யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை என்பது சைவ மக்களுக்குச் சிறப்பாகவும், தமிழ் மக்களுக்குப் பொதுவாகவும் நன்மை தரும் விடயங்களை செய்வதற்கென யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உருவாக்கப்பட்ட ஒரு சைவ சமய நிறுவனமாகும். ஆறுமுக நாவலர் சைவ சமயத்திற்கும் தமிழ்மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கினைக் கொண்டு அவரின் மறைவிற்குப் பின் சைவப் பெரியோர்களால் சைவ மக்களின் சமய, கல்வி, கலாசார, சமூக மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை சர்வதாரி வருடம் சித்திரை மாதம் 29ம் திகதி (ஏப்ரல் 29, 1888)) யாழ்ப்பாணம் சைவ சமய பரிபாலன சபை என்ற பெயரில் வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்டது. பின்னர், விகிர்தி வருடம் கார்த்திகை 15ஆம் நாள் (நவம்பர் 15, 1890) திருத்தப்பட்ட பிரமாணங்களுக்கமைய யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் பணிகள் யாவும் யாழ்ப்பாணம் கல்லூரி வீதி 66 ஆம் இலக்கத்தில் உள்ள நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் இயங்கும் பணிமனையில் இருந்தே நெறிப்படுத்தப்படுகின்றன.

சேவைகள்[தொகு]

  • ஆரம்ப காலம் தொடக்கம் இந்து சாதனம் பத்திரிகையை வெளியிட்டு வருகிறது.
  • இந்துக் கல்லூரி முகாமைத்துவ சபையை நிறுவி இந்துக் கல்லூரி எனும் பெயரில் உயர் கல்விக் கூடங்களை பல இடங்களில் நிறுவி முகாமைத்துவம் செய்தல்.
  • பாடசாலை மாணவர்களுக்காக சைவநெறித் தேர்வு, பண்ணிசை, திருக்குறள் மனனம், நாவலர் குருபூசையை முன்னிட்டுக் கட்டுரை, பேச்சு ஆகியவற்றில் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்குதல், உயர்வகுப்பு மாணவர்களுக்காக இந்து நாகரிகம், இந்துசமயம், தமிழ்மொழி ஆகிய பாடத் தேர்வுகள் நடத்திப் பரிசு வழங்கல், சைவ சித்தாந்த பண்டிதர் தேர்வின் மூலம் சைவ சிந்தாந்த நெறியினை பெரியவர்களிடம் தெளிவுறச் செய்தல், சைவ சமயக் கருத்தரங்குகள், சைவ மாநாடுகள் போன்றவற்றை நடத்தல், சைவசமய நூல்களை அச்சிட்டு வெளியிடல்
  • தரும சாதனங்களைப் பேணும் வகையில் சிதம்பரம் அம்பலவாணர் சுவாமி புண்ணிய நாச்சியார் என்ற அறக்கட்டளையின் பரிபாலனத்தையும் அவ்வழிவந்த சொத்துகளைப் பாதுகாத்து முகாமைத்துவம் செய்தும் வருகிறது[1].
  • அகில இலங்கை ரீதியில் சைவ மாநாடுகளை நடத்திவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]