நற்பிட்டிமுனை அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்

ஆள்கூறுகள்: 7°25′00″N 81°49′00″E / 7.41667°N 81.81667°E / 7.41667; 81.81667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்
அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலய முகப்புத் தோற்றம்
அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம் is located in இலங்கை
அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்
அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்
கல்முனை
ஆள்கூறுகள்:7°25′00″N 81°49′00″E / 7.41667°N 81.81667°E / 7.41667; 81.81667
பெயர்
பெயர்:அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கிலங்கை
அமைவு:கல்முனையிலிருந்து மேற்குப்புறமாக
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்

அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம் கிழக்கிலங்கையின் தெற்கே கல்முனையிலிருந்து மேற்குப்புறமாக நற்பிட்டிமுனை எனும் கிராமத்தில் உள்ளது. தாழ்ந்த வயல் நிலங்கள் சூழ அதனிடையில் "நா" வடிவில் நீண்டிருக்கும் நிலப்பிரதேசம் என்பதால் அக்கிராமம் நாப்புட்டிமுனை என அழைக்கப்பட்டு பின் நற்பிட்டிமுனை எனத் திரிந்ததாகக் கூறுவர். இவ்வாலயம் கல்முனையிலிருந்து நற்பிட்டிமுனைக்குள் நுளையும் போது அதன் நுளைவாயிலில் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக ஊரவர்கள் இப்பிள்ளையாரை வழிபடுகின்றனர்.

தலவரலாறு[தொகு]

ஆரம்பகாலத்தில் இவ்வாலயத்தின் தலவிருட்சமான ஆலமரத்தின் அடியில் சிறுகல்லொன்றைப் பிரதிட்சைப்படுத்தி மக்கள் வழிபடத் தொடங்கினர். இது ஏறக்குறைய கி.பி 1900களின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கியதெனக் கருதப்படுகின்றது. வாகன வசதிகள் குறைவாயிருந்த அக்காலப்பகுதியில் இக்கிராமத்திற்கும் பிற ஊர்களுக்குமான போக்குவரத்துத் தொடர்பு கால்நடையாகவே இருந்தது. குறுந்தூரப் பாதையாக வயல் அணைக்கட்டுக்களை அண்டிய பாதையையே மக்கள் பயன்படுத்தினர். இப்பாதையின் வழித் தெய்வமாகவும் கிராமத்தின் எல்லைத் தெய்வமாகவும் இக்கல்லைப் பிரதிட்சைப்படுத்தி வழிபாடுசெய்யத் தொடங்கியிருக்கலாம். அதிகாலையில் தூர இடங்களுக்கு தத்தம் தொழிலுக்குச் செல்வோரும் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும் அம்பலத்தடியானை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர். வயல் அறுவடையின் பின்னர் உழவர்கள் முதல் புதிர்ப் பொங்கலிட்டு பக்தி கொண்டாடும் கோயிலாகவும் இது அமைந்தது.

ஓலைக் கிடுகுகளால் அமைக்கப்பட்ட ஒருசிறு பந்தலிலே அம்பலத்தடிப் பெருமான் முதலில் இருத்தப்பட்டார். காரையடிக்குளம் என அழைக்கப்பட்ட வண்டல்மண் கொண்ட தாழ்நிலப்பகுதியை அண்டியதாகக் காணப்பட்ட சற்று உயரமான இடம் இக்கோயில் காணப்படும் பகுதியாகும். வாகை, வம்மி, இத்தி என சுற்றிவர பெருவிருச்சங்கள் வளர்ந்து நிற்கின்றன. நடைவழியில் தங்கிநிற்போர் நினைந்துருகி தம்துன்பம் சொல்லும் இறைவனாகவும் அம்பலத்தடிப் பிள்ளையார் வணங்கப்பட்டார்.

அன்றைய இளைஞர்கள் பலர் சேர்ந்து அம்பலத்தடியானின் இச்சந்நிதியில் மாலைப் பொழுதில் நெய் விளக்கிட்டு வழிபட்டதுடன் தேவைப்பட்ட விபூதி, சந்தனம் முதலானவற்றையும் தாமாகவே ஒழுங்கு செய்தனர்.

1930-35 காலப்பகுதியில் 'தாஸ்' என அழைக்கப்பட்ட அன்பரொருவர் வழக்கு ஒன்றில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என அம்பலத்தடியானை வேண்டி நேர்த்தி செய்தார். வழக்கில் வெற்றி கிடைத்தது. அம்பலத்தடியானுக்கு கல்லினால் சிறு கட்டிடம் அமைத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். இதுவே எம்பெருமானுக்கு அமைக்கப்பட்ட ஆரம்பக் கட்டிடமாகும்.

பாண்டிருப்பு திரோபதையம்மன் ஆலய வனவாச நிகழ்வின் போது பஞ்சபாண்டவர்கள் பந்தியமர்ந்து செல்லும் தலமாக அம்பலத்தடி ஆலயம் மாறியது. அதன்போது விசேட பந்தர் அமைத்து பாண்டவர்களை அமர்த்தி காலாறிச் செல்லும் நிகழ்வுகளையும் கூடவரும் பக்தர்களுக்கு தாகசாந்தி வழங்கும் பணியையும் அப்போது இளைஞர்களாயிருந்த அமரர் வீரசிங்கம், அமரர் கணபதிப்பிள்ளை ஆகியோர் முன்னின்று செய்தனர். இவர்கள் நற்பிட்டிமுனையிலிருந்து அப்போது கற்குழி வேலையில் (கல்லுடைத்தல்) ஈடுபட்ட மற்றைய இளைஞர்களுடன் இணைந்து அம்பலத்தடிப் பிள்ளையாருக்கு மண்டபம் அமைப்பதற்கான ஒரு அத்தவாரத்தையும் தமது முயற்சியில் கட்டியிருந்தனர். பல ஆண்டுகளாக இவ்வத்திவாரத்துடனேயே இவ்வாலயம் காணப்பட்டது.

1980களின் பிற்பகுதியில் அம்பலத்தடிப் பிள்ளையாரின் அருளினால் ஆலயத்திற்கு முறைப்படியான ஒரு நிருவாகக்குழு அமைக்கப்பட்டது. இதிலிருந்து ஆலய நிருமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கும் திருப்பணிச் செயற்பாடுகள் செவ்வனே செய்யப்படுவதற்கும் திருவருள் கைகூடியது. ஆரம்பத்தில் ஆகம முறையிலான பூசைகளற்ற வழிபாட்டுமுறைகளே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆகம முறையிலமைந்த ஒரு முழுமையான ஆலயத்தை அமைக்கும் கட்டடத் திருப்பணிவேலைகள் 1999களில் ஆரம்பமானது. ஆலயத்தின் மூலஸ்தானம் அமையவேண்டிய இடத்தில் ஆலயமூல விருட்சமான ஆலமரம் நின்றது. அதன் அடியில் நாகங்கள் இருப்பிடம் கொண்டுவாழ்ந்து வந்தன. இதனால் ஆலய கட்டடத் திருப்பணிக்காக இவ்விருட்சத்தினை எவ்வாறு அகற்றுவது என்ற கேள்வி விடைகாண முடியாதவொன்றாயிருந்தது. இவ்வேளையில் ஒருநாள் திடீரென வானம் கறுத்து மழை தூறத் தொடங்கியது. கூடவே சூறைக் காற்றும் வீசியது. கிராமத்தின் வேறெந்தப்பகுதியிலும் இக்காற்று ஒரு கிளையைத்தானும் உடைக்கவில்லை. ஆனால் ஆலயவிருட்சத்தின் கிளைகள் முறித்தெறியப் பட்டிருந்தன. இச்செய்திகேட்டு பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டனர். ஆலய கட்டடத் திருப்பணிகளை உடனே ஆரம்பிப்பதற்கான இறைவனின் ஆணையாகவும், இறைவனே இயற்கையின் வடிவில் இப்பணியினை ஆரம்பித்து வைத்ததாகவும் பக்தர்கள் நெஞ்சுருகிக் கொண்டாடினர்.

ஆகம விதிமுறைப் படியான எம்பெருமானின் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 2008ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் மகா கும்பாபிசேகம் நடைபெற்றது.

திருவிழா[தொகு]

ஆனி உத்தரத்துடன் முடிவடையும் பத்து நாட்கள் திருவிழாக்காலமாகும்.