குழு உரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழு உரிமை என்பது தனித்தனியாக அன்றி ஒரு குழுவினர் ஒருங்கே கொண்டிருக்கும் உரிமை அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்குள் மட்டும் ஒரு தனி ஆள் கொண்டிருக்கும் உரிமை ஆகும். இது தனிமனித உரிமை என்பதற்கு மாறானது. குழு உரிமைகள் என்பன, தாயக மக்கள் உரிமைகள் குறித்த சாற்றுரையில் நிலைநாட்டப்பட்டிருப்பதுபோல், தாயக மக்கள் உரிமைகள் குறித்த சூழலில், மக்களுடைய உரிமைகளையும் குறிக்கும். குழு உரிமைகள் நேரடியாக மனித உரிமைகளுக்க்குச் சமமானது அல்ல. ஏனெனில் குழு உரிமைகள் வேவ்வேறு குழுக்களுக்கு வேறுவேறு விதமாக அமைகின்றன. இவை ஒரு மனிதன் என்ற அளவில் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவை அல்ல. வரலாற்றில் குழு உரிமைகள் சில சமயங்களில் தனிமனித உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கும், வேறு வேளைகளில் தனிமனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இக் கருத்துரு சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.

மேற்குலகம்[தொகு]

மேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சுதந்திரத்துடன் தொடர்புள்ளதாகப் பார்க்கப்படும் அதே வேளை, குழு உரிமை என்பது, அளவுக்கு மீறிய அரச கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது ஏனெனில், மேற்கு நாடுகளில் தனிமனித உரிமைகள் நிலைநாட்டப்படுவது, சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அரசிடம் இருந்து மக்களைப் பாதுகாத்தல் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "மக்னா கார்ட்டா" எனப்படும் பெரும் சுதந்திரப் பட்டயத்தில், தனது விருப்பங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும் என்றும், குடிமக்களின் குறிப்பிட்ட சில உரிமைகள் அரசினால் வெளிப்படையாகப் பாத்துகாக்கப்படும் என்றும், ஆங்கிலேய அரசர் ஒத்துக்கொண்டார். ஐக்கிய அமெரிக்காவில், உள்நாட்டுப் போருக்குப் பின்னர் 1868 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 14 ஆவது அரசமைப்புச் சட்டத்திலேயே மனிதன் என்ற அளவில் தனி மனிதரின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. 14 ஆவது திருத்தம், முன்னாள் அடிமைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

குடியேற்றவாதம்[தொகு]

குழு உரிமைகள், குடியேற்றவாதம், சட்டமாக்கப்பட்ட இனவாதம், வெள்ளையர் தேசியவாதம் போன்றவற்றின் பின்னணியில், எதிர்மறையான பண்புகளையும் கொண்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, இனவொதுக்கல் ஆட்சிக்காலத்தின்போது, உள்ளூர் வாசிகளையும், வெளியிலிருந்து வருவோரையும், இனக்குழுக்களாக வகைப்படுத்தி, அதன் அடிப்படையிலேயே உரிமைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் முதலாம், இரண்டாம் தரக் குடிமக்கள் என்னும் பாகுபாடு ஏற்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழு_உரிமை&oldid=2718639" இலிருந்து மீள்விக்கப்பட்டது