ப. அர. நக்கீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. அர. நக்கீரன் என்பவர் தமிழக எழுத்தாளர். சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் “அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ற நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய "முழுத்தர மேலாண்மை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கல்வி[தொகு]

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்தைச் சேர்ந்த பொதட்டூர் பேட்டை என்ற ஊரில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பி.ஆர்.நக்கீரன். அங்கு பள்ளிப் படிப்பையும், கிண்டி பொறியியற் கல்லூரியில் எந்திரவியல் துறையில் பட்டப்படிப்பையும் உற்பத்திப் பொறியியல் துறையில் மேற்பட்டப் படிப்பையும் (M.Sc.Engg.) முடித்து, சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (I.I.T.) முனைவர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து நாட்டின் வாரிக் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர்.

பணிகள்[தொகு]

  • கிண்டி பொறியியற் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்த இவர், குரோம்பேட்டையில் உள்ள (M.I.T.)-யில் உற்பத்தி பொறியியல் துறையில் துறைத் தலைவராகவும் பணியாற்றி விட்டு, பிறகு அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியற் கல்லூரியில் எந்திரவியல் துறையில் பேராசிரியராகவும், தமிழக அரசின் தமிழ்க் கலைச்சொல் பேரகராதி உருவாக்கத்திட்டத்தின் தனி அலுவலராகவும் பணியாற்றினார்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியப் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும், அண்ணா செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்பு (ANNA EDUSAT) நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
  • பல பட்ட, மேற்பட்ட மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.
  • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநராக 11.9.2006 முதல் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.

சிறப்புகள்[தொகு]

  • "அளவையியல்" (Metrology) சோதனைக் கூடங்களை வடிவமைத்து நிறுவி, அதனை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தியமையும், இந்தியாவிலேயே முதன் முறையாக ‘எந்திர மின்னணுவியல்’ (Mecatronics) என்ற மேற்பட்டப் படிப்பை தொடங்கியமையும் இவரின் பெருமைக்குச் சான்றுகளாகும்.
  • எந்திரவியல் துறையில் பல கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.
  • இந்திய, வெளிநாட்டு தொழில்நுட்ப இதழ்களிலும், கருத்தரங்குகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அறிவியல் தலைப்புகளில் வானொலியில் பல உரைகளை ஆற்றியுள்ளார்.
  • உற்பத்திப் பொறியியல் துறையில் அளவையியல், தரக் கட்டுப்பாடு, முழுத்தர மேலாண்மை, பராமரிப்புப் பொறியியல் மற்றும் கணினிச் சார்ந்த உற்பத்திப் பொறிகள் ஆகியவற்றில் வல்லுநர்.
  • பல தொழில்நுட்ப வல்லுநர் குழுக்களில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தரவட்டக் குழு ஒன்றியத்தின் தலைமை நிலையத்தில் ஒரு இயக்குநராக செயலாற்றி, தற்பொழுது சென்னைக் கிளையின் தலைவராகவும் உள்ளார்.
  • இப்போது அண்ணா பல்கலைக்கழக காலாண்டிதழான களஞ்சியம் என்ற இதழின் ஆசிரியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
  • இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
  • அமெரிக்காவின் FETNA அமைப்பும், இந்தியாவின் QCFI நிறுவனமும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரப்படுத்தியுள்ளது. மேலும், QCFI-யின் சென்னைக்கிளை இவருக்குத் தரவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதிற்கான நிகரில்லா பங்களிப்பு விருதை வழங்கியுள்ளது.

தமிழ் இணைய மாநாட்டுக் குழு உறுப்பினர்[தொகு]

தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறவுள்ள ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டிற்கான குழுவின் உறுப்பினராகத் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.

உசாத்துணை[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அர._நக்கீரன்&oldid=2765780" இலிருந்து மீள்விக்கப்பட்டது