மீன் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன நாட்டில் உள்ள இயற்கையான மீன் பண்ணை
மெக்சிகோவில் உள்ள பழங்குடிகளின் மீன் பண்ணை

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம்.

மீன் பண்ணைக்குரியக் காரணிகள்[தொகு]

  1. குளம் அமைக்கத் தகுதியான இடம். பாறைகள் இல்லாமல், அதிக மேடு பள்ளங்கள், தாவரங்களின்றி, சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.00 வரை இருக்கும் நிலங்கள், கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை ஆகும்.
  2. குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களிமண், வண்டல்மண், மணல் ஆகியன கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதவீதம் களித்தன்மையுடைய நிலம், மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்
  3. மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது.
  4. நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும், சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும்.

குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின், சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து, அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம்.

மீன்குளங்களின் அமைப்பு[தொகு]

மீன்குள வடிவம்:ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது, அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு, செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

மீன்குள உருவாக்கம்:பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள், தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில், பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலிகமாக மாற்ற நினைத்தால், கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம், விவசாய நிலமாக மாற்றிவிடலாம்.

மீன்குள நீர்வரத்து:குளங்களின் கரைகளை அமைக்கும் போது, நீர் உள்(வரத்து) மடை மற்றும் நீர் (வெளியேற்ற) வடிமடை போன்ற அமைப்புக்களை அமைப்பது நல்லது. பெரும்பாலும், ஆழ்துளைக் கிணறு வகை கொண்ட பண்ணை களில் நிலத்தடி நீர், குழாய் மூலமே பாய்ச்சப்படுகிறது. அதனால் அத்தகைய சூழல்களில் உள்வரத்துக் குழாய்களுக்கு தடுப்பு வலைகள் தேவையில்லை. ஆயினும் குளம், ஆறுகள், கால்வாய், போன்ற வெளிநீர் நிலைகளிலிருந்து, நீர் எடுத்து மீன்வளர்ப்புக் குளங்களுக்குப் பாய்ச்சும் போது, உள்வரத்துக் குழாய்களிலும் கண்டிப்பாக தடுப்பு வலைகள் வைக்க வேண்டும்.

தடுப்பு வலை::இது தவிர அனைத்து குளங்களிலும், வடிமடை குழாய்களுக்கு, தடுப்பு வலைகள் அவசியமான ஒன்றாகும். குளம் அமைக்கும் போது, குளத்தின் அடித்தளத்தை, மேடு பள்ளமின்றி வடிமடைப்பகுதியை நோக்கி, சிறிதளவு சரிவுடன் (1:300 என்ற விகிதாச் சாரத்தில்) அமைத்தல் வேண்டும். இதனால் தேவையான போது, குளத்துநீரை வடிப்பது எளிதாகும். அதுமட்டுமின்றி குளங்களின் அடிமட்டத்தில் சேரும் கழிவுகளும், குளம் முழுவதும் பரவாமல் வடிமடை பகுதியிலேயே அதிகமாக சேரும்.

மீன்குளக் கரை:குளத்தின் கரை அமைக்கும் போது, கரையின் உயரத்தை, குளத்தில் தேக்க இருக்கும் அதிகபட்ச நீர் மட்டத்தை விட, குறைந்த பட்சம் 1½ அடி உயரம் அதிகமாக இருக்குமாறு அமைத்திட வேண்டும். குளம் வெட்டும் போது, கரையின் பக்கச்சரிவுகளை மண்ணின் தன்மைக்கேற்ப கரையின் உயரம் மற்றும் சாய்தளத்தின் அடிப்பகுதியின் அகலம் 1: 1½ அல்லது 1:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும்.

தேவையான அளவுக்குக் களித்தன்மை கொண்ட நிலங்களில் 1: 1½ என்ற விகிதம் போதுமானது. கரையின் வெளிப் பக்கச் சரிவினை, மண்ணின் தன்மைக்கேற்ப 1:1 அல்லது 1: 1½ என்ற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் ஆழம் 6 முதல் 8 அடி அளவிற்கு இருப்பது நல்லது.

கரையின் மேற்பகுதியின் அகலம் 4 முதல் 6 அடி என்ற அளவில் இருப்பது நல்லது. பண்ணையின் சுற்றுப்புறக் கரை, வண்டிகள் செல்வதற்கு வசதியாக, கூடுதல் அகலத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். குளங்கள் அமைப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவதை விட, இயந்திரங்களை பயன்படுத்தும்போது செலவுகள் குறையும்.

பெரும்பண்ணை: சற்று அதிக பரப்பளவில் மீன் பண்ணைகளை அமைக்கும் போது, மீன் வளர்ப்புக்குளம்(இருப்புக்குளம்) மட்டுமின்றி, நுண்மீன்குஞ்சு வளர்ப்புக் குளமும்,இளம்மீன் குஞ்சுகள் வளர்ப்புக் குளமும் பண்ணைகளில் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்களை 0.1 ஏக்கர் பரப்பளவு முதல் 0.25 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் 5 முதல் 6 அடி ஆழம் கொண்டவையாகவும் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்கள், நமது பண்ணைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை, குறைந்த செலவில் தட்டுப்பாடின்றி நமது பண்ணையிலேயே வளர்க்கவும். இவை, விற்பனை எடையை அடையாத மீன்களைப் பராமரிக்கவும் உதவும்.

மீன்வளர்ப்புக் குளம்[தொகு]

மீன்களைக் குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன், குளங்களை முறைப்படித் தயாரிப்பது, மீன் வளர்ப்பில் இன்றியமையாத ஒரு அடிப்படைப் பணியாகும். மீன் வளர்ப்புக் குளங்களில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்குப் பண்ணை மேலாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்குக் குளங்களை முறையாகத் தயார் செய்தலும் முக்கியமாகும்.

மீன் வளர்ப்புக் குளங்களைத் தயாரித்தல்[தொகு]

  1. குளங்களைக் காயவிடுதல்
  2. வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்
  3. உழவு செய்தல்
  4. சுண்ணாம்பு இடுதல்
  5. உரமிடுதல் - அ.இயற்கை உரமிடல், ஆ.செயற்கை உரமிடல்
  6. மீன்குஞ்சுகளை இருப்புச் செய்தல்.

1.குளங்களைக் காயவிடுதல்[தொகு]

வெடிப்பு நிலம்

நீர்வடித்தலின் அவசியம்:குளங்களில் மீன்களை அறுவடை செய்த பின்பு நீரை முழுமையாக வடித்துவிட்டு, குளங்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் உண்டாகும் அளவிற்கு, குளங்களை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும். இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகளும், சேற்றிலுள்ள நச்சுயிரினங்களும் அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி, காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

2.வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்[தொகு]

குளங்களின் அடிப்பகுதியில், அதிக அளவிற்கு உரச்சத்துக்கள் இருப்பது, குளங்களில் அதிக அளவில் பாசிபடர்வுகள் தோன்றி, நீர் மாசுபடுவதற்கும் அடிப்பகுதியில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு, வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

3.உழவு செய்தல்[தொகு]

குளத்தயாரிப்பில் அடுத்த கட்டமாக, குளங்களை நன்றாக உழுதல் வேண்டும். சுமார் 10 முதல் 15 செ.மீ ஆழம் வரை, உழுவதால் அடிமட்ட மண் மேலே வருகிறது. இதனால் குளத்தரையின் கீழ் சேர்ந்துள்ள கழிவுகள், வெளிப்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள நச்சுயிரிகள் அழிக்கப்படுவதோடு, நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. எனவே, குளங்களை வருடம் ஒரு முறை நன்கு காயவிட்டு உழுவு செய்வதால், குளத்திலுள்ள மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுத் தூய்மையடைகிறது.

4.சுண்ணாம்பு இடுதல்[தொகு]

நன்மைகள்: குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவது, பல்வேறு நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

  • நீருக்கு போதுமான கார, கடினத்தன்மைகளை அளித்தல்
  • நச்சுயிரிகளை அழித்தல்
  • குளத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் நச்சுத்தன்மைகளை குறைத்தல்
  • நீருக்கு ஓரளவு நிலையான கார அமிலத்தன்மையை அளித்தல்
  • நீரில் கலங்கல் தன்மையையும், பாசிப் படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்து, அதிக அளவில் உயிர்வளி உற்பத்தி ஏற்படுதல்.

இடும் அளவு: மீன் வளர்ப்புக்குளங்களுக்கு இட வேண்டிய சுண்ணாம்பின் அளவு, மண்ணின் கார அமிலநிலை, குளங்களில் சேரும் கழிவுகளின் அளவு போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகிறது. மிதமான கார, அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு, ஏக்கருக்கு 80 முதல் 120 கிலோகிராம் சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது. உழவு செய்தபின் குளங்களில், பரவலாக சுண்ணாம்பை தூவி விட வேண்டும். குளத்தின் பள்ளமான பகுதிகளிலும், வண்டல் கழிவுகள் அதிகம் சேரும் இடங்களிலும் அதிக அளவில் சுண்ணாம்பு இட வேண்டும்.

5.உரமிடுதல்[தொகு]

  • அ)இயற்கை உரமிடல்,
  • ஆ)செயற்கை உரமிடல்

அ)இயற்கை உரமிடல்[தொகு]

சாணம்
கோழிஎரு

குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும். சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு (Deep Litter) நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.

மீன் கொல்லி:இழுவலையால் அழிக்க இயலவில்லையெனில், மீன்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு, பிளீச்சிங் பவுடர், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, அவற்றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும். பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே, குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே, மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.

ஆ)செயற்கை உரமிடல்[தொகு]

பரிந்துரை:இயற்கை உரமிட்ட பின்பு, சுமார் பத்து நாட்கள் சென்றதும் நீர் மட்டத்தை, சுமார் 1மீட்டர் அளவிற்கு உயர்த்த வேண்டும். பின்னர் அடியுரமாக, பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களைக் கரைக்க வேண்டும். ஒரு எக்டர் குளத்திற்கு வருடத்திற்கு, 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் செயற்கை உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.நிலம் களர் மண்ணாக இருப்பின், யூரியாவிற்கு பதிலாக அதே அளவு தழைச்சத்து அளிக்கக்கூடிய அளவிற்கு அமோனியம் சல்பேட் உரம் இடுவது நல்லது.

இருப்புக் குளம்:பரிந்துரை செய்யப்பட்ட உரத்தில், ஆறில் ஒரு பகுதியை நீரில் கரைத்து குளம் முழுவதும் பரவலாக நன்கு தெளிக்க வேண்டும். மீதத்தை மாதாமாதம் (அல்லது) 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துக் குளத்திற்கு இட வேண்டும். இவ்வாறு முறையாக நன்கு தயார் செய்யப்பட்ட குளத்தில், செயற்கை உரமிட்ட சுமார் 7 நாட்களில் தாவர நுண்ணுயிர் மிதவைகளும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகளும் தோன்றி நீரின் நிறம், பழுப்பு கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். இந்நிலை மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.

மீன்களை அழித்தல்:களை மீன்கள் ,பகை மீன்கள் இருக்கின்ற குளங்களில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்பு , பலமுறை இழுவலை கொண்டு இழுத்து இத்தகைய தேவையற்ற மீன்களை அழித்துவிட வேண்டும். இல்லையெனில், களை மீன்களால் வளர்ப்பு மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பகை மீன்கள் ஏற்படுத்தும் இழப்பால் வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

நன்னீர்மீன்களை இருப்புச் செய்தல்[தொகு]

நன்னீர்மீன்குஞ்சுகள்

வளர்ப்புக் காலம்:குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்னர், நாம் திட்டமிட்டு இருக்கக்கூடிய வளர்ப்பு காலம், குளங்களுக்கு நீர் கிடைக்கும் காலத்தின் அளவு தீவனத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் அறுவடை எடை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ப்புக் காலம் சுமார் 10 மாதங்கள் என்று வைத்துக்கொண்டால், நாம் இடும் உரம் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம்.

மீன்குஞ்சுகள்:மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளம் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது. தவிர சுமார் 6 மாத காலம் முதல் ஓராண்டு வயதான வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்ட குஞ்சுகளை எக்டருக்கு 5000 – 6000 குஞ்சுகள் இருப்புச் செய்யலாம். வளர்ப்புக் குளத்தில் அதிக காலம் பராமரிக்கப்பட்ட மீன்கள், இருப்புக் குளங்களில் இருப்புச் செய்யப்படும்போதே, சுமார் 15 முதல் 20 செ.மீ நீளத்தையும் சுமார் 50 முதல் 100 கிராம் எடையையும் அடைந்துவிடும். இத்தகைய வளர்ந்த குஞ்சுகள், சுமார் 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக ½ கிலோ எடைக்கும் அதிகமாக வளரும்.

எண்ணிக்கையடர்த்தி:எனவே நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளைக் குளங்களில் இருப்புச் செய்யும்போது அவற்றை சுமார் 6 மாதங்களிலேயே அறுவடை செய்துவிடலாம். எனவே, மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் கிடைக்கும் கால அளவு, விற்பனைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, வளர்ப்புக் காலத்தை நிர்ணயிக்க் வேண்டும். மீன்களின் வளர்ப்புக்காலம், நாம் குளங்களுக்கு இடும் உரம், மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு குஞ்சுகளின் இருப்படர்த்தியை நிர்ணயிக்க வேண்டும்.

மீன் இனங்களின் விகிதம்:குளங்களில் பல இன மீன்களை இருப்புச் செய்யும் போது, இன விகிதாச்சாரம் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக, முன்பு குறிப்பிடப்பட்டுள்ள பல இனக் கெண்டை மீன்களை இருப்புச் செய்யும்போது, தாவரக் கழிவுகளையும், மக்கிய கழிவுகளையும் உண்ணும் மீன் இனங்களான வெள்ளிக்கெண்டை, ரோகு, மிர்கால், சாதாக்கெண்டை போன்ற இனங்களை அதிக அளவில் இருப்புச் செய்தல் வேண்டும். புல், நீர்த் தாவரங்கள், காய்கறிக் கழிவு கிடைக்கும் இடங்களிலுள்ள குளங்களில் புற்கெண்டை இனங்களை, சுமார் 5 விழுக்காடு இருப்புச் செய்யலாம்.சில மாதிரி இருப்பு விகிதாச்சாரங்களின் அட்டவணை வருமாறு;-

வளர்ச்சிக் காரணிகள்:மேற்கண்ட அட்டவணை, அனைத்து நீர் நிலைகளுக்கும் ஏற்றவை எனக் கூற இயலாது. ஏனெனில் மீன்களின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில்,

  • குளத்தில் இயற்கையிலேயே உற்பத்தியாகும் பல்வேறு நுண்ணுயிர்த் தாவர இனங்களும்,
  • பாசி இனங்களும்,
  • விலங்கின நுண்ணுயிர் மிதவை இனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • இத்தகைய இயற்கை உயிரினங்களின் உற்பத்தி,
  • மண்ணிலுள்ள உரச்சத்து,
  • அதன் கார அமிலத்தன்மை,
  • தண்ணீரின் தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது.
  • எனவே, நமது குளத்தில் நமது சொந்த அனுபவங்களை இணைத்து, கூட்டுமீன் வளர்ப்பில் அதிக உற்பத்தி பெற, வெள்ளிக்கெண்டை இனத்தை இருப்புச் செய்வது இன்றியமையாதது. ஆனால் நடைமுறையி்ல் வெள்ளிக்கெண்டை இனத்திற்கு குறைந்த விற்பனை விலையே கிடைப்பதால், அம்மீன் இனம் இருப்புச் செய்யப்படுவுதில்லை.

மீன்குஞ்சுகளின் நிலை:மீன் குஞ்சுகளை வாங்கும்போது, நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம், வெளிப்புற காயங்கள், செதில்கள் இழந்து இருத்தல், சுறுசுறுப்பின்மை, மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும்.மீன் குஞ்சுகளை, மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை, முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது.

வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கும் குஞ்சுகளை, உடனே குளங்களில் விடாமல், அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும். பின்னர் குஞ்சுகளை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ, 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ, 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து, பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_பண்ணை&oldid=3647705" இலிருந்து மீள்விக்கப்பட்டது