காவலூர் ராசதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவலூர் ராசதுரை
பிறப்புமரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை
(1931-10-13)அக்டோபர் 13, 1931
கரம்பொன், ஊர்காவற்துறை, இலங்கை
இறப்புஅக்டோபர் 14, 2014(2014-10-14) (அகவை 83)
சிட்னி, ஆத்திரேலியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

காவலூர் ராசதுரை என அழைக்கப்படும் மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை (அக்டோபர் 13, 1931 - அக்டோபர் 14, 2014)[1] ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் காவலூர் இராசதுரை.

வானொலியில்[தொகு]

'கலைக்கோலம்' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை இலங்கை வானோலியில் மிகச்சிறப்பாக தயாரித்து வழங்கி, கலை, இலக்கியம் சம்பந்தமான தரமான விமர்சனப்போக்கை உருவாக்க காரணமாக அமைந்தவர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களை அரங்கேற்றியவர்.

எழுத்துத்துறை[தொகு]

சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி தமது ஆற்றல்களை விரிவுபடுத்திக் கொண்டார். தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

தேவ கிருபையை முன்னிட்டு வாழும் என்ற சிறுகதை இலங்கையில் தமிழ்க் கல்விப்பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு தர்மயுக் என்ற இதழில் வெளியாகியது.

நாடகத் துறை[தொகு]

இவரது படைப்புகள் நாடகமாக, தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டது. வீடு யாருக்கு? என்ற புதினம் மேடை நாடகமாகியுள்ளது.

திரைப்படத் துறை[தொகு]

பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாது அதன் நிர்வாகத் தயாரிப்பாளருமாவார். யாழ்ப்பாணத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்த இத்திரைப்படம் பல விமரிசகர்களால் விமரிசிக்கப்பட்டது.

யூனிசெப் நிறுவனத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் பின்னாளில் சொந்தமாக வசீகரா என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தையும் கொழும்பில் நிறுவினார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வெளியிடப்பட்ட நூல்கள்[தொகு]

தளத்தில்
காவலூர் ராசதுரை எழுதிய
நூல்கள் உள்ளன.
  • குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைத் தொகுதி, 1961)
  • வீடு யாருக்கு? (புதினம், 1972)
  • ஒரு வகை உறவு (சிறுகதைத் தொகுதி, 1976)
  • விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்
  • A Prophet Unhonoured (சிறுகதைகள், ஆங்கில மொழிபெயர்ப்பு: நவீனன் ராசதுரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்". தமிழ்முரசு. 15 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 அக்டோபர் 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவலூர்_ராசதுரை&oldid=3854212" இலிருந்து மீள்விக்கப்பட்டது