிப்படையாக வெடித்தது. கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா ஆகியோர் தலைமையிலான மிதவாதிகள் பிரிவு இம்மோதலில் வெற்றி பெற்றது. பால கங்காதர திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் கட்சியினை விட்டு வெளியேறினர்.

இப்பிளவினால் இரு பிரிவினரும் பலவீனமடைந்தனர். திலகரின் சுதேசி இயக்கம் வலுவிழந்து காலனிய அரசால் ஒடுக்கப்பட்டுவிட்டது. அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் இளைய தலைமுறை காங்கிரசு தொண்டர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மிதவாதிகள் இழந்து விட்டனர். இரு பிரிவினருக்கிடையேயான மோதலில் மிதவாதிகளின் நிலையை பலப்படுத்த, பிரித்தானிய அரசு அவர்களுக்காக சில சலுகைகளை அளித்தது - இந்திய அரசுச் சட்டம், 1909 ஐ இயற்றி அவர்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றியது. மேலும் 1911 இல் வங்காளப் பிரிவினையை இரத்து செய்து மீண்டும் அம்மாநிலத்தை ஒன்றிணைத்தது. இப்பிளவின் பின்னடைவிலிருந்து மீள காங்கிரசுக்கு பல ஆண்டுகள் பிடித்தது. விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு விட்டுச் சென்ற வெற்றிடத்தை பல புரட்சி இயக்கங்கள் ஆக்கிரமிக்க முயன்றன. 1916 இல் அன்னி பெசண்ட்டின் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்படும் வரை காங்கிரசால் எந்த பெரிய போராட்டத்தையும் நடத்த முடியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்_பிளவு&oldid=3608075" இலிருந்து மீள்விக்கப்பட்டது