விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 15, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். வளிமப் பரிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதும், வேறு சிலவற்றை செயலிழக்கச் செய்வதும் இதன் பணியாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்-டை-ஆக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்றுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் மார்புப்பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes) இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் மூச்சுக் கிளைக் குழாய்கள் (பிரான்கியல் குழாய்கள்) பல நுண் கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்றறைகள் ஆகியஅல்வியோல் எனப்படும் காற்றுப்பைகளில் (நுண்வளிப்பைகளில்) முடிவுறும். இந்த நுண்வளிப்பைகளில்தான் வளிமப் பரிமாற்றம் நிகழ்கின்றது.


நீரில் பாய்தல் என்னும் விளையாட்டு ஓர் உயரமான மேடை அல்லது தாவுப்பலகையிலிருந்து களிநடம் புரிந்தவாறோ அல்லாதோ நீரில் குதிப்பதாகும். இது ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் ஒரு விளையாட்டாகும். போட்டியாளர்கள், சீருடற் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்ந்த நடனப் பெண்கள் போன்றே உடற்திறன், உடல் வளைதல், நீர் மற்றும் காற்றில் தடையின்றி செல்லும் திறமை கொண்டு விளங்குகிறார்கள். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா இந்த விளையாட்டில் சாதனைகள் புரிந்து வருகின்றன. பெரும்பான்மையான போட்டிகள் மூன்று வகையில் நடத்துகின்றன: 1மீ மற்றும் 3மீ தாவுப்பலகை மற்றும் உயரமேடை. உயரமேடை நிகழ்வுகளில் போட்டியாளர்கள் ஐந்து, ஏழரை, பத்து மீட்டர் உயரத்திலிருந்து குதிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாய்தலின் பல அம்சங்களை, கரணமடித்தல் மற்றும் உடலை சுழற்றுதல் உட்பட, எவ்வாறு நிகழ்த்தினார்கள், பாய்தலுக்கு ஏற்றவாறு எவ்வாறு உடல் ஒத்துழைத்தது, நீரில் நுழையும்போது எந்தளவு தண்ணீர் தெளித்தது என்பன நீதிபதிகளால் எடைப் போடப்படுகின்றன.