ஒக்டோப்பஸ் செலவட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் ஒக்டோப்பஸ் செலவட்டை

ஒக்டோப்பஸ் செலவட்டை (Octopus Card) என்பது ஒரு வித மின்னணுப் பணம் செலுத்தும் செலவட்டையாகும். பயன்படுத்துவதற்கு எளிதானதும், பயனர்களினால் விரும்பி பயன்படுத்துவதுமான இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையை, பொருத்தப்பட்டிருக்கும் தொடுகையுணர் கருவியின் மேல் வைத்தால் அல்லது தொட்டால் அது தானாக குறிப்பிட்டச் செலவட்டையை நுண்ணறிந்து, குறிப்பிட்டத் தொகையை தானாகவே உணர்ந்து அறவிட்டுக்கொள்ளும். இச்செலவட்டை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவையின் கட்டண அறவிடுதலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒக்டோப்பஸ் செலவட்டை முறைமை ஹொங்கொங் போக்குவரத்தின் ஊடாக உலகின் முதன்முதல் தொடுகையுணர் செலுத்தல் மூலம் பொது மக்களின் பயனபாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நுண்ணறி அட்டை முறைமையாகும்.[1]

அத்துடன் இந்த ஒக்டோப்பஸ் செலவட்டை உணவகம், பொருள் கொள்முதல், வாகன நிறுத்தகம், வாகன எரிபொருள் நிரப்பிடம், மற்றும் தானியங்கி விற்பனை இயந்திரம், வீதியோர வாகன நிறுத்தற்கான தானியங்கி வாகன கட்டண அறவீட்டு இயந்திரம் போன்றவற்றிலும், பணம் செலுத்தற்காக இந்த நுண்ணறி அட்டையை ஹொங்கொங் எங்கும் பயன்படுத்தலாம்.[2]

ஒக்டோப்பஸ் செலவட்டையின் பயன்பாடுகள்[தொகு]

பேருந்தில் ஒக்டோப்பஸ் செலவட்டை அழுத்தும் இடம்

ஹொங்கொங் பேருந்து, சிற்றுந்து, தொடருந்து, இசுடார் பெறி வள்ளம், மற்றும் தீவுகளுக்கான அதிவேக சொகுசு வள்ளம் போன்ற போக்குவரத்துக்களிற்கான பயணக் கட்டணத்தை இந்த ஒக்டோப்பஸ் செலவட்டை ஊடாகச் செலுத்தலாம்.

இதைத் தவிர ஹொங்கொங்கில் கெ.எப்.சி, மெக்.டொனால்ட், போன்ற உணவகங்கள்; வெல்கம், 7இலவன், பார்கின் சொப் போன்ற ஹொங்கொங்கில் எல்லாயிடங்களிலும் உள்ள பிரசித்திப்பெற்ற வணிக நிலையங்கள், வாகனத் தரிப்பிட கட்டணச் செலுத்தல் போன்றவற்றிலும் பணம் செலுத்துவதற்கு இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையைப் பயன்படுத்தலாம். வீதி ஓரங்களில் மற்றும் அலுவலகங்கில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கிக் குளிரூட்டிகளினுள் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பாணங்களை பெறுவதற்கும் இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையைப் பயன்படுத்தலாம்.

இவைகளைத் தவிர ஹொங்கொங் பாடசாலை மாணவ நுழைவுகளைப் பதிவுசெய்வதற்கும், சில அலுவலகப் பணிமனைகளின் நுழைவிற்கும், வீட்டுக் குடியிருப்புக் கட்டிடங்களின் நுழைவு அனுமதிக்கும் கூட இந்த அட்டைப் பயன்படுகின்றது. இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையின் உள்ளே இருக்கும் “ச்சிப்” இன் இலக்கங்கள் குறிப்பிட்ட பாடசாலை, அலுவலகங்கள், கட்டிடங்கள், குடியிருப்புக் கட்டிடத் தொகுதிகளில் போன்றவற்றில் பதிவுச்செய்யப்பட்டிருப்பதால், அதன் இலக்கங்களை தானியங்கி இயந்திரங்கள் தானகப் புரிந்துகொண்டு நுழைவு அனுமதி வழங்குகின்றது.

ஒக்டோப்பஸ் வரலாறு[தொகு]

ஒக்டோப்பஸ் செலவட்டையின் பயன்பாட்டிற்கு முன்பு, எம்.டி.ஆர் தொடருந்து நிறுவனத்தினரால் 1979 ஆம் ஆண்டு, எம்.டி.ஆர் தொடருந்து கட்டண அறவீடுதலுக்காக ஒரு வகை பிளாஸ்டிக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹொங்கொங் தொடருந்து சேவைகளில் ஒன்றாக இன்னொரு சேவையான கே.சி.ஆர் தொடருந்து நிறுவத்தினரும் அதே வகையிலான ஒரு அட்டையை 1984 ஆம் ஆண்டு பயன்பாட்டில் விட்டது. அத்துடன் கே.சி,ஆர் நிறுவனத்தினருக்குச் சொந்தமான, கே.எம்.பி பேருந்து சேவையிலும் (Kowloon Motor Bus -KMB) இந்த அட்டை பாவனைக்கு உட்படுத்தப்பட்டது.

மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், வாகனத்தரிப்பிடக் கட்டணச் செலுத்தல் உற்பட வேறு சில கட்டணச் செலுத்தல்களுக்கும் பரவலாகப் பொது மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.

பயன்படுத்தும் முறை[தொகு]

ஒக்டோப்பஸ் செலவட்டை வாசிப்பான்

ஒக்டோப்பஸ் செலவட்டை மாதிரி படம் பொருந்திய தானியங்கி இயந்திரத்தின் மேலே ஒக்டோப்பஸ் செலவட்டையை வைப்பதன் மூலம், செலுத்தத் தொகையை தானியங்கியாக அறவிட்டுக்கொள்ளும். தானியங்கியாக அறவிடும் போது “பீப்” எனும் சத்தம் எழுவதை அவதானிக்கலாம். அதேவேளை பச்சை நிறத்தில் ஒரு மின்விளக்கு ஒளிரும். சில வேளை எமது ஒக்டோப்பஸ் செலவட்டையில் காசு இல்லாவிட்டால் சிகப்பு மின்விளக்கு ஒளிர்வதுடன், முகாமையாளரிடம் செலவட்டையை பரிசோதிக்கும் படியான தானியங்கி அறிவித்தலையும் தரும். சில வேளை நீங்கள் செலுத்த வேண்டிய தொகை HK$20.00 டொலர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உங்கள் செலவட்டையில் HK$1.00 டொலர் இருந்தாலும் பயனிக்கலாம். அவ்வாறான சமயத்தில் உங்கள் ஒக்டோப்பஸ் செலவட்டையில் காசு குறைவாக இருப்பதை அறிவிக்கும் முகமாக மின்விளக்கு மஞ்சல் நிறத்தில் ஒளிரும். நீங்கள் மீண்டும் ஒக்டோப்பஸ் செலவட்டைக்கு காசு இட்டுக்கொள்ளும் போது நீங்கள் ஏற்கனவே கடனாகப் பெற்றிருந்த HK$19.00 டொலரை தானாக அறவிட்டுக்கொண்டு மிகுதி பாக்கியையே காட்டும்.

ஒக்டோப்பஸ் செலவட்டையை தானியங்கி இயந்திரத்தின் மேலே வைப்பதற்கு, செலவட்டையை வெளியே எடுத்து இயந்திரத்தின் மேல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது பணப்பையை (Purse) அப்படியே இயந்திரத்தின் மேல் வைத்தாலும் அது அதன் கட்டணத்தை அறவிட்டுக்கொள்ளும். பெண்கள் தமது தோள் பையை அப்படியே இயந்திரத்தின் மேலே அலுத்திவிட்டுச் செல்வர். அது உரியக் கட்டணத்தை அறவிட்டுக்கொள்ளும்.

ஒக்டோப்பஸ் செலவட்டை பெறுமிடம்[தொகு]

தானியங்கி பணம் வைப்பீடு இயந்திரம்

புதிதாக ஒக்டோப்பஸ் செலவட்டை பெறுமிடம் அல்லது வழங்குமிடம் ஹொங்கொங் பொது போக்குவரத்து கூட்டுத்தாபனம் எம்.டி.ஆர் மற்றும் கே.சி.ஆர் தொடரூந்து நிலையங்களின் வாடிக்கையாளர் பணிமனைகளில் மட்டுமே ஆகும்.

நாம் முதல் முறையாக இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையை வாங்குவதானால், மீளப் பெறக்கூடிய வைப்பு பணம் HK$50.00 டொலரும் எமது பாவணைக்கு தேவையான அளவு பணத்தையும் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆகக் குறைந்த தொகையான வைப்புப் பணம் HK$50.00 உடன், செலவுக்கான பணமாக HK$50.00 டொலரும், மொத்தம் HK$100.00 டொலரை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

பயன்படுத்திய ஒக்டோப்பஸ் செலவட்டை மீண்டும் தேவையில்லை எனக் கருதினால், ஒக்டோப்பஸ் செலவட்டையை தொடரூந்து வாடிக்கையாளர் பணிமனையில் மீளக் கொடுத்து நமது வைப்பீட்டுப் பணமான HK$50.00 டொலரை மீளப் பெற்றுக்கொள்ளலாம். அநேகமாக ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகள் அவ்வாறே செய்கின்றனர்.

ஒக்டோப்பஸ் செலவட்டைக்கு பணம் இட்டுக்கொள்ளல்[தொகு]

மெக்.டொனால்ட் உணவகத்தின்

ஏற்கனவே பயன்படுத்தும் ஒக்டோப்பஸ் செலவட்டை ஒன்றின் நிலுவையில் இருக்கும் பணம் முடிந்துவிட்டால் அல்லது மேலதிக காசு இட்டுக்கொள்ள தேவையானால் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் இட்டுக்கொள்ளலாம்.

  • எம்.டி.ஆர் மற்றும் கே.சி.ஆர் தொடரூந்து நிலைய வாடிக்கையாளர் பணிமனைகளில்.
  • எம்.டி.ஆர் மற்றும் கே.சி.ஆர் தொடரூந்து நிலைய தானியங்கி இயந்திரங்களில்.
  • பேருந்து நிலைய வாடிக்கையாளர் பணிமனைகளில்
  • வெல்கம், பார்க் இன் சொப், 7இலவன் போன்ற அனுமதிப் பெற்ற வர்த்தகக் கடைகளில். (இக்கடைகள் ஹொங்கொங்கில் எல்லா இடங்களிலும் உண்டு.)

ஆகக் குறைந்தத் தொகையாக HK$50.00 டொலர் பற்றுவைத்துக் கொள்ளலாம். ஆகக்கூடியத் தொகை HK$1000.00 டொலர் வரை பற்று வைத்துக்கொள்ள முடியும்.

ஒக்டோப்பஸ் வகைகள்[தொகு]

ஒக்டோப்பஸ் செலவட்டையின் வகைகள்
வகைகள் நிறங்கள் கொள்முதலும் பாவனையும்
குழந்தைகளுக்கானவை 3 முதல் 11 வயதினருக்காவர்களுக்கானவை. இவர்களுக்கு சிறப்பு கட்டணக் கழிவுகள் உண்டு.
மாணவர்களுக்கானவை 11 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கும் ஒரு சிறியக் கட்டணக் கழிவு உண்டு.
வயது வந்தவர்களுக்கானவை இது சாதாரணமாக வயது வந்தோர் அனைவரும் பயன்படுத்துவதாகும்.
வயோதிபர்களுக்கானவை வயோதிபருக்கான செலவட்டைகள் ஒரு சிறிய கட்டணத்தை மட்டுமே அறவிடுகின்றனர். அதிலும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு ஹொங்கொங் தீவுப் பகுதியில் சேவையில் ஈடுப்பட்டிருக்கும் சிட்டி பேருந்து, கே.எம்.பி போன்ற பேருந்துகளில் கட்டணம் இலவசம்.
தனிப்பட்டவை இது வானவில் நிறத்திலானவை இதுவே அநேகமாக அதிகமானோரால் பயன்படுத்தப்படுவதாகும். இதனை “ஒக்டோப்பஸ் செலவட்டை நிறுவனம்” ஊடான இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்வதன் மூலம் வர்த்தக நிறுவனங்களில் கட்டணக் கழிவு மற்றும் பரிசுகள் பெறலாம்.[3]

மேற் குறிப்பிட்ட கட்டணக் கழிவுகள் ஹொங்கொங் பொது போக்குவரத்துக்களில் மட்டுமேயாகும். பொது வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் போன்றவற்றில் அல்ல.

ஒக்டோப்பஸ் செலவட்டை பயனபாட்டின் வசதிகள்[தொகு]

இங்குள்ள பேருந்து சிற்றூந்துகளில் நடத்துனர் என்று எவரும் இல்லை. ஓட்டுனர்களிடம் சில்லைரை கேட்க முடியாது. ஒக்டோப்பஸ் செலவட்டை இல்லாதப் பொழுது காசு போடுவதற்கான பெட்டியில் பயணக் கட்டணத்தை பணமாகப் போடலாம். ஆனால் குறிப்பிட்டக் கட்டணம் சில்லரையாக இல்லாவிட்டால் மேலதிகமான காசைப் போட வேண்டி ஏற்படும். அதாவது பேரூந்தின் பயணக் கட்டணம் HK$3.70 சதம் என்று வைத்துக்கொள்வோம், அப்போது எம்மிடம் சில்லைரை இல்லாவிட்டால் HK$5.00 டொலர் நாணயக் குத்தியை அப்படியே போடவேண்டி ஏற்படலாம். சக பயணிகளிடம் மாற்றி கேட்டுப் பெறுவது 99% சாத்தியமானதல்ல. காரணம் எல்லோரும் ஒக்டோப்பஸ் செலவட்டைப் பாவிப்பவர்கள் என்பதால் அவர்களிடமும் சில்லரை இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே ஒக்டோப்பஸ் செலவட்டைப் பயன்படுத்துவதால் இதுப்போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

சாதாரணமாக அறவிடப்படும் பேருந்து கட்டணங்களை விட, ஒக்டோப்பஸ் செலவட்டைகள் ஊடாக பணம் செலுத்துவதால் ஒரு சிறிய கட்டணக் கழிவும் உண்டு.

வர்த்தக நிலையங்களில் உள்ள வியாபாரப் போட்டி காரணமாக அப்பப்போது அவர்களும் சில கட்டணக் கழிவுகளை கொடுப்பர். ஹொங்கொங் வெல்கம், பார்க் இன் சொப், 7இலவன் போன்ற வர்த்தகக் கடைகள் தமது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் அடிக்கடி பரிசளிப்புகளையும் சலுகைகளையும் இந்த ஒக்டோப்பஸ் செலவட்டைப் பாவிப்போருக்கு வழங்குகின்றனர். இவற்றைப் பெறுவதற்கு ஒக்டோப்பஸ் செலவட்டை நிறுவனத்தினரின் இணையத்தளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி பதிவு செய்யவேண்டும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hong Kong Smart Card System". The World Bank Group. Archived from the original on 2007-03-04. பார்க்கப்பட்ட நாள் 2007-02-13.
  2. "Octopus Products". Octopus Cards Limited. Archived from the original on 2007-02-24. பார்க்கப்பட்ட நாள் 2007-02-21.
  3. ஒக்டோப்பஸ் செலவட்டைப் பதிவு[தொடர்பிழந்த இணைப்பு]
  4. ஒக்டோப்பஸ் செலவட்டைப் பதிவு செய்வதற்கான இணையத்தளம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்டோப்பஸ்_செலவட்டை&oldid=3546849" இலிருந்து மீள்விக்கப்பட்டது