தொல்காப்பியம் மரபியல் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபு என்பது உடலிலும், உணர்விலும், அறிவிலும், சமுதாயத்திலும், மொழியிலும் மரத்துப்போன ஒன்று. அது பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதையாகும், அதன் கால்வழியில் தோன்றும் இனத்தில் ஊறி மரத்துக் கிடக்கும்.

கால் மரத்துப்போனால் உணர்வு தெரியாது. ஒருவன் தலைகீழாக நடக்கலாம். அது பயிற்சி. எல்லாரும் காலால் நடப்பது மரபு. பலருக்குக் காலால் நடப்பது மரத்துப்போயிருக்கிறது. அதுபோலத் தமிழ்மொழியில் மரத்துப்போன செய்திகளைக் கூறுவது இந்த இயல்.

இது தொல்காப்பியத்தை நிறைவு செய்யும் இயல். முன்னோரின் மொழிமரபு வலிமையானது என்பதை விளக்குவது. தொல்காப்பிய ஊற்றோட்டத்தில் ஊர்க்கழிவு கலந்தாற் போலப் பிற்காலச் செய்திகள் பல இதில் சேர்ந்துள்ளன. மக்களில் நான்கு வகைப் பாகுபாடு பொருத்தமில்லா இடத்தில் ஊடுருவல், இறுதியில் உள்ள நூல், உரை, சிதைவு, உத்தி பற்றிய செய்திகள் போன்றவை பிற்காலத்தில் புகுந்தவை

  • செய்தித்தொகுப்பில் பெரும்பான்மையானவை தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரைப் பின்பற்றியவை.
  • தொகுப்புப் பார்வை
தொல்காப்பியத்தில் விலங்கினம்

மரபுப் பெயர்[தொகு]

  • இளமைப்பெயர் 9 - பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி (1)
  • ஆண்பாற்பெயர் – ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் – என்பனவும், பிறவும் (2)
  • பெண்பாற்பெயர் – பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி, (3)

இளமைப் பெயர்[தொகு]

பல்லறிவு உயிர்க்கு இளமைப்பெயர் (நூற்பா வரிசை)[தொகு]

  • கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, மான் (3-559) எருமை, மரை (3-560) கவரி, கராம் (3-561) ஒட்டகம் (3-552)
  • குட்டி - மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணில் (3-550) நாய், பன்றி, பு, முயல், நரி (3-554) கோடுவாழ் குரங்கு (3-557)
  • குருளை - நாய், பன்றி, புலி, முயல் (3-552) நரி (3-553)
  • குழவி - குஞ்சரம் (3-563) ஆ, எருமை (3-564) மக்கள் (3-567)
  • பறழ் - மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணில் (3-551) நாய், பன்றி, பு, முயல், நரி (3-554) குரங்கு (3-558)
  • பார்ப்பு - பறப்பவற்று இளமை (3-548) தபழ்பவை (3-549) குரங்கு (3-558)
  • பிள்ளை - பறப்பவற்று இளமை (3-548) தபழ்பவை (3-549) பன்றி, பு, முயல், நரி (3-555) குரங்கு (3-558)
  • மகவு - குரங்கு (3-558) கடமை, மரை (3-565) முசு, ஊகம் (3-566) மக்கள் (3-567)
  • மறி - யாடு, குதிரை, நவ்வி, உழை, ஒடும் ப்ல்வாய் (3-556)

உயிரின அகர வரிசை[தொகு]

ஓரறிவு உயிர்க்கு[தொகு]

  • ஓரறிவு உயிரின் இளமைப்பெயர் – பிள்ளை, குழவி, கன்று, போத்து (24)
  • நெல், புல் – ஆகியவை இப்பெயர்களை ஏற்பதில்லை (25)
  • இங்குச் சொல்லப்பட்ட முறையில் இளமைப்பெயர்கள் அமையும் (26)

உயிரினப் பாகுபாடு[தொகு]

  • ஓரறிவு உயிர் – ஊறு-அறிவு (தொடு-உணர்வு) (மெய்-உணர்வு)
  • 2 அறிவு – மெய் & நா அறிவு
  • 3 அறிவு – மெய், நா & மூக்கு அறிவு
  • 4 அறிவு – மெய், நா, மூக்கு & கண் அறிவு
  • 5 அறிவு – மெய், நா, மூக்கு, கண் & செவி அறிவு
  • 6 அறிவு – நெய், நா, மூக்கு, கண், செவி & மன அறிவு
  • நுட்பமாக உணர்ந்தோர் இவற்றை நெறிப்படுத்தி வைத்துள்ளனர் என்கிறார் தொல்காப்பியர். (27)
  • ஓரறிவு உயிர்
புல், மரம் மற்றும் அவற்றின் கிளைகள் (28)
கிளை – பாசி போல்வன
  • 2 அறிவு உயிர்
நந்து, முரள், மற்றும் அவற்றின் கிளைகள் (29)
நந்து = நத்தையினம்
முரள் = நீர்வாழ் சங்கினம்
கிளை – நீர்வாழ் கிளிஞ்சல், நிலம்வாழ் முற்றில் என்னும் மட்டிச்சுண்ணாம்பு போல்வன
  • 3 அறிவு உயிர்
சிதல், எறும்பு, மற்றும் அவற்றின் கிளைகள் (30)
சிதல் = கறையான்
கிளை – ஈயல் (ஈசல்), மூதாய் (தம்பலப்பூச்சி என்று சொல்லப்படும் வெல்வெட்டுப் பூச்சி) போல்வன
  • 4 அறிவு உயிர்
நண்டு, தும்பி, மற்றும் அவற்றின் கிளைகள் (31)
கிளை – வண்டு, தேனீ, குளவி
  • 5 அறிவு உயிர்
மா, மாக்கள் மற்றும் அவற்றின் கிளைகள் (32)
மா - நாற்கால் விலங்கு
மாக்கள் – மனவுணர்வு இல்லாத மக்கள்,
கிளை – எண்கால் வருடை, குரங்கு போல்வன
  • 6 அறிவு உயிர்
மக்கள், மற்றும் அவர்களின் கிளைஞர் (33)
ஊமை, செவிடு முதலானோரும், தேவர், நரகர் போன்ற கற்பனை மாந்தரும்

உயிரினப் படங்கள்[தொகு]

ஆண்பாற் பெயர் - அகரவரிசைத் தொகுப்பு[தொகு]

  1. அப்பர் – யாட்டு அப்பர் (47)
  2. இரலை – புல்வாய் இரலை (44)
  3. உதள் – யாட்டு உதள் (47)
  4. ஏற்றை – ஆற்றலுடைய விலங்கினங்களை யெல்லாம் ஏற்றை என வழங்குவர் (49)
  5. ஏறு – பன்றியில் ஆண், புல்வாயில் ஆண், உழையில் ஆண், கவரியில் ஆண் ஆகியவற்றை ஏறு என்பர் (38) எருமை ஏறு, மரை ஏறு, பெற்ற ஏறு (பெற்றம் = மாடு) (39) சுறா ஏறு (40)
  6. ஒருத்தல் – புல்வாய், புலி, உழை, மரை, கவரி – ஆகியவற்றின் ஆண் (35) யானை, பன்றி – ஆகியவற்றின் ஆண் (36) எருமையின் ஆண் (37)
  7. கடுவன் – ஆண்-குரங்கைக் கடுவன் என்பர் (68)
  8. கண்டி – ஆண்-எருமையைக் கண்டி என்பர் (68)
  9. கலை – புல்வாய்க் கலை (44), உழைக்கலை (45), முசுவின் கலை (46)
  10. களிறு – யானையில் ஆண், பன்றியில் ஆண் (34)
  11. சேவல் – ஆண்-குதிரையைச் சேவல் என்பர் (68) சேவல் – மயில் நீங்கலாக ஏனைய சிறகுள்ள புள்ளினங்களை யெல்லாம் சேவல் என்பர். (48)
  12. தகர் – யாட்டுத் தகர் (47)
  13. போத்து – பெற்றப் போத்து, எருமைப் போத்து, புலிப் போத்து, பரைப் போத்து, புல்வாய்ப் போத்து, (41) முதலைப் போத்து (42), மயில் போத்து, எழால் போத்து, (எழால் = பருந்து), (43)
  14. மோத்தை – யாட்டு மோத்தை (47)
  • ஆண் பால் எல்லாவற்றையும் ஆண் என்றும், பெண்பால் எல்லாவற்றையும் பெண் என்றும் குறிப்பிடுவர். (50)

பெண்பாற் பெயர் - அகரவரிசைத் தொகுப்பு[தொகு]

  • ஆண் பால் எல்லாவற்றையும் ஆண் என்றும், பெண்பால் எல்லாவற்றையும் பெண் என்றும் குறிப்பிடுவர். (50)
  1. அளகு – கோழிக்கும், கூகைக்கும் மட்டும் அளகு என்னும் பெயர் உரியது (56) மயிலையும் அளகு எனலாம் (56)
  2. ஆ – பெற்றம், எருமை, மரை ஆகியவற்றின் பெண்ணை ஆ என்பர் (60)
  3. கடமை – யாட்டுக் கடமை (64)
  4. நாகு – எருமை, மரை, பெற்றம் ஆகியவற்றின் பெண்ணை நாகு என்பர் (62) நந்து நாகு (63)
  5. பாட்டி – பன்றிப்பாட்டி, நாய்ப்பாட்டி (65) நரிப்பாட்டி (66)
  6. பிடி – பிடி யானை (51)
  7. பிணவல் - பன்றி, புல்வாய், நாய் ஆகிய மூன்றின் பெண்ணைப் பிணவு என்பர். (59)
  8. பிணவு – பன்றி, புல்வாய், நாய் ஆகிய மூன்றின் பெண்ணைப் பிணவு என்பர். (58)
  9. பிணா – உயர்திணை மக்களுக்கு உரியது (61)
  10. பிணை – புல்வாய், நவ்வி, உழை, கவரி ஆகியவற்றின் பெண்ணைப் பிணை என்பர். (57)
  11. பெட்டை – பெட்டை ஒட்டகம், பெட்டைக் குதிரை, பெட்டைக் கழுதை, பெட்டை மரை (52) பெட்டைக் கோழி, பெட்டை மயில், எனப் புள்ளினங்களுக்கெல்லாம் (53)
  12. பெடை – குயில்பெடை, அன்னப்பெடை எனப் புள்ளினங்களுக்கெல்லாம் (55)
  13. பெண் – உயர்திணை மக்களுக்கு உரியது (61)
  14. பேடை – குயில்பேடை, அன்னப்பேடை எனப் புள்ளினங்களுக்கெல்லாம் (54)
  15. மந்தி – குரங்கு மந்தி, முசு மந்தி, ஊக மந்தி (67)
  16. மூடு – யாட்டு மூடு (64)

சிறப்பு-வழக்கு மரபு[தொகு]

  1. கோட்டான் = கூகை (68)
  2. தத்தை = கிளி (68)
  3. பூசை = பூனை (68)
  4. ஏனம் = பன்றி (68)

இருதிணைப் பொதுச்சொல்[தொகு]

  • ஆண், பெண், பிள்ளை (69)
  1. அந்தணர்க்கு உரியவை – நூல், கரகம், முக்கோல், மணை (70) பாடாண் திணையில் பரிசில் தொடர்பான கிழமைப்பெயர், நெடுந்தகை, செம்மல் என்னும் பெயர்கள், போன்ற அரசர்க்கு உரிய பெயர்கள் அந்தணர்க்கு உரிமை இல்லை (73) அந்தணாளர் ஆட்சிக்குத் தடை இல்லை. (82)
  2. அரசர்க்கு (சங்கோல் அரசர்க்கு) உரியவை – படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி, மற்றும் பிற (71) அந்தணர்க்கு உரியவும் அரசர்க்கு உரியன (72) பாடாண் திணையில் பரிசில் தொடர்பான கிழமைப்பெயர், நெடுந்தகை, செம்மல் என்னும் பெயர்கள், போன்றவை அரசர்க்கு உரியன (73) குறுநில மன்னர்களுக்கு (மன் பெறு சிறப்பின் ஏனோர்க்கு) வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் ஆகியவை உரியன. (83)
  3. வைசிகனுக்கு வாணிக வாழ்க்கை உரியது (77) எட்டுவகை உணவுச்செய்தியும் வைசிகனுக்கு உண்டு (78) இவர்கள் கண்ணியும், தாரும் அணிந்துகொள்ளலாம். (79)
  4. . வேளாண் மாந்தர்க்கு உழுதொழில் அல்லது இல்லை (80) வேந்தன் தந்தால் படை வைத்துக்கொள்ளலாம். தலையில் கண்ணி என்னும் அடையாளப்பூ சூடிக்கொள்ளலாம் (81)
  • படை பெறும் தகுதி அரசர், வணிகர் என்னும் இடையிரு வகையினர்க்கு மட்டுமே உண்டு. (76)
  • ஊர்ப்பெயர், இயற்பெயர், தொழில்செய்யும் கருவியின் பெயர், போன்றவற்றைச் சேர்த்து எல்லாருடைய பெயரும் குறிப்பிடப்படும். (74) தலைமைக்குணச் சொல்லைச் சார்த்தியும் அவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டும் ((75)
  • வைசிகன் என்னும் சொல் சங்கநூல்களில் இல்லை. [1]
  • வணிகன் என்னும் சொல்கூடப் பிற்காலத்தில் சங்கநூல்களைத் தொகுத்தவர் சூட்டிய புலவர் பெயர்களில் மட்டும் வருகின்றன.
  • வேளாண்-மாந்தர் என்னும் என்னும் சொல்லாட்சியும் சங்கநூல்களில் இல்லை.
  • வேளாண்-சிறுபதம் [2] வேளாண்-வாயில் [3] போன்ற ஒருசில சொற்களும் வேளாண்மைத் தொழிலைக் குறிப்பன அல்ல.
  • வேளாண்மை [4] என வரும் சொல்கூட உதவி செய்தல் என்னும் பொருளில் மட்டுமே வருகிறது.
  • இந்த நான்கு-சாதிப் பாகுபாட்டைக் காட்டும் குறிப்புகள்கூடச் சங்கநூல்களில் இல்லை.

எனவே இந்த சான்கு-சாதிப் பாகுபாட்டு முறைகளைக் காட்டும் நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் செருகப்பட்டவை.
செருகப்பட்டுள்ள இடமும் மேலும் கீழும் உள்ள நூற்பாக்களைப் பார்க்கும்போது மரபியல் சொற்களுக்குத் தொடர்பில்லாதவை என்பது விளங்கும். [5]

புல், மரம்[தொகு]

  • காழ் என்னும் வைரப்பகுதி புறத்தே இருப்பது புல். அகத்தே இருப்பது மரம் (85)
  • தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை முதலான பெயர்கள் புல் இனப் பெயர்களோடு தொடர்புடையவை. (86)
  • இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, முதலானவை மரப்பெயரொடு வரும். (87) காய், பழம், தோல், செதிள், வீழ் என்னும் என்னும் பெயர்களும் மரத்தோடு தொடர்புடையவை. (88)

மரபைத் தழுவல்[தொகு]

  • உலகமானது நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகியன கலந்துள்ள மயக்கம். அதுபோல இருதிணை ஐம்பால் சொற்கள் கலந்துள்ளன. இவற்றை மரபு திரியாமல் வழக்கில் தழுவிக்கொள்ள வேண்டும். (89)
  • செய்யுளில் மரபுநிலை திரிதல் இல்லை (90)
  • மரபுநிலை திரிந்தால் வெவ்வோறு பொருள் தோன்றும். (91)
  • வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் பேசும் மொழி (92)

நூல் முதலானவை[தொகு]

இவற்றில் உள்ள செய்திகளும் கையாளப்பட்டிருக்கும் நடையும் முந்தைய பகுதி போல் இல்லை. எனவே பிற்காலத்தவரின் சேர்க்கை எனலாம்.

  1. முதல்-நூல், வழிநூல் என நூல்-நெறி இரு வகைப்படும் (93)
  2. செய்வினையை நீக்கி, மெய்யுணர்வு கொண்டு, எண்ணத்தை வடிக்கும் முதல்வன் கண்டறிந்த உண்மைகளை உடையது முதல்-நூல். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்-நூல் ஆகும் (94)
  3. வழிநூல் என்பது முதல்-நூலைப் பின்பற்றிச் செல்வது. (95)
  4. வழிநூல் நான்கு வகை (96) முதல்-நூலைத் தொகுத்துக் கூறும் தொகைநூல், விரித்துக் கூறும் விரிநூல், இருவகையிலும் கூறும் தொகை-விரி நூல், மொழிபெயர்ப்பு நூல் என்பன அவை. (97)
  5. நூல் என்பது ஒத்துப்போகும் சூத்திரங்களைக் கொண்டிருக்கும். காண்டிகை உரையாக விரிக்கக் கூடிய செறிவு பெற்றிருக்கும். பத்து வகையான குற்றமும் இல்லாமல் 32 வகையான உத்திகள் புணர அமைந்திருக்கும் (98)
  6. சூத்திரமானது, முதல்-நூல் சூத்திரத்தை எடுத்துரைத்தும், காண்டிகையாகச் சில கருத்துக்களை விட்டுவிட்டும், சிலவற்றை விலக்கிவிட்டும், நூலுடையோர் காட்டும் வகைப்பாட்டுடன் அமையும் (99) இந்தப் பொருளோடு சில எழுத்துக்களைக் கொண்ட செய்யுளால் அமைதல், உரையில் விரித்துக்கொள்வதற்கான செய்திகளை உள்ளடக்கிக்கொள்ளல், நுட்பமான ஒளி வீசும் விளக்காக ஒளிர்தல், அசைக்க முடியாத சூத்திரத் துணையுடன் வருதல், அளக்க முடியாத அரிய பொருளை உணர்த்துதல் முதலான பல்வகைப் பயன்பாடுகள் தெரியுமாறு அமைந்திருக்கும். (100)
  7. காண்டிகை உரை - சூத்திரம் சொல்லும் பொருளை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக எடுத்துக் காட்டுவது காண்டிகை உரை. (101) சூத்திரம் சொல்லும் பொருளை விட்டு விலகாமல், எடுத்துக்காட்டுகள் அதில் இடம்பெற்றிருக்கும். (102)
  8. உரை (விருத்தியுரை) – சூத்திரத்தின் பொருளை விளங்கிக்கொள்ள விரிவுகள் பலவற்றைச் சேர்த்துத் தருவது உரை எனப்படும். (103) எதிர் வினாக்களுக்கு விடை தரும் வகையில் அதே நூலிலிருந்தும் அந்த நூலுக்கு முந்தைய நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டிக்கொண்டு ஐயம் மருட்கை தீர்த்துக்கொண்டு, செவ்விதின் துடிவோடு அந்த உரை நடக்கும். (104)
  9. உரை-சிதைவு – சொல்லப்பட்ட பண்பு இல்லாத உரை சிதைவு-உரை எனப்படும். (105) உரை சொல்லப்படும் முதல்வன்-நூலில் சிதைவு இல்லை என்பதே உரைநூலின் கோட்பாடு. (106)
  10. முதல்-நூலிலும், வழிநூலிலும் சிதைவு – வல்லோன் புணர்க்காத அரைகுறை நூலில் சிதைவு இருக்கும். (107)
  11. நூல்-சிதைவு – கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில்லாத சொற்களைச் சேர்த்து மயங்க வைத்தல், கேட்போர்க்கு இன்னா பயக்கும் சொற்கள் பெய்தல், வழுக்கிய செய்தி உரைத்தல், இல்லாத பொருளைத் தானே கற்பித்துக்கொண்டு கூறல், சொல்வனவற்றைத் தன் உள்ளத்தில் வாங்கிக்கொள்ளாமல் கூறல் போன்றவை நூலின் சிதைவுகள். (108) எதிர் மறுத்துச் சொன்னாலும் அது சிதைவே. (109)
  12. உத்தி வகை – சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுதல், அதிகாரங்களை முறைப்படுத்துதல், தொகுத்துக் கூறல், வகுத்துக் காட்டல், மொழிந்த பொருளோடு மொழியாத்தனை ஒன்றவைத்தல், வாராததனால் வந்தது முடித்தல், வந்தது கொண்டு வாராத்து உணர்த்தல், முன்னே சொன்னதைத் தொடர்புபடுத்திக் காட்டல், ஒப்பக் கூறல், உறுதிபடக் கூறல், தன் கருத்தைக் கூறல், முறை பிறழாமல் கூறல், பிறன் உடன்பட்டதைத் தான் உடன்பட்டுக் கூறல், முன்னோர் மொழிந்தவற்றைக் காத்தல், எதிர்காலத் தழுவுதலுக்கும் வழி வகுத்தல், பின்னர் சொல்வேன் என்று இடையில் கூறிக்கொள்ளல், முன்னே சொன்னேன் என்று காட்டிக்கொண்டு செல்லல், இன்ன நூல் கூறிற்று எனல், தான் புதுக் குறியீடு தருதல், ஒருபக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்ளுதல், முடிந்த செய்திகளைக் காட்டல், ஆணையிட்டுக் கூறுதல், பல பொருள் இருந்தால் நல்லதை எடுத்துக்கொள்ளுதல், தொகுத்தும் வகுத்தும் காட்டல், மறுதலைக் கருத்துக்களைச் சிதைத்துவிட்டுத் தன் கருத்தை நிலைநாட்டுதல், பிறர் கொள்கைகளுக்கு உடம்படுதல், புதியனவற்றை இடையில் சேர்த்தல், எதிர்ப்பொருளை உணர்த்துதல், சொல்லாதவற்றைச் சொன்னவற்றால் சுட்டுதல், புதுமையைச் சேர்த்து உரைத்தல், பழமையை ஞாபகப்படுத்துதல், உய்த்துணர வைத்தல் புதியன வரின் இனத்தோடு சேர்த்தி உணர்த்துதல் – முதலானவை. (110)

அடிக்குறிப்பு[தொகு]

  1. INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)
  2. முயற்சி இல்லாமல் பெற்ற சிற்றுணவு-நீர் -புறம் 74
  3. கொடை வழங்கும் வாயில் பொருநராற்றுப்படை அடி 75
  4. கலித்தொகை (101-44) (திருக்குறள் 212)
  5. வேற்றுமை தெரிந்தநாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கல்விகற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே என்ற புறப்பாடல் நால்வருண சாதிப்பாகுபாட்டைக் காட்டுகிறது. எனவே தொல்காப்பியத்தில் நால்வருணக்கருத்து இடைச்செருகல் என்பது தவறு - என்னும் கருத்து எண்ணத்தக்கது. இது புறநானூற்றுக்காலக் கருத்தினை அதற்கு முந்தைய காலத் தொல்காப்பிப்பியத்தில் செருகப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் சான்றாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.