ஐந்தாம் ஜெயவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்தாம் ஜெயவர்மன் (Jayavarman V) கெமர் பேரரசின் ஆட்சியாளராக இருந்தவன்.

ஆரம்ப காலம்[தொகு]

ஐந்தாம் ஜெயவர்மன் அவனது தந்தை ராஜேந்திரவர்மனின் இறப்புக்குப் பின்னர் தனது 10வது அகவையில் கெமர் பேரரசனாக முடி சூடினான். இவனது ஆரம்ப ஆட்சிக் காலத்தில், மன்னராட்சியைப் பெரும்பாலும் நீதிமன்ற அதிகாரிகளே நிருவகித்து வந்தனர். முன்னர் மன்னராக இருந்த முதலாம் ஹர்ஷவர்மனின் பேரன் யஜ்னவராகன் என்பவரிடம் முறையாகக் கல்வி கற்றான். யஜ்னவராகன் என்பவர் பௌத்தம், மருத்துவம், மற்றும் வானியல் போன்ற துறைகளில் பெரும் அறிவைப் பெற்றிருந்தவர்[1]. ஜெயவர்மன் 17 வயதாக இருக்கும் போது டா கெயோ என்ற இடத்தில் தனக்கென அரசுக் கோயில் கட்டும் முயற்சியில் இறங்கினான். ஆனாலும், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டபோது அக்கட்டடம் இடி மற்றும் மின்னலினால் சேதமுற்றது. இதனைக் கொடிய சகுனமாகக் கருதிய அக்கோயிலின் பூசகர்கள் அக்கொடிய அரக்கனைக் கலைப்பதற்காக அங்கு ஒரு யாகத்தை நடத்தினர். அதன் பின்னர் யானைகள் வரவழைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடர்ந்தன. ஆயினும் பணிகள் முடிவடையவில்லை. அக்கோயில் முடிவடையாத நிலையில் காணப்படுகிறது[2].

ஆட்சியாளர்கள்[தொகு]

ஐந்தாம் ஜெயவர்மனின் ஆட்சியில் உயர்குடியைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்[3]. முன்னர் இருந்த இரண்டு அரசர்களின் கீழ் பணியாற்றிய ஆத்மசிவா என்பவர் ஜெயவர்மனின் ஆட்சியில் முக்கிய மதகுருவாக இருந்தார். ராஜேந்திரவர்மனின் கீழ் பணியாற்றிய நாராயணா என்பவர் hotar என அழைக்கப்படும் உயர் குருவாகப் பணியாற்றினார். எனினும், சப்ததேவகுலத்தவர்களே அநேகமான அரச சேவைகளைக் கவனித்து வந்துள்ளனர். இவர்களே 1002 ஆம் ஆண்டில் முதலாம் சூரியவர்மன் ஆட்சியேறவும் உதவி புரிந்துள்ளார்கள்.

மகாயாண பௌத்தத்தின் எழுச்சி[தொகு]

ஐந்தாம் ஜெயவர்மன் ஓர் இந்துவாக இருந்தாலும், பௌத்த மதம் பரவுவதற்கு அவன் தடை விதிக்கவில்லை. பௌத்த சமயத்துக்கான அமைச்சராக இருந்த கீர்த்திபண்டிதர் என்பவர் வெளி நாடுகளில் இருந்து கம்போடியாவுக்குள் பௌத்த நூல்களைக் கொண்டு வந்தார். மதச் சடங்குகளில் இந்து வழிபாடுகளுடன் இணைந்து பௌத்த வழிபாடும் நடத்த அவர் பரிந்துரைத்தார்.

ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் பௌத்தம் பரவியதை அடுத்து அரச உயர் பதவிகளில் பெண்களும் இடம்பெறத் தொடங்கினார்கள். யஜ்னவராகரின் சகோதரி யாதவி என்பவர் பாண்டே சிறீ என்ற கோயிலைக் கட்டுவதற்குத் தேவையான நிதியைச் சேகரித்துக் கொடுத்தார். சப்ததேவகுலத்தைச் சேர்ந்த பிரானா என்பவர் அரசனின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பணியாற்றினார்[3].

மறைவுக்குப் பின்னர்[தொகு]

ஐந்தாம் ஜெயவர்மன் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தான். அவனது ஆட்சி அமைதியும் வளம் மிக்கதாகவும் இருந்தது. கிபி 1001 ஆம் ஆண்டில் அவன் இறந்த பின்னர் அவனுக்கு பரமசிவலோகன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Briggs, The Ancient Khmer Empire, பக். 134
  2. Higham, The angkor Civilization பக். 79
  3. 3.0 3.1 Briggs, The Ancient Khmer Empire பக். 135

உசாத்துணை[தொகு]

  • Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society 1951.
  • Higham, Charles. The Civilization of Angkor. University of California Press 2001.
முன்னர்
ராஜேந்திரவர்மன் II
அங்கோர் பேரரசர்
968–1001
பின்னர்
உதயாதித்தியவர்மன் I
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_ஜெயவர்மன்&oldid=1631996" இலிருந்து மீள்விக்கப்பட்டது