நைசின் விசுவாச அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசேயா-கான்ஸ்டான்டிநோபுள் நம்பிக்கை அறிக்கையை (கிபி 381) மன்னர் கான்ஸ்டன்டைன் (நடு) மற்றும் பொதுச்சங்கத் தந்தையர்.

நைசின் விசுவாச அறிக்கை (Latin: Symbolum Nicenum), அல்லது நிசேயா நம்பிக்கை அறிக்கை என்பது பண்டைக்காலத்திலிருந்தே கிறித்தவ மறையின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத் தொகுப்பு ஆகும். கி.பி. 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தொகுப்பை வடிவமைத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டதால் இதற்கு நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் பெயர் ஏற்படலாயிற்று[1].

நிசேயா நகர்[தொகு]

நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் கிறித்தவக் கொள்கைத் தொகுப்பை வடிவமைத்த பொதுச்சங்கம் கூடிய நகரம் இன்றைய துருக்கி நாட்டில் உள்ள "இஸ்னிக்" (İznik) என்னும் இடமாகும். இது அந்நாட்டின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. பண்டைக்காலத்தில் நிசேயா நகரம் கிரேக்க கலாச்சாரத்துக்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருந்தது. கிரேக்க மொழியில் அந்நகரம் "நிக்காயா" (Νίκαια) என்று அழைக்கப்பட்டது. அதுவே இலத்தீன் வடிவத்தில் "நிசேயா" (Nicaea) என்றாயிற்று.

நிசேயா நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (Oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், அசீரிய சபை, லூதரன், மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ திருச்சபைகளில் திருப்பலியின் போது இந்த நம்பிக்கைத் தொகுப்பு அறிக்கையிடப்படுகிறது. இது விசுவாசத்தின் அடையாளம்,விசுவாசத்தின் மறைபொருள் அல்லது விசுவாச அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

கிறித்தவ சமயத்தில் "நம்பிக்கை அறிக்கை" அல்லது "விசுவாச அறிக்கை" (இலத்தீன்: Credo; ஆங்கிலம்: Creed) எனப்படுவது அச்சமயம் உண்மை எனக் கருதுகின்ற கொள்கைகளை நிர்ணயிக்கும் அளவீடு (yardstick) ஆகும். வரலாற்றில் கிறித்தவ சமயக் கொள்கைகளை யாராவது மறுத்தால் அவ்வமயம் உண்மைக் கொள்கையை எடுத்துக்கூறும் விதத்தில் "நம்பிக்கை அறிக்கைகள்" வெளியிடப்பட்டன.

இத்தகைய நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல் "சிம்பொலோன்" (σύμβολον = symbolon; இலத்தீன்: symbolum; ஆங்கிலம்: symbol) என்பதாகும். இச்சொல்லின் மூலப்பொருள் "உடைந்த பொருளின் அரைப்பகுதி" என்பது. அப்பகுதியை எஞ்சிய பகுதியின் அருகே வைத்துப் பார்க்கும்போது உடைந்த பொருளின் "தான்மை" (identity) தெளிவாக வெளிப்படும். இந்த மூலப்பொருளின் அடிப்படையில் "symbolon" என்னும் கிரேக்கச் சொல் கிறித்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை அடையாளம் காட்டும் அளவுகோல் என்னும் பொருள் பெறலாயிற்று. தமிழில் "விசுவாசப் பிரமாணம்" என்றும் "விசுவாச அறிக்கை", "நம்பிக்கை அறிக்கை" என்றும் இது வழங்கப்படுகிறது.

இத்தகைய நம்பிக்கை அறிக்கைகளுள் மிகப் பழமையான ஒன்று நிசேயா நம்பிக்கை அறிக்கை ஆகும்.

நிசேயா நம்பிக்கை அறிக்கை: கி.பி.325[தொகு]

காண்ஸ்டண்டைன் மன்னர் நிசேயா நகரில் கி.பி. 325இல் கூட்டிய பொதுச்சங்கம் (முதலாம் நிசேயா பொதுச்சங்கம்) கிறித்தவ சமயத்தின் கொள்கைத் தொகுப்பைச் சுருக்கமாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தில் கிறித்தவ திருச்சபையின் எல்லா ஆயர்களும் (மரபுப்படி 318 ஆயர்கள்) கலந்துகொண்டார்கள்.

ஆரியுஸ் என்னும் கிறித்தவப் போதகர் "இயேசு கிறித்து கடவுள் தன்மை கொண்டிருந்தாலும் கடவுளால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்கப்பட்டவரே" என்று கூறியதால் திருச்சபையில் குழப்பம் ஏற்பட்டது. ஆரியுசின் கொள்கை தவறு என்று கண்டனம் செய்யப்பட்டது[2]. அக்கொள்கையை மறுத்து, "இயேசு கிறித்து உண்மையில் கடவுள் தன்மை கொண்டவர்" என்றும் "படைப்புக்கு முன்னரே எக்காலத்திலும் கடவுளோடு கடவுளாக இருக்கின்றார்" என்றும் நிசேயா நம்பிக்கை அறிக்கை வரையறுத்தது.

கி.பி. 381இல் விரிவாக்கப்பட்ட நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை[தொகு]

நிசேயா பொதுச்சங்கத்திற்குப் பின் கி.பி. 381இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கூடிய பொதுச்சங்கம் நீசேயா நம்பிக்கை அறிக்கையைச் சற்றே விரிவாக்கியது[3]. இவ்வாறு விரிவாக்கப்பட்ட அறிக்கை கீழை மரபுவழி திருச்சபையால் ஏற்கப்பட்ட பாடம் ஆயிற்று. "நம்புகிறோம்" (We believe)என்றிருந்த பன்மை வடிவம் மட்டும் மாற்றப்பட்டு "நம்புகிறேன்" (I believe) என்னும் ஒருமை வடிவம் பெற்றது.

எபேசு நகரில் கி.பி. 431இல் கூடிய பொதுச்சங்கத்தில்[4] 381 ஆண்டின் நம்பிக்கை அறிக்கையானது மாற்றமின்றி ஏற்கப்பட்டது. மேலும் நம்பிக்கை அறிக்கையில் இனி மாற்றம் செய்யலாகாது எனவும் முடிவாயிற்று. ஆனால் இத்தகைய முடிவு அறுதியானதன்று என சிலர் கருதுகின்றனர்.

325 மற்றும் 381 நம்பிக்கை அறிக்கைகளிடையான வேறுபாடுகள்[தொகு]

முதல் நிசாயா பொதுச்சங்கம் (325) முதல் கான்ஸ்டாண்டிநோபுள் பொதுச்சங்கம் (381)
ஒரே கடவுளை நம்புகிறோம்; காண்பவை, காணாதவை அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. ஒரே கடவுளை நம்புகிறோம்; வானமும் பூமியும், காண்பவை, காணாதவை அனைத்தும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
தந்தையிடமிருந்து கடவுளின் மகனாக (சாராம்சமாக) தோன்றிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக தோன்றினார். இவர் தோன்றியவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக தோன்றிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து தோன்றினார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக தோன்றினார். இவர் தோன்றியவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருளானவர்.
(விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை) அனைத்தும் இவர் வழியாகவே படைக்கப்பட்டன; இவர் வழியாகவே அனைத்தும் படைக்கப்பட்டன;
மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் இறங்கி வந்து, உடல் எடுத்து மனிதரானார். மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
இவர் பாடுபட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, விண்ணகம் சென்றார்; நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்;
அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட வரவிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மகிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்;
அவரது அரசுக்கு முடிவு இராது.
தூய ஆவியையும் நம்புகிறோம். தந்தையிடமிருந்து புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியையும் நம்புகிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.
ஒரே புனித கத்தோலிக்க [உலகளாவிய] அப்போஸ்தலிக்க [திருத்தூதர்கள் வழிவந்த] திருச்சபையை விசுவசிக்கிறோம். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கையும் [ஞானஸ்நானம்] ஏற்றுக்கொள்கிறோம். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறோம். ஆமென்.

தூய ஆவியின் புறப்பாடு பற்றிய கருத்து வேறுபாடு[தொகு]

கி.பி. 381இல் வடிவமைக்கப்பட்ட "நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை" கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இலத்தீன் வழிபாட்டு முறை சார்ந்த திருச்சபைகளால் சிறிது மாற்றப்பட்டது. அதாவது "தூய ஆவி தந்தையிடமிருந்து புறப்படுகிறார்" என்னும் பாடம் "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார்" என்று மாற்றப்பட்டது. இம்மாற்றம் கிறித்தவ திருச்சபை வரலாற்றில் "Filioque controversy" (மகன் குழப்பம்) என்று அழைக்கப்படுகிறது[5].

"Filioque" என்னும் இலத்தீன் சொல் "மகனிடமிருந்தும்" (and [from] the Son) எனப்பொருள்படும். தந்தைக் கடவுளே அனைத்திற்கும் ஊற்றாவார் என்றும் அவரோடு இணையான விதத்தில் கடவுள் தன்மை கொண்டு, தெய்வீக ஆள்களாக விளங்குகின்ற மகனும் (இயேசு கிறித்து) தூய ஆவியும் காலங்களுக்கு முன்னரே அவரிடமிருந்து "புறப்படுகின்றனர்" (proceed) என்றும் "நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை" எடுத்துக் கூறியிருந்தது. இதைச் சற்றே விரித்து "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார்" என்று இலத்தீன் வழிபாட்டு சபைகள் விளக்கம் தந்தன. அத்தகைய விளக்கம் சரியல்ல என்று கீழை மரபுவழித் திருச்சபை கருதியது. இதனால் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது ஒரு பெரிய பிளவுக்கு வழிகோலியது.

நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை (கி.பி. 381): முழு வடிவம்[தொகு]

இந்த நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையால் இன்று ஞாயிறு மற்றும் பெருவிழாக்களில் கொண்டாடப்படும் திருப்பலியில் அறிக்கையிடப்படுகிறது. "உரோமைத் திருப்பலிப் புத்தகம்" (Roman Missal) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க வழிபாட்டு நூலில் காணப்படுகின்ற பாடம் இதோ:

  • ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே.
  • சர்வேசுரனின் ஏக சுதனாய்ச் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர்.
  • இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
  • மானிடரான நமக்காகவும், நம் மீட்பக்காகவும் வானகமிருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
  • மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
  • சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.
  • அவரது அரசுக்கு முடிவு இராது.
  • பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே.
  • ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வழிபாட்டின்போது அறிக்கையிடப்படுகின்ற மற்றொரு அறிக்கை "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை" அல்லது "அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை" (Apostles' Creed) என்று அழைக்கப்படுகிறது. திருப்பலி தவிர, செபமாலை, சிலுவைப்பாதை, திருமுழுக்கு வழங்குதல் போன்ற வழிபாடுகளிலும் இந்த அறிக்கை உரைக்கப்படுகிறது.

"திருப்பலிப் புத்தகம்" தரும் பாடம் இதோ:

அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை: பழைய தமிழ்ப் பெயர்ப்பு[தொகு]

  • பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
  • அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
  • இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
  • போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
  • பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
  • பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
  • அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
  • பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
  • பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
  • அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
  • பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
  • சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
  • நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். - ஆமென்.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு[தொகு]

மேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ:

  • விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த /

எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.

  • அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர்

இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.

  • இவர் தூய ஆவியாரால் கருவாகி /

தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

  • பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
  • பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் /

இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

  • விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய /

கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

  • அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /

தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

  • தூய ஆவியாரை நம்புகிறேன்.
  • தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /
  • புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
  • பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
  • உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
  • நிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.

ஆதாரங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைசின்_விசுவாச_அறிக்கை&oldid=1596341" இலிருந்து மீள்விக்கப்பட்டது